தற்போதைய செய்திகள்

அறிவார்ந்த சமுதாயம் அமைக்க ஆசிரியர்கள் பாடுபட வேண்டும்: ராமதாஸ் ஆசிரியர் தின வாழ்த்து

4th Sep 2019 12:02 PM

ADVERTISEMENT


அறிவார்ந்த சமுதாயம் அமைக்க ஆசிரியர்கள் பாடுபட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள ஆசிரியர் தின வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், மாணவர்களை ஏற்றி விடும் ஏணியாகத் திகழும் ஆசிரியர்கள் நாளைக் கொண்டாடும் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏழைக் குடும்பத்தில் பிறந்து, ஆசிரியராக பணி செய்து, இந்தியாவின் முதல் குடிமகன் என்ற உன்னத நிலையை அடைந்தவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்.  ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியர் என்று போற்றப்படும் அவரது பிறந்த நாள் தான் ஆசிரியர் நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் தமிழக அளவிலும்,  தேசிய அளவிலும் நல்லாசிரியர் விருது பெறும் அனைத்து ஆசிரியர்களுக்கும்  உளமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு நாட்டிற்கு ஆயிரம் சிறப்புகள் இருந்தாலும், அந்த நாடு கல்வியில் சிறந்து விளங்கினால் மட்டும் தான் பிற உலக நாடுகளால் மதிக்கப்படும். அத்தகைய மதிப்பை இந்தியாவுக்கு தேடித் தரும் மதிப்பு மிக்க செல்வமாக திகழ்பவர்கள் ஆசிரியர்கள் தான். கவலைகள் எதுவும் இல்லாமல், மகிழ்ச்சியான மனநிலையில் ஆசிரியர்கள் இருக்கும் நாட்டில் தான் கல்வி வளம் பொங்கிப் பெருகும் என்பது உண்மை.

ADVERTISEMENT

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் பாடத்திட்ட மாற்றம், தேர்வுமுறை சீர்திருத்தம் என்பன உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அவை வரவேற்கப்பட வேண்டியவை. அதேநேரத்தில் ஆசிரியர்களின் திறனை மேம்படுத்த அவர்களுக்கு சிறப்பான பயிற்சி வழங்குவதுடன், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதும் அவசியம் ஆகும். இவற்றை செய்து முடிப்பதுடன், ஆசிரியர்களின் உதவியுடன் தமிழகத்தில் தமிழ் வழிக் கல்வியை வழங்கவும் தமிழக அரசை வலியுறுத்தி, சாதிப்பதற்காக இந்த நல்ல நாளில் தமிழக மக்களாகிய நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என கூறியுள்ளார்.

Tags : ஆசிரியர் தின வாழ்த்து ராமதாஸ் Teachers day
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT