தற்போதைய செய்திகள்

விக்கிரவாண்டி, நான்குனேரி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு: ராமதாஸ்

22nd Sep 2019 06:24 PM

ADVERTISEMENT


விக்கிரவாண்டி, நான்குனேரி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு அளிக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

விக்கிரவாண்டி, நான்குனேரி சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் அக்டோபர் 21-இல் நடைபெறுகிறது. இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நான்குனேரி, விக்கிரவாண்டி தொகுதிகள் முறையே திருநெல்வேலி மற்றும் விழுப்புரம் மாவட்டத்துக்குள் வருகின்றன. இதையடுத்து இந்த இரு மாவட்டங்களுக்கும் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளன.

விக்கிரவாண்டி, நான்குனேரி ஆகிய இரு தொகுதிகளிலும் அதிமுக போட்டியிட முடிவு செய்துள்ளது. நான்குனேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும் போட்டியிடும் என அக்கட்சிகளின் தலைமைகள் அறிவித்துள்ளன.

அதிமுக, திமுக கட்சிகளின் சார்பில் இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் ஓரிரு நாள்களில் அறிவிக்கப்பட உள்ளன. இடைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என  டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் ஆகிய கட்சிகள் இடைத் தேர்தல் குறித்த தங்களது நிலைப்பாட்டை விரைவில் அறிவிக்கும் எனத் தெரிகிறது.

ADVERTISEMENT

இந்த இரு தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கல் நாளை திங்கள்கிழமை (செப்.23) தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய செப்டம்பர் 30 கடைசி நாள். வாக்குப் பதிவு அக்டோபர் 21-இல் நடைபெறுகிறது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதிமுக தலைமையகத்தில் நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை விருப்பமனு பெறப்படுகிறது. விக்கிரவாண்டி, நாங்குநேரி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட இதுவரை 27 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். விருப்பமனு அளித்தவர்களிடம் நாளை மாலை நேர்காணல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விக்கிரவாண்டி, நான்குனேரி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றிக்கு பாமக முழுமையாக பாடுபடும் என தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT