தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணை நீர்மட்டம் 47.67 அடியாக உயர்வு

31st Jul 2019 09:31 AM

ADVERTISEMENT


கர்நாடக அணைகளில் இருந்து கூடுதல் நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 47.67 அடியாக உயர்ந்துள்ளது. 

கர்நாடக  மாநிலத்தில் காவிரியின் நீர்ப் பிடிப்பு பகுதி மற்றும் கேரளத்தின் வயநாடு பகுதிகளில் தென்மேற்குப் பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால்,   கர்நாடகத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 
  
இதனால் அந்த அணைகளின் பாதுகாப்புக் கருதி உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த உபரி நீரானது, தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.  
 
காவிரி ஆற்றில் உபரிநீர் வரத்து கடந்து மூன்று நாள்களாக நொடிக்கு 8,500 கனஅடியாக இருந்து வந்தது. இது  செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி நொடிக்கு 9,500 கன அடியாகவும், மாலை நிலவரப்படி சற்று நீர்வரத்து அதிகரித்து, நொடிக்கு 9,800 கன அடியாகவும் இருந்து வந்தது. 

இந்நிலையில், இன்று புதன்கிழமை காலை நிலவரப்படி நொடிக்கு 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் ஐந்தருவி, பிரதான அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுகிறது. 

இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 9200 கன அடி அதிகரித்து, நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 120 அடி கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று புதன்கிழமை 47.67 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 16.37 டி.எம்.சி ஆக உள்ளது. மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 9,200 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், குடிநீர்த் தேவைக்காக 1,000 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT