தற்போதைய செய்திகள்

சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.20 லட்சம் வரை கிராம வங்கி கடன் வழங்குகிறது: முதல்வர் பழனிசாமி

22nd Jul 2019 02:26 PM

ADVERTISEMENT


சேலம்: கிராம வங்கி சுய உதவிக் குழுக்களுக்கு எவ்வித உத்தரவாதமும் இன்றி ரூ.20 லட்சம் வரை கடன் வழங்குகிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தமிழ்நாடு கிராம வங்கியின் மாநில அளவிலான மாபெரும் வங்கி கடன் வழங்கும் விழா சேலம் பெரியார் பல்கலைகழகம் எதிரே உள்ள மண்டபத்தில் நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசுகையில், தமிழ்நாடு கிராம வங்கிக்கு 50 சதவீதத்தை மத்திய அரசும், 35 சதவீதத்தை ஏதேனும் ஒரு தேசிய வங்கியும், மீதமுள்ள 15 சதவீதத்தை மாநிலம் அரசும் அளிக்கின்றது. 35 சதவீதம் மூலதனம் வழங்கிய தேசிய வங்கி, கிராமிய வங்கிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும்.

குறிப்பாக, வங்கி செயல்பட வேண்டிய முறை, அதற்கான தொழில் நுட்ப உதவிகள், ஆலோசனைகள் வழங்குவதுடன் கிராம வங்கியின் தலைவராகவும், தேசிய வங்கியின் உயர் அதிகாரியே செயல்படுவார்.

வங்கிகள் இணைவது என்பது உலகமயமாக்குதலுக்கு பின் சாதாரண நிகழ்வுகள் என்றாகிவிட்டது. கிராம வங்கிகளும் அதுபோன்று மத்திய அரசால் இணைக்கப்பட்டு வருகின்றது. 196 ஊரக வங்கிகளில் இருந்த நிலைமாறி தற்போது 45 வங்கிகள் உள்ளன.

ADVERTISEMENT

ஆனால், சிறு, குறு வங்கிகள் சேர்ந்து பெரிய வங்கிகளாக உருவானதால் மற்ற தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கும் மற்றும் தனியார் வங்கிகளுக்கும் இணையாக செயல்பட்டு வருகின்றன.

மத்திய அரசும் மாநில அளவிலான ஒரு ஊரக வங்கி என்ற நிலைபாட்டினை செயல்படுத்த முயற்சிகள் எடுத்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாகத்தான் தமிழகத்தில் இருந்த பாண்டியன் கிராம வங்கியும், பல்லவன் கிராம வங்கியும், இணைந்து தமிழ்நாடு கிராம வங்கியாக உருவெடுத்துள்ளது.

பாண்டியன் கிராம வங்கி 9.3.1976 ஆம் ஆண்டு தென் தமிழகத்தில் பிரிக்கப்படாத ராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் தொடங்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த அதியமான் கிராம வங்கியும், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த வள்ளலார் கிராம வங்கியும் 31.8.2006 ஆம் ஆண்டு ஒன்றிணைந்து பல்லவன் கிராம வங்கியாக உதயமானது. இந்த வங்கி சென்னை மாவட்டத்தை தவிர, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுகிறது.

சென்னை நகர பகுதிகளிலும் தமிழ்நாடு கிராம வங்கிகளின் கிளைகள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் தற்சமயம் 630 கிளைகள் உள்ளன. இது வெகுவிரைவில் ஆயிரத்தை அடைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வங்கியை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்த செய்தி உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கின்றது.

தமிழ்நாடு கிராம வங்கியின் தற்போதைய மொத்த வர்த்தகம் ரூபாய் 23 ஆயிரம் கோடிக்கு மேல் உள்ளது. பல வங்கிகள் நஷ்டத்தில் செயல்பட்டு வந்தாலும், பல்லவன் கிராம வங்கியும், பாண்டியன் கிராம வங்கியும் தொடர்ந்து லாபத்தில் இயங்கி வருவதை பார்த்து மகிழ்ச்சி அடைகின்றேன்.

மற்ற வங்கிகளை காட்டியிலும் வாரக்கடன் மிக குறைவு என்பதையும் அறிகிறேன். மற்ற வங்கிகளில் வாரா கடன் 10 சதவீதத்திற்கு மேல் உள்ள நிலையில் தமிழ்நாடு கிராம வங்கியின் வாரா கடன் 1.79 விழுக்காடு என்பது பெருமைக்குரிய வி‌ஷயமாகும்.

இங்கே வந்திருக்கின்ற பெரும்பாலும் ஏழை, எளியோர் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காக இன்றைக்கு பல்வேறு உதவிகளை வங்கிகளின் மூலமாக நாடக்கூடிய அப்படிப்பட்ட நல்ல உள்ளங்களுக்கு இந்த வங்கி பேரூதவியாக செயல்படுகிறது என்று சொன்னால் மிகையாகாது.

வங்கியில் குறைந்த அளவிலான வாராக் கடன் சாமானிய மக்களின் நேர்மைக்கு ஓர் எடுத்துக்காட்டு. இங்கு சுய உதவிக்குழு உறுப்பினர்கள் ஆயிரக்கணக்கில் குழுமி உள்ளீர்கள். சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்குவதில் 99 சதவீதம் வசூலாகிறது என்பதை அறிந்து பெருமைபடுகின்றேன்.

கடன் வாங்கினால் பெரும்பாலும் திருப்பிக் கட்டமாட்டார்கள். ஆனால், இங்கு வருகை புரிந்த சுய உதவிக்குழுவை சேர்ந்தவர்கள் வாங்கிய கடனை 99 சதவீதம் திருப்பி அளித்து வரலாறு படைத்திருக்கின்றனர். வாங்கிய கடனை முறையாக செலுத்தி மேலும் அந்த தொழில் வளர்வதற்கு ஊக்கமும், ஆக்கமும் அளிக்கின்றவர்களுக்கு இந்த வங்கிக்கு உறுதுணையாக இருப்பது பாராட்டுக்குறியது. 

 முதல்வராக இருந்தாலும் வங்கியில் உத்தரவாதம் வாங்கிக்கொண்டுதான் கடன் கொடுப்பார்கள். நான் கூட வீடு கட்டுவதற்கு வங்கியை அணுகியபோது, அதற்கு தேவையான உத்தரவாதத்தை கொடுத்தால் தான், கடன் கொடுப்பதாக தெரிவித்தார்கள். ஆனால் சில சுய உதவிக்குழுக்களுக்கு 20 லட்சம் வரை ரூபாய் எந்தவித உத்தரவாதமும் இல்லாமல் இந்த வங்கி கடன் அளித்துள்ளது உண்மையிலேயே பாராட்டுக்குரியது. 

உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்ற பாரதியின் கூற்றுக்கு இணங்க தமிழ்நாடு கிராம வங்கி விவசாய வளர்ச்சிக்காகவும், கிராமத்தின் வளர்ச்சிக்காகவும் கடன் உதவி வழங்கி வருகிறது. கந்து வட்டி கொடுமையில் இருந்து ஏழை, எளிய மக்களை தமிழக கிராம வங்கி விடுவிக்கிறது என கூறினார்.

மேலும், சேலம் மாவட்டத்தில் இந்த ஆண்டு முதல் அரசு சட்டக் கல்லூரி செயல்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT