தற்போதைய செய்திகள்

உன்னாவ் பெண்ணின் கார் விபத்துக்கு பயன்படுத்தப்பட்ட லாரி சமாஜ்வாடி தலைவருக்கு சொந்தமானதா?

30th Jul 2019 12:58 PM

ADVERTISEMENT


லக்னௌ: உன்னாவ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் சென்ற கார் விபத்துக்குள்ளான விவகாரம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றுமாறு உத்தரபிரதேச அரசு மத்திய அரசுக்கு முறையான கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ள நிலையில், விபத்துக்குள்ளான லாரி சமாஜ்வாடி தலைவர் நந்து பாலுக்கு சொந்தமானது என தெரிவந்துள்ளது. 

உன்னாவ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் ரேபரேலி சிறையில் உள்ள தனது உறவினரை சந்திப்பதற்காக குடும்பத்தினர் மற்றும் வழக்குரைஞருடன் ஞாயிற்றுக்கிழமை காரில் சென்றுகொண்டிருந்தபோது லாரி ஒன்று மோதியதில் விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணம் செய்த அவரது உறவினர்களான ஷீலா (50), புஷ்பா (45) ஆகிய இருவர் உயிரிழந்துவிட்ட நிலையில், அந்தப் பெண்ணும், அவரது வழக்குரைஞரும் படுகாயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

காயமடைந்துள்ள சம்பந்தப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கெனவே குல்தீப் சிங் செங்கார் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், அந்தப் பெண்ணின் உறவினர் அளித்த புகாரின் பேரில் தற்போது பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக உத்தரப் பிரதேச காவல்துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

இதனிடையே, அந்தப் பெண் மற்றும் அவரது குடும்பத்தினரின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த துப்பாக்கிய ஏந்திய ஒரு காவலரும், இரு பெண் காவலர்களும் சம்பவத்தின்போது அவர்களுடன் இல்லை. இதுதொடர்பாக விசாரிக்கப்பட்டு வருவதாகவும், முதலில் விபத்து என எடுத்துக்கொண்டாலும், விபத்தை ஏற்படுத்திய லாரியின் பதிவெண் கருப்பு பெயிண்ட் பூசி மறைக்கப்பட்டிருந்ததாகவும், எனினும், அந்தப் பதிவெண் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

விபத்து விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த எதிர்க்கட்சிகள் தரப்பில் கோரிக்கை வலுத்ததை அடுத்து, கார் விபத்து விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்துவதற்கான முறையான பரிந்துரை கடிதத்தை உள்துறை முதன்மைச் செயலரிடம் உத்தரப் பிரதேச அரசு அளித்துள்ள நிலையில், உன்னாவ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கார் மீது விபத்தை ஏற்படுத்திய லாரி குறித்த விசாரணையில், விபத்தை ஏற்படுத்திய லாரி சமாஜ்வாடி கட்சியின் மாவட்ட தலைவர் நந்து பாலுக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது. 

நந்து பால் சமாஜ்வாடி கட்சியின் ஃபதேபூர் மாவட்ட தலைவராக இருந்து வருகிறார். அவரது மனைவி ராமஸ்ரீ பால் அசோதர் வட்ட பிரமுகராகவும் இருந்து வருகிறார். அவரது மூன்று சகோதரர்களான தேவேந்திர பால், முன்னா பால் மற்றும் திலீப் பால் ஆகியோருக்கு 27 லாரிகள் உள்ளன.

உன்னாவ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் மாமா மகேஷ் சிங், அந்தப் பெண் மற்றும் அவரது குடும்பத்தினரின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த துப்பாக்கிய ஏந்திய ஒரு காவலரும், இரு பெண் காவலர்களும் குற்றம் சாட்டப்பட்ட்டுள்ள பாஜக எம்எல்ஏவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அந்த பெண் குறித்த தகவல்களை அவப்போத அனுப்பி வருவதாக தனது புகாரில் குற்றம் சாட்டியுள்ளார். 

இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை கார் விபத்தில் கொல்லப்பட்ட இருவரின் உடல்கள் இன்று செவ்வாய்கிழமை பலத்த பாதுகாப்புடன் உன்னாவோவில் தகனம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT