தற்போதைய செய்திகள்

நாளை ஆசிரியர் தினம்: முதல்வர் ஆசிரியர் தின வாழ்த்து

4th Sep 2019 12:20 PM

ADVERTISEMENT


நாளை ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி, ஆசிரியர்களுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழ்நாட்டில் பிறந்து, ஆசிரியராகப் பணிபுரிந்து, தமது நற்சிந்தனையாலும், நல்லொழுக்கத்தினாலும் மிக உயர்ந்து, நாட்டின் உயரிய பதவியாகிய குடியரசுத் தலைவர் பதவியினை வகித்து, ஆசிரிய பணிக்குப் பெருமை தேடித்தந்த டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆம் நாளை “ஆசிரியர் தினமாக” நாம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி மகிழ்ச்சி அடைகிறோம்.

“கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு" என்கிற வள்ளுவர் வாக்கின்படி, ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும். நாட்டில் அறியாமையையும், வறுமையையும் ஒழிக்கக் கூடிய ஒரு கருவி உண்டு என்றால் அது கல்வி தான். அந்தக் கல்விச் செல்வத்தை மாணவர்களுக்கு வழங்கும் பெருமையினைப் பெற்றவர்கள் ஆசிரியப் பெருமக்கள் என்றால் அது மிகையாகாது.

பெற்றோர்களுக்கு அடுத்த படியாகத் தம்மிடம் பயிலும் மாணவக் கண்மணிகளிடம் அன்பு காட்டி, அரவணைத்து, வழிகாட்டுவதன் மூலமே அவர்கள் சிறந்த கல்வியைப் பெற்று, சமுதாய வளர்ச்சிக்கு உதவிட முடியும் என்பதை அறிந்த டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் அதன்படி செயல்பட்டு, ஆசிரியப் பணிக்கு மிகப்பெரிய பெருமையைத் தேடித் தந்தார். அப்பெருமகனார் காட்டிய வழியில் ஆசிரியப் பெருமக்கள் அனைவரும் தங்களுடைய மாணாக்கருக்கு நல்ல குறிக்கோள்களையும், சமுதாய உணர்வுகளையும் கற்பித்து, சிறந்த கல்விப் பணியாற்றிட வேண்டும்.

ADVERTISEMENT

அறியாமையையும், வறுமையையும் ஒழிக்கும் கல்வி செல்வத்தை மாணவர்களுக்கு வழங்கும் பெருமையை பெற்றவர்கள் ஆசிரியர்கள் என்றும், தமிழக அரசின் எண்ணற்ற திட்டங்களை செம்மையான முறையில் பயன்படுத்தி, சிறந்த மாணவர்களை உருவாக்கி வரும் ஆசிரியப் பெருமக்களின் சேவை மெச்சத்தக்கது. 

மாணவ சமுதாயத்தின் சிறப்பான வாழ்விற்கு அல்லும் பகலும் உழைத்திடும் ஆசிரியர் பெருமக்களுக்கு "ஆசிரியர் தின" வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். 

Tags : Teacher's Day Chief Minister Edappadi Palanisamy Greetings TN CM teachers ஆசிரியர் தினம் முதல்வர் பழனிசாமி வாழ்த்து ஆசிரியர் தின வாழ்த்து
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT