தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதலாமாண்டு நினைவு தினம்: சுப. உதயகுமார் கைது

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் போலீஸார் நடத்திய  துப்பாக்கிச்சூட்டில் பலியானோருக்கு
தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதலாமாண்டு நினைவு தினம்: சுப. உதயகுமார் கைது


தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் போலீஸார் நடத்திய  துப்பாக்கிச்சூட்டில் பலியானோருக்கு இன்று முதலாவது ஆண்டு நினைவு அஞ்சலி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தென்மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

தூத்துக்குடியில் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் சூற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் தொடர்ச்சியாக 100 நாள்கள் போராடி வந்தனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவும், மக்களை பாதுகாக்கவும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அரசு வேடிக்கை பார்த்து வந்தது.

இந்நிலையில், கடந்த மே 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் நடைபெற்ற எதிர்ப்பு போராட்டத்தின்போது, போராடிய பொதுமக்கள் மீது காவல்துறையினர் ஈவு இரக்கமின்றி தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீச்சு மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். அரசு, தனியார் வாகனங்கள் எரிக்கப்பட்டது.

பொது மக்கள் வன்முறையில் ஈடுபட்டதால் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் தற்காப்புக்காகவும், சூழ்நிலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. துப்பாக்கி சூடு தொடர்பாக இதுவரை எந்தவொரு காவல்துறை அதிகாரிகளும் கைது செய்யப்படவோ அல்லது குற்றம்சாட்டப்படவில்லை.

இந்நிலையில், இன்று தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின், முதலாவது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுவதால் அசம்பாவிதங்கங்களை தவிர்க்கும் விதமாக, தூத்துக்குடி மாநகரில் சுமார் 2,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். 

தென் மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன், நெல்லை சரக டிஐஜி கபில் குமார், மாவட்ட எஸ்பி முரளிரம்பா தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட அரசு மருத்துவமனை, சிப்காட் வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீஸார் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், தூத்துக்குடியில் உள்ள தோமையார் கிறிஸ்தவ ஆலயத்தில் இன்று காலை திருப்பலி முடிந்தவுடன், துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு, மெழுகுவர்த்தி ஏந்தியும், தங்களது உடைகளில் கருப்பு பேட்ஜ் அணிந்தும் அஞ்சலி செலுத்தினர். பாத்திமா நகரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் திருப்பலிக்கு பின், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் துப்பாக்கிச் சூட்டில் பலியான 13 பேருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதேபோல தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகள் சார்பில் அஞ்சலி செலுத்த திட்டமிடப்பட்டது. இதற்கு மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் அனுமதி மறுத்துள்ளது. 

இதனிடையே, தூத்துக்குடிக்கு நினைவேந்தல் செலுத்துவதற்காக நாகர்கோவிலில் இருந்து புறப்பட்ட பச்சைத் தமிழகம் கட்சி தலைவரும், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளருமான சுப.உதயகுமாரை, நாகர்கோவில் கோட்டாறு காவல் நிலைய போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்துள்ளனர். 
சுப.உதயகுமாரை அவரது வீட்டில் வைத்து கைது செய்துள்ள போலீஸார் அவரை கோட்டாறு காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். 

அஞ்சலி நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் தூத்துக்குடி மாநகரம் முழுவதும் பதற்றத்தோடு காணப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com