கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற கல்வித்தகுதி தேவையில்லை என தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
மத்திய மோட்டார் வாகன சட்டப்படி கனரக வாகனங்களை ஓட்ட விரும்புவோர் 'ஓட்டுநர் உரிமம்' பெற குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு கல்வி சான்றிதழை விண்ணப்பத்துடன் இணைப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கனரக வாகனங்களின் தேவை அதிகரித்துள்ள நிலையில் எட்டாம் வகுப்பு கூட தேர்ச்சி பெறாதவர்கள் கூட கனரக வாகனங்களை ஓட்டும் நிலை அதிகரித்துள்ளது. இதனால் ஓட்டுநர் பற்றாக்குறை நீடிக்கிறது. எனவே கனரக வாகன உரிமையாளர்கள் 'கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெறும் கல்வித்தகுதியை நீக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், புதிய மோட்டார் வாகன சட்டத்தில் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான கல்வித் தகுதியை நிர்ணயிக்கும் சட்ட விதியை நீக்கி செப். 23 இல் புதிய அறிவிப்பை வெளியிட்டது.
அதனைத் தொடர்ந்து தமிழக போக்குவரத்து துறை ஆணையர் சமயமூர்த்தியும் 'கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு கல்வித்தகுதி சான்றிதழ்களை கேட்க வேண்டாம் என உத்தரவிட்டுள்ளார்.
இதை பொது மக்களுக்குத் தெரிந்துகொள்ளும் வகையில் அறிவிப்பு பலகையில் ஒட்டும் படியும் வட்டார போக்குவரத்து அலுவல அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.