மும்பையில் அடுக்குமாடிக் குடியிருப்பு இடிந்து விழுந்த விபத்து: பலி எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு 

மும்பையில் 100 ஆண்டுகள் பழைமையான 4 மாடி குடியிருப்பு  திடீரென இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக 
மும்பையில் அடுக்குமாடிக் குடியிருப்பு இடிந்து விழுந்த விபத்து: பலி எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு 

மும்பையில் 100 ஆண்டுகள் பழைமையான 4 மாடி குடியிருப்பு  திடீரென இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 9 பேர் காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சவாலான மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மும்பை டோங்ரி பகுதியில் உள்ள 4 மாடி குடியிருப்பு செவ்வாய்க்கிழமை காலை 11.40 மணிக்கு திடீரென இடிந்து விழுந்தது. தீயணைப்புப் படை வீரர்களும், தேசியப் பேரிடர் மீட்புப் படையினரும் விரைந்து வந்து சவாலான மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

விபத்து நேரிட்ட பகுதி குறுகலான இடம் என்பதால் ஆம்புலன்ஸ் வர முடியவில்லை. சிறிது தொலைவு தள்ளியே நிறுத்தப்பட்டது. உள்ளூர் மக்களுக்கு மீட்புப் பணியில் உதவினர். செய்தி சேனல்களில் ஒரு குழந்தையை துணியில் வைத்து மீட்புப் படையினர் காப்பாற்றி எடுத்துச் சென்றது ஒளிபரப்பானது. அந்தக் குழந்தை இறக்கவில்லை. உயிருடன் நலமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இமாம்வாடா அரசு மகளிர் பள்ளி தற்காலிகமாக தங்குவதற்காக திறக்கப்பட்டுள்ளது.

இடிந்து விழுந்த கட்டடம் 100 ஆண்டுகள் பழைமையானது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

மும்பையில் அண்மையில் பெய்த பலத்த மழை காரணமாக இந்தப் பகுதியில் வெள்ளம் ஏற்பட்டது. குடியிருப்பு இடிந்து விழுந்ததை நேரில் பார்த்த நபர் ஒருவர் கூறுகையில், பெரிய சப்தம் கேட்டது. மக்கள் கூச்சலிட்டனர். நிலநடுக்கம் போன்று இருந்தது. இந்தக் குடியிருப்பில் 7 முதல் 8 குடும்பங்கள் வரை வசித்து வந்தனர்' என்றார்.

மகாராஷ்டிர வீட்டு வசதி மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இந்தக் குடியிருப்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்த ஆணையத்தின் அதிகாரி, தங்களின் கட்டுப்பாட்டில் இந்தக் குடியிருப்பு இல்லை. இது அங்கீகாரம் இல்லாத கட்டடம் என்று விளக்கம் அளித்தார். எனினும், இந்தக் குடியிருப்பின் உரிமையாளர் யார் என்பது குறித்து குழப்பம் நீடித்து வருகிறது.

காங்கிரஸ் எம்எல்ஏ பாய் ஜக்தப் கூறுகையில், இந்தக் குடியிருப்பில் இருந்தவர்கள் மகாராஷ்டிர வீட்டு வசதி ஆணையத்திடம்  கட்டடத்தின் நிலை குறித்து ஏற்கெனவே புகார் அளித்திருந்தனர். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை' என்றார்.

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறுகையில், இடிந்து விழுந்த குடியிருப்பு 100 ஆண்டுகள் பழைமையானது. அதை மேம்படுத்த அனுமதி வழங்கப்பட்டுவிட்டது. விசாரணைக்கு பிறகே குடியிருப்பை மேம்படுத்தும் பணியைத் தொடங்குவதில் ஏதேனும் காலதாமதம் ஏற்பட்டதா என்பது தெரியவரும். தற்போது, இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறோம்' என்றார்.

மும்பை மாநகராட்சி ஆணையர் பிரவீண் பர்தேசி, காவல் ஆணையர் சஞ்சய் பார்வே ஆகியோர் கட்டடம் இடிந்து விழுந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிலையில், அடுக்குமாடிக் குடியிருப்பு இடிந்து விழுந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 9 காயங்களுடன் அருகில் உள்ள ஜே.ஜே. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  சவாலான மீட்புப் பணியில் உள்ளூர் மக்கள், தீயணைப்புப் படை வீரர்களும் மற்றும் தேசியப் பேரிடர் மீட்புப் படையினரும் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com