தற்போதைய செய்திகள்

கரோனா இல்லாத ஈரோடு மாவட்டம்: ஆட்சியர், எஸ்.பி-க்கு அமைச்சர்கள் வாழ்த்து

29th Apr 2020 11:45 AM

ADVERTISEMENT

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 69 பேரும் குணமடைந்துள்ளதை அடுத்து கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக ஈரோடு மாறியுள்ளது.

தமிழகத்திலேயே கரோனா தொற்று இல்லாத முதல் மாவட்டமாக மாற்றிக்காட்டியதற்காக ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.சக்திகணேசன் ஆகியோருக்கு அமைச்சர்கள் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினர்.

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த இருவருக்குத்தான் ஈரோடு மாவட்டத்தில் முதன்முதலில் கரோனா தொற்று உறுதியானது. மார்ச் 29-ஆம் தேதி கரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 6 ஆக இருந்த நிலையில், ஏப்ரல் 1-ஆம் தேதி 20 -ஆகவும், 5-ஆம் தேதி 28 -ஆகவும், 8-ஆம் தேதி 32 -ஆகவும் உயர்ந்தது.  9-ஆம் தேதி ஒரே நாளில் 26 பேருக்கு நோய் தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 58 -ஆக உயர்ந்தது. 5-ஆம் தேதி 70 -ஆக உயர்ந்தது. அதன்பின்னர் கடந்த 14 நாட்களாக தொற்று கண்டறியப்படவில்லை.

மறுபுறம் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்கள் இருகட்ட சோதனைக்குப் பின்னர் படிப்படியாக குணமடைந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த மூவர் உள்ளிட்ட 65 பேர் குணமடைந்த நிலையில், எஞ்சியிருந்த 4 பேரும் குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ளனர். காரோனா பாதிப்படைந்த பெருந்துறையைச் சேர்ந்த முதியவர் மட்டும் உயிரிழந்துள்ளார்.

ADVERTISEMENT

தில்லி சென்று திரும்பியவர்களை அடையாளம் காணுதல், அவர்களுக்கு நெருக்கமாக இருந்தவர்களைக் கண்டறிவதில் காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து தீவிரமாக செயல்பட்டன.

மருத்துவக்குழுக்கள் மூலம் பரிசோதனை மேற்கொண்டது, தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியேறாதவாறு காவல்துறை பாதுகாப்பு என்ற இணைந்த செயல்பாட்டால் கரோனா தொற்று பரவல் தடுக்கப்பட்டது. மேலும், அரசின் அனைத்துத் துறையினரும் ஊரடங்கை அமல்படுத்துவதில் தீவிரம் காட்டினர்.

ஈரோடு மாவட்டத்தில் கரோனா நோய் பரவல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டதற்கு முழுமையான காரணமாக இருந்த இருவர் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், காவல் கண்காணிப்பாளர் எஸ்.சக்திகணேசன். இருவரையும் பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் நினைவுப்பரிசு வழங்கி பாராட்டினர்.

இதனிடையே மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் இருவரையும் கிரிக்கெட் வீரர்கள் போல் சித்தரித்து, கிரிக்கெட் வீரர் பந்தை பவுண்டரிக்கு அடிப்பது போன்று சமூக வலைதளங்களில் வரும் புகைப்படம் மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT