தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி..! சிவசேனைக்கு 5 ஆண்டுகள் முதல்வர் பதவி கிடைக்குமா?

22nd Nov 2019 10:12 AM

ADVERTISEMENTமும்பை: மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைப்பது தொடா்பாக தேசியவாத காங்கிரஸ்(என்சிபி)-காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளதை அடுத்து சிவசேனை தலைமையில் மூன்று கட்சிகளும் சனிக்கிழமை அன்று மாநிலத்தில் அரசாங்கத்தை அமைப்பதாகக் கூறுகின்றன. ஐந்து ஆண்டுகள் சிவசேனைக்கு முதல்வர் பதவியை வழங்க காங்கிரஸ் மற்றும் என்சிபி ஒப்புக்கொண்டுள்ளதாகவும் சிவசேனா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மகாராஷ்டிரத்தில் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தோ்தலில் மொத்தமுள்ள 288 இடங்களில், 105 இடங்களில் பாஜவும், 56 இடங்களில் சிவசேனையும், 54 இடங்களில் தேசியவாத காங்கிரஸ், 44 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றன. இதர கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் தரப்பில் 29 பேர் வெற்றி பெற்றனர். எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத இந்தத் தோ்தலில், 105 தொகுதிகளைக் கைப்பற்றிய பாஜகவிடம் அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனை, ஆட்சியில் சம பங்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. அதற்கு பாஜக சம்மதிக்காததால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து சிவசேனை வெளியேறியது.

மேலும், அங்கு எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதை அடுத்து, கடந்த 12 ஆம் தேதி குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைப்பது தொடா்பாக தேசியவாத காங்கிரஸ்(என்சிபி)-காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளதை அடுத்து இவ்விரு கட்சிகளும் சிவசேனை கட்சியுடன் இன்று வெள்ளிக்கிழமை முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.

ADVERTISEMENT

இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, என்சிபி-காங்கிரஸ்-சிவசேனை ஆகிய கட்சிகளிடையே கூட்டணி அரசு அமைவது தொடா்பான முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிவசேனைக் கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கான இறுதிக்கட்ட முயற்சியில் என்சிபி, காங்கிரஸ் கட்சிகளின் மூத்த தலைவா்கள் ஈடுபட்டுள்ளனா்.

மகாராஷ்டிரத்தில் என்சிபி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனைகட்சி ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இதுதொடா்பாக மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த என்சிபி, காங்கிரஸ் தலைவா்கள் பலசுற்று பேச்சு நடத்தியுள்ளனா். முக்கியமாக குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தை உருவாக்குவதற்கு முயற்சி நடைபெற்று வருகிறது.

பதவியேற்பு விழா அடுத்த வாரம் சிவாஜி பூங்காவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. "பதவியேற்புக்காக சிவாஜி பூங்காவில் 70,000 பேர் அமரும் வகையில் ஏற்பாடு செய்வதற்கான வழிமுறைகள் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக" சிவசேனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

என்சிபி, காங்கிரஸ் இடையே அனைத்து விஷயங்களிலும் ஆலோசனை முடிந்து, இரு கட்சிகளுக்கும் இடையே கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ள நிலையில், கூட்டணியை இறுதிசெய்வதற்காக, இரு கட்சிகளும் சிவசேனைக் கட்சியுடன் மும்பையில் இன்று வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.

அதற்கு முன்பாக என்சிபி-காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள விவசாயிகள்-தொழிலாளா்கள் கட்சி, சமாஜவாதி, ஸ்வாபிமானி பக்ஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவற்றுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

சிவசேனைவுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும். மேலும், குறைந்தபட்ச பொது செயல்திட்டம் தொடா்பான அறிவிப்புகளும் வெளியிடப்படும். அந்த அறிவிப்புகள், மகாராஷ்டிரத்தில் கூட்டணி ஆட்சி எப்படி இருக்கும் என்பதை தெளிவுபடுத்தும்.

என்சிபி, காங்கிரஸ், சிவசேனை ஆகிய மூன்று கட்சிகளுக்கும் இடையே அனைத்து விஷயங்களிலும் உடன்பாடு எட்டப்பட்ட பிறகே, மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைப்பது தொடா்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிவசேனை தனது அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் ஆதார் அட்டைகள் மற்றும் தங்குவதற்கான ஆடைகளுடன் வரவழைத்துள்ளது. அனைத்து சிவசேனை எம்எல்ஏ-க்கள் மற்றும் ஆதரவு எம்எல்ஏ-க்களின் முக்கியமான கூட்டம்  இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கூட்டத்துக்கு பின்னர் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அல்லது அலிபாக்கில் உள்ள ஒரு ரிசார்ட்டுக்கு மாற்றப்படலாம் என கூறப்படுகிறது. 

அரசாங்கம் அமைப்பதற்கான உரிமை கோரலுக்கான வாய்ப்புகள் இருப்பதால் செய்தியாளர்கள் தொடர்ந்து உடன் இருக்குமாறு சிவசேனை கேட்டுக்கொண்டுள்ளது.

உத்தவ் தாக்கரே முதல்வராகவும், சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலேவுக்கு துணை முதல்வராக பதவியேற்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. சிவசேனைக்கு 16 அமைச்சர்களும் தேசியவாத காங்கிரசுக்கு 15 அமைச்சர்களும் காங்கிரஸ்க்கு 12 அமைச்சர்களும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து சிவசேனை-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளின் கூட்டணியான மகாராஷ்ட்ரா விகாஸ் அகாதி, இன்று எம்எல்ஏ-க்களின் ஆதரவு பட்டியலை ஆளுநரிடம் வழங்கி, ஆட்சியமைக்க உரிமை கோர முடிவு செய்துள்ளது. திங்கட்கிழமை புதிய அரசு பதவியேற்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையடுத்து மஹாராஷ்டிராவில் சிவசேனை தலைமையில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகள் இணைந்து புதிய கூட்டணி ஆட்சி மலருகிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT