பாட்னா: பிகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி தொடர்ந்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு பாட்னா நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ராகுல் காந்தி, கர்நாடகா மாநிலம், கோலார் மாவட்டத்தில் நடைபெற்ற பிரசாரத்தில், எனக்கு ஒரு கேள்வி எழுகிறது. ஏன் திருடர்கள் அனைவரின் பெயருக்கு பின்னால் மோடி என்ற அடைமொழி கொண்டுள்ள நபர்கள் அனைவரும் திருடர்களாக உள்ளதாகவும், அதற்கு உதாரணமாக வைர வியாபாரி நீரவ் மோடி, ஐபிஎல் அமைப்பின் முன்னாள் தலைவர் லலித் மோடி, பிரதமர் நரேந்திர மோடி இன்னும் எத்தனை மோடிக்கள் வருவார்களோ, யாருக்கு தெரியும் என பேசியதாக கூறப்படுகிறது.
தேர்தல் பிரசாரத்தில் ராகுலின் பேச்சுக்கு பிகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி கண்டனம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக சுஷீல்குமார் மோடி பாட்னாவில் உள்ள மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்காக இன்று சனிக்கிழமை பாட்னா நீதிமன்றத்தில் ராகுல் காந்தி ஆஜரானார். இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
பின்னர் நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் ராகுல்காந்தி பேசுகையில், ''யாரெல்லாம் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு எதிராகவும், நரேந்திரமோடிக்கு பாஜக அரசுக்கும் எதிரானவர்களோ அவர்கள் மீதெல்லாம் வழக்குகள் போட்டு நீதிமன்றத்துக்கு இழுத்து அவர்களை மிரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஆனால், ஜனநாயக சக்திகளின் குரல்வளையை அவர்களால் அடைக்க முடியாது. அரசியல் சாசனத்தை காக்கவும், விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுப்பேன். எனது போராட்டத்தை தொடர்வேன்'' என தெரிவித்தார்.