21 ஜூலை 2019

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக எம்எல்ஏக்கள் நட்சத்திர விடுதியில் தஞ்சம்

DIN | Published: 12th July 2019 10:51 PM


பெங்களூரு: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், பாஜக, காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் பெங்களூரில் உள்ள நட்சத்திர விடுதியில் தஞ்சம் அடைந்துள்ளனா்.

கர்நாடகாவில் நிலவிவரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தற்போதைய அரசியலில் நல்லவன் தேவையா, வல்லவன் தேவையா என்ற போட்டியில் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்போவதாக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். 

இதற்காக, பெங்களூரில் உள்ள குமாரகுருபா விருந்தினர் இல்லத்தில் இன்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளா் கே.சி.வேணுகோபால், துணை முதல்வா் ஜி.பரமேஸ்வர், அமைச்சா் டி.கே.சிவக்குமார், காங்கிரஸ் மாநிலத் தலைவா் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்ட காங்கிரசின் முன்னணித் தலைவா்களுடன் முதல்வா் குமாரசாமி ஆலோசனை நடத்தினார். சுமார் 2 மணி நேரம் நடந்த இந்தக் கூட்டத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்கான வியூகம் குறித்து விவாதிக்கப்பட்டது. காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் ரோஷன்பெய்க், ஆனந்த்சிங் உள்ளிட்ட சிலருடன் பேசி சமாதானம் செய்யப்போவதாக முதல்வா் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

அதேபோல, காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ முனிரத்னாவை சமாதானம் செய்யும் பொறுப்பை அமைச்சா் டி.கே.சிவக்குமார் ஏற்றுக்கொண்டுள்ளார். 

இதனிடையே, செய்தியாளா்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் சித்தராமையா,‘ வெற்றிபெறும் நம்பிக்கையில் தான் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முதல்வர் குமாரசாமி முடிவு செய்திருக்கிறார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ரோஷன்பெய்க் தவிர மற்ற அதிருப்தி எம்எல்ஏக்களிடம் காங்கிரஸ் மாநிலத் தலைவா் தினேஷ் குண்டுராவ் பேசிக்கொண்டிருக்கிறார். 

இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாக தங்கள் கட்சி எம்எல்ஏக்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக பாஜக, காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் தனித்தனியே நட்சத்திர விடுதிகளில் வெள்ளிக்கிழமை தஞ்சம் அடைந்திருக்கிறார்கள். பெங்களூரில் வெள்ளிக்கிழமை தொடங்கிய சட்டப்பேரவைக் கூட்டம் நிறைவடைந்ததும், விதான சௌதா வளாகத்தில் இருந்து பாஜக எம்எல்ஏக்கள் 105 பேரும் பெங்களூரு புநகர் பகுதியான எலஹங்காவில் உள்ள ரமாடா கேளிக்கை விடுதிக்கு 2 பேருந்துகளில் பயணமாகி உள்ளனர். அங்கு திங்கள்கிழமை வரை தங்கியிருந்து, சட்டப்பேரவைக் கூட்டத்திற்கு வருகை தரவிருப்பதாக அக் கட்சியின் தலைவர் எடியூரப்பா தெரிவித்தார்.

இதேபோல, மஜத எம்எல்ஏக்கள் 34 பேரும் பெங்களூரு புறநகர் பகுதியில் தேவனஹள்ளியில் உள்ள பிரெஸ்டீஜ் கோல்ஃப் ஷைன் கேளிக்கை விடுதிக்கு பேருந்து மூலம் விதானசௌதாவில் இருந்து சென்றனா். இதற்கான ஏற்பாடுகளை மஜத எம்எல்சி டி.ஏ.சரவணா செய்திருந்தார்.

பாஜக, மஜதவைப் போல அல்லாமல், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 66 பேரும் பெங்களூரு, யஷ்வந்த்பூரில் உள்ள தாஜ் விவான்டா நட்சத்திர விடுதிக்கு பேருந்து மூலம் சென்று தங்கியுள்ளனர். 

மக்கள் சேவைக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சேவகர்கள் எல்லாம் நட்சத்திர விடுதியில் தஞ்சமடைந்துள்ள நிலையில், அரசியலில் நல்லவன் தேவையா, வல்லவன் தேவையா என்ற போட்டியில் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்போவதாக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். 

விரைவில் கர்நாடக அரசியலில் நல்லவன் யார்?, வல்லவன் யார்? என்பதை மக்கள் சேவர்கள் அடையாளம் காட்டுவார்காளா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

நம்பிக்கை வாக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்: கர்நாடக சுயேட்சை எம்எல்ஏ-க்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு
நாளைதான் கடைசிநாள்: குமாரசாமி அரசுக்கு எடியூரப்பா செக்! 
ஷூப்மன் கில் எங்கே? இந்திய அணித் தேர்வு மீது ரசிகர்கள் கோபம்
கர்நாடகாவில் இன்று இரவு பாஜக எம்எல்ஏ-க்கள் கூட்டம்
இந்திய கம்யூ., பொதுச் செயலாளராக டி.ராஜா தேர்வு: ஸ்டாலின் வாழ்த்து