10 ரூபாய் நாணயம் சர்ச்சை: சுற்றறிக்கை அனுப்பிய போக்குவரத்து கிளை மேலாளர் தற்காலிக பணி நீக்கம்

10 ரூபாய் நாணயம் சர்ச்சை: சுற்றறிக்கை அனுப்பிய போக்குவரத்து கிளை மேலாளர் தற்காலிக பணி நீக்கம்

10 ரூபாய் நாணயங்களை பயணிகளிடம் இருந்து வாங்குவதை தவிர்க்குமாறு போக்குவரத்து நடத்துநர்களுக்கு சுற்றரிக்கை அனுப்பிய அரசு போக்குவரத்து


10 ரூபாய் நாணயங்களை பயணிகளிடம் இருந்து வாங்குவதை தவிர்க்குமாறு போக்குவரத்து நடத்துநர்களுக்கு சுற்றரிக்கை அனுப்பிய அரசு போக்குவரத்து கழகத்தின் திருப்பூர் கிளை மேலாளரை தற்காலிக பணி நீக்கம் செய்து கோவை போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

இந்திய ரிசர்வ் வங்கி, தனது பவளவிழா ஆண்டைக் கொண்டாடும் வகையில், கடந்த 2011-ம் ஆண்டு புதிய 10 ரூபாய் நாணயங்களை வெளியிட்டது. வெளியிட்ட தினத்தில் இருந்தே தமிழகத்தின் பல ஊர்களில் வணிகர்கள், போக்குவரத்து நடத்துநர்கள் பெற்றுக் கொள்வதில்லை. விரைவில் இந்த நாணயங்கள் செல்லாமல் போய் விடும் என்ற புரளியே முதல் குற்றச்சாட்டாக உள்ளது. இதையடுத்து 10 ரூபாய் நாணயங்கள் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என முதன்மை வங்கியான ரிசர்வ் வங்கியும், 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யலாம் என்று உத்தரப்பிரதேச நீதிமன்றம் உத்தரவிட்டும் 10 ரூபாய் நாணயங்கள் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை.

இதனிடையே கடந்த 21 ஆம் தேதி, திருப்பூர் போக்குவரத்துப் பணிமனை இரண்டாவது மண்டலத்தில்,  பேருந்துகளில் பயணிக்கும் மக்களிடம் இருந்து 10 ரூபாய் நாணயங்கள் பெறுவதை முடிந்தவரை தவிர்க்குமாறும், மறந்து வாங்கி விட்டாலும் அதனை பிற பயணிகளிடம் கொடுத்து மாற்றி விடுமாறும் திருப்பூர் கிளை போக்குவரத்துக் கழக மேலாளர் தனபாலின் சுற்றறிக்கை ஒட்டப்பட்டிருக்கிறது. இதை யாரோ புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக, அதிர்ச்சியடைந் பலரும் 10 ரூபாய் நாணயங்களை வாங்கக் கூடாது என்று உத்தரவு போட உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? என்று பலரும் கொந்தளிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இதனிடையே 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பது குற்றம் என்று வங்கி அதிகாரிகள் எச்சரித்துள்ளதுடன்,  ரூபாய் தாள்களை விடுத்து, நாணயங்களைக் கொண்டு வருவது குறித்து அரசு பரிசீலித்து வரும் நிலையில், இப்படிப்பட்ட ஒரு அறிவிப்பு தேவையற்றது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய அந்த சுற்றறிக்கையை திருப்பூர் போக்குவரத்துப் பணிமனை திரும்பப் பெற்றுக்கொண்டது. இதுகுறித்து திருப்பூர் போக்குவரத்துப் பணிமனை இரண்டாவது மண்டல மேலாளர் தனபால், ``வங்கியில் பணம் செலுத்தும்போது ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்கவே அந்த சுற்றறிக்கை ஒட்டப்பட்டது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அது பொதுமக்களால் தவறாக புரிந்துகொள்ளப்பட்டு, அச்சத்தை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்ததால், அந்த சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டது”  என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய கோவை போக்குவரத்து கழகம், போக்குவரத்து கழகத்திடம் முன் அனுமதி பெறாமல் சுற்றறிக்கை அனுப்பிய கிளை மேலாளர் தனபாலை தற்காலிக பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com