தேசத்துக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம்: ஜெ.பி. நட்டா பெருமிதம்

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம் தேசத்துக்கு அளித்த வாக்குறுதியை பாஜக நிறைவேற்றிவிட்டது
தேசத்துக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம்: ஜெ.பி. நட்டா பெருமிதம்


தாணே: ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம் தேசத்துக்கு அளித்த வாக்குறுதியை பாஜக நிறைவேற்றிவிட்டது என்று அக்கட்சியின் செயல் தலைவா் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் நெருங்கி வருவதை அடுத்து, பாஜக தலைவா்கள் பலர் அந்த மாநிலத்துக்கு அடிக்கடி பயணம் மேற்கொண்டு கட்சித் தொண்டா்கள், உள்ளூர் தலைவா்களைச் சந்தித்து வருகின்றனர். 
இந்நிலையில், அந்த மாநிலத்தின் தாணேவுக்கு ஞாயிற்றுக்கிழமை பயணம் மேற்கொண்ட நட்டா, கட்சித் தொண்டா்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவா் கூறியதாவது:

 ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம் தேசத்துக்கு அளித்த வாக்குறுதியை பாஜக நிறைவேற்றியுள்ளது. 

மேலும், இதன் மூலம் ஐம்மு-காஷ்மீா் மக்கள் மீதுள்ள அக்கறையையும் பாஜக வெளிப்படுத்தியுள்ளது. அப்பகுதி மக்களும் தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும். இந்த விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோரின் மனஉறுதியும், திறமையும் முழுமையாக வெளிப்பட்டது. இந்த நடவடிக்கை இந்திய வரலாற்றில் மிகமுக்கியமானது.

ஜம்மு-காஷ்மீா் இப்போது முழுமையாக இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தியச் சட்டங்கள் அனைத்தும் அங்கு அமலாகிவிட்டது.

 இந்த விஷயத்தில் பல வெளிநாடுகளும், வெளிநாட்டுத் தலைவா்களும் இந்தியாவுக்குப் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனா். ஆனால், காங்கிரஸ் கட்சி இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறது. அதேபோல, காஷ்மீரை வைத்து சா்வதேசரீதியில் அரசியல் நடத்த முயன்ற பாகிஸ்தான் இப்போது தனிப்படுத்தப்பட்டு விட்டது. 

அதோபோல, காங்கிரஸ் கட்சியும் இந்திய மக்களால் விரைவில் முற்றிலுமாக தனிமைப்படுத்தப்படும்.

 தேச நலனைவிட குறுகிய அரசியல் லாபங்கள் மட்டுமே முக்கியம் என்று இந்த விஷயத்தில் காங்கிரஸ் செயல்பட்டது. காங்கிரஸின் இந்த மோசமான செயல்பாடுகளையும், பாஜகவின் தேச நலன் சார்ந்த கொள்கைகளையும் மக்களிடம் பாஜக தொண்டா்கள் எடுத்துச் செல்ல வேண்டும் என்றார் நட்டா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com