யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் இருவருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
உலகம் முழுக்கத் தீவிரமாகப் பரவி வரும் கொரோனா தொற்றுக்கு இதுவரை சுமார் 37,000-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருக்கின்றனர். இந்தியாவில் கடந்த திங்கள் கிழமை நிலவரப்படி கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள் 1,251 என்றும் அதில் 32 உயிரிழப்புகள் என்றும் மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
புதுச்சேரியின் பிராந்தியங்களில் ஒன்றான மாஹேவைச் சேர்ந்த 68 வயது மூதாட்டி ஒருவர் அபுதாபியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று வந்தவருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. மாஹே அரசு மருத்துவமனையில் அவருக்கு அளிக்கப்பட்ட தொடர் சிகிச்சையின் காரணமாக அவர் முழுமையாக குணமடந்து வீடு திரும்பினார். அதையடுத்து புதுச்சேரி கரோனா தொற்று இல்லாத மாநிலமாக இருந்தது.
இந்நிலையில் தில்லி மேற்கு நிஜாமுதீனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தப்லீக் ஜமாத்தில் (Tablighi Jamaat) கடந்த மார்ச் மாதம் 13 முதல் 15-ம் தேதி வரை நடைபெற்ற கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
அதையடுத்து விழுப்புரம்-புதுச்சேரி எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்ட முதல்வர் நாராயணசாமி, தில்லி நிஜாமுதீன் கூட்டத்திற்குச் சென்றுவிட்டு திரும்பியிருக்கும் புதுச்சேரி அரியாங்குப்பத்தைச் சேர்ந்த 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அதில் இருவருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதையடுத்து, அதிகாலை 2.30 மணிக்கு அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து அரியாங்குப்பம் புறவழிச்சாலையில் அவர்களின் வீடுகள் இருக்கும் ஸ்ரீராம் நகர் மற்றும் சொர்ணா நகர் இரண்டு பகுதிகளும் முழுமையாக சீல் வைக்கப்பட்டன. அந்தப் பகுதியில் இருக்கும் மக்களை வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்றும் உத்தரவிட்டிருக்கிறது போலீஸ்.