தற்போதைய செய்திகள்

கர்நாடகம் அணைகளில் திறக்கப்பட்ட தண்ணீர் தமிழக வந்தடைந்தது

6th Aug 2020 12:47 PM

ADVERTISEMENT


பென்னாகரம்: கர்நாடகம் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு விநாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. 

கர்நாடகாவில் உள்ள குடகு மாண்டியா சாம்ராஜ் நகர் உள்ளிட்ட பகுதி மற்றும் கேரளம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கர்நாடகத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் கபினி அணையில் இருந்து 50 ஆயிரம் கன அடியும் , கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 5712 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் வியாழக்கிழமை காலை 11 மணி அளவில் தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் வந்தடைந்தது. 

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் நீரின் அளவானது வியாழக்கிழமை காலை நிலவரப்படி விநாடிக்கு 4700 கன அடியாக இருந்த தண்ணீரின் அளவுகள், 11 மணி நிலவரப்படி விநாடிக்கு 6500 அடியாக அதிகரித்து வந்துகொண்டிருந்தது. மேலும் 12 மணி நிலவரப்படி தண்ணீரின் அளவை அதிகரித்து விநாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக அதிகரித்து தற்போது வந்து கொண்டிருக்கிறது. 

ADVERTISEMENT

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் பிரதான அருவி மெயின் அருவி சினி அருவி, ஐவார் பாணி மற்றும் ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுகிறது. கர்நாடக அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தற்போது பெய்து வரும் மழையின் அளவு குறைந்துள்ளதால் கபினி அணையில் இருந்து 43,933 கன அடியாகவும் கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து 3233 கன அடியாக தண்ணீர் குறைத்து திறக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவுகளை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 

கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல்லில் இருந்து சுமார் ஐந்து மணி நேரத்தில் மேட்டூர் அணையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT