விவிஐபி வரிசையில் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் அத்திவரதரை தரிசனம் செய்தது எப்படி?

மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் விவிஐபி வரிசையில் சென்று அத்திவரதரை தரிசனம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விவிஐபி வரிசையில் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் அத்திவரதரை தரிசனம் செய்தது எப்படி?


மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் விவிஐபி வரிசையில் சென்று அத்திவரதரை தரிசனம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அத்திவரதர் பெருவிழாவின் 16-ஆவது நாளான நேற்று செவ்வாய்க்கிழமை, ரோஜா - பச்சை நிறப் பட்டாடையில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் 
அத்திவரதர். இவ்விழாவால் காஞ்சிபுரம் விழாக்கோலம் பூண்டுள்ளதோடு நாள்தோறும் லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை புரிந்து அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர். அவர்களுக்கென மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து பல்வேறு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. தொடர்ந்து, பக்தர்கள் கூட்டம் காலை, மாலை ஆகிய வேளைகளில் அதிகரித்துக் காணப்படுகிறது. பிற்பகல், இரவு வேளைகளில் கூட்டம் மிதமாக உள்ளது. 

அத்திவரதருக்கு செவ்வாய்க்கிழமை ரோஜா நிறத்திலான பட்டாடையுடன் பச்சை நிற அங்க வஸ்திரம் அணிவித்து துளசி, முல்லை, செண்பகப்பூ, மரிக்கொழுந்து, தாமரை ஆகியவற்றால் அத்திவரதருக்கு அலங்காரம் செய்யப்பட்டது. பின்பு, நைவேத்தியம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து, வஸந்த மண்டபத்தையொட்டி உள்ள வரிசைகளில் அத்திவரதரைக் காண பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. 

நாள்தோறும் தரிசனத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டுகிறது. அதிகபட்சமாக நான்கரை மணிநேரத்திலும் குறைந்தபட்சமாக ஒரு மணிநேரத்திலும் அத்திவரதரை பக்தர்கள் தரிசனம் செய்தனர். 

ஆட்சியர் பா.பொன்னையா முக்கியஸ்தர்களுக்கான வரிசையின் நுழைவுப் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை நேரடியாக வந்து ஆய்வு செய்தார். அப்போது, அனுமதிச் சீட்டு மட்டும் வைத்திருப்பவர்கள் முக்கியஸ்தர்கள் வரிசையில் வரலாம் எனவும் மற்றவர்கள் பொது தரிசனப் பாதையில் செல்லலாம் என்றும் அவர் ஒலிபெருக்கியில் அறிவுறுத்தினார். இதையடுத்து, பரிந்துரை மூலம் உள்ளே நுழைய முயன்ற அரசியல் பிரமுகர்கள், காவலர்கள், அரசுத்துறையினர் அனுமதிக்கப்படவில்லை.

முக்கியஸ்தர்களுக்கான வரிசையில்  கதர்த்துறை அமைச்சர் பாஸ்கரன், திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி, நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயணா குடும்பத்தினர், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் துணைவி ராஜாத்தி அம்மாள், நடிகர்கள் விஜயகுமார், செந்தில் உள்ளிட்ட பலரும் அத்திவரதரை நேற்று செவ்வாய்க்கிழமை தரிசனம் செய்தனர். 

இந்நிலையில், முக்கியஸ்தர்களுக்கான வரிசையில்(விவிஐபி) மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் தனது நண்பர்களுடன் அத்திவரதரை தரிசனம் செய்ததும், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு இந்து அறநிலைய துறை சார்பாக எவ்வாறு மரியாதை வழங்கப்பட்டதோ, அதே இடத்தில் அத்திவரதருக்கு அருகாமையில் அமரவைக்கப்பட்டு சாமி தரிசனம் செய்த வீடியே சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் காட்சி மக்களிடையே அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. 

குடும்பங்களுடன் பல மணிநேரங்கள் வரிசையில் நின்றும் கூட அத்திவரதரை தரிசிக்க முடியாமல் நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரும்பிச் செல்லும் நிலையில், தமிழகம் முழுவதும் குற்ற வழக்குகள் உள்ளவனும், மூன்று முறை காவல்துறையினர் என்கவுன்டரில் இருந்து தப்பிய ஒரு ரவுடி அத்திவரதருக்கு அருகாமையில் அமரவைக்கப்பட்டு தரிசனம் செய்துள்ளது காவல்துறை மீதான நம்பிக்கையை குறைக்கும் வகையில் அமைந்திருப்பதாக மக்கள் ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர். 

அத்திவரதரை முக்கிய நபர்கள் தரிசிக்க காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரின் கையெழுத்திட்ட ‘டோனர் பாஸ்’ வழங்கப்படும் நிலையில், யாருடைய சிபாரிசில் அவர் முக்கியஸ்தர்களுக்கான வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தது எப்படி  என பொதுமக்கள் கேள்வி எழுப்புயுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com