தற்போதைய செய்திகள்

பாஜக ஆட்சியமைத்தால் எடியூரப்பா தான் முதல்வர்: மத்திய அமைச்சர் சதானந்தகவுடா 

6th Jul 2019 07:07 PM

ADVERTISEMENT


பெங்களூரு: கர்நாடகாவில் பாஜக ஆட்சியமைத்தால் எடியூரப்பா தான் முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என மத்திய அமைச்சர் சதானந்தகவுடா தெரிவித்துள்ளார். 

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அரசு நடந்து வருகிறது. குமாரசாமி முதல்வராக இருந்து வருகிறார். 

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ஆனந்த்சிங், ரமேஷ் ஜார்கிகோளி ஆகிய 2 பேர் பதவியை ராஜிநாமா செய்தனர். இதில் ரமேஷ் ஜார்கிகோளியின் ராஜிநாமா கடிதம் தனக்கு கிடைக்கவில்லை என்று சபாநாயகர் கூறியிருந்தார். 

ஆனந்த்சிங்கின் ராஜிநாமா கடிதம் இன்னும் அங்கீகரிக்கப்படாத நிலையில், துணை முதல்வர் பரமேஸ்வர், காங்கிரஸ் செயல்தலைவர் ஈஸ்வர் கன்ட்ரே, சுகாதாரத்துறை அமைச்சர் சிவானந்தா பட்டீல் ஆகியோர் நேற்று சபாநாயகர் ரமேஷ்குமாரை நேரில் சந்தித்து, ஆனந்த்சிங்கின் ராஜிநாமாவை அங்கீகரிக்க வேண்டாம் என்று கூறியதாக தகவல் வெளியானது. 

ADVERTISEMENT

இந்நிலையில், திடீரென சபாநாயர் ரமேஷ்குமாரை சந்திக்க காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏக்கள் தலைமைச்செயலகம் சென்றனர். அங்கு சபாநாயகர் அறையில் இல்லாததால், ஆளுநர் மாளிகை நோக்கி சென்றனர். அங்கு 11 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பேரவை உறுப்பினர் பதவி ராஜிநாமா கடிதத்தை ஆளுநா் வஜுபாய் வாலாவிடம் அளித்துள்ளனர்.  

ராஜ்பவனில் ஆளுநா் வஜுபாய் வாலாவை சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய மஜத எம்எல்ஏ விஸ்வநாத், தங்களின் ராஜிநாமாவை ஏற்றுக்கொள்ளுமாறு சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளோம். வரும் 9 ஆம் தேதி முடிவு எடுப்பதாக சபாநாயகர் கூறியுள்ளதாகவும், தற்போதைய கூட்டணி அரசு தனது செயல்பாடுகளின் மீது நம்பிக்கை ஏற்படுத்த தவறி விட்டது என தெரிவித்தார். 

ஓருவேளை 11 பேரின் ராஜிநாமா ஏற்கப்பட்டால் ஆட்சி கவிழும் எனவும், பாஜகவுக்கு அதிக பெரும்பான்மை உருவாகியுள்ளது தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து அவசர கூட்டத்துக்கு அம்மாநில துணை முதல்வர் பரமேஸ்வர் அழைப்பு விடுத்துள்ளார். சமீபத்தில் அமெரிக்கா சென்றுள்ள அம்மாநில முதல்வர் குமாரசாமி நாளை மறுநாள் கர்நாடகா திரும்ப உள்ள நிலையில் கர்நாடகாவில் அரசியல் குழப்பம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், சட்டப்படி ஆளுநர் எங்களை அழைத்ததால் ஆட்சியமைக்க தயாராக உள்ளோம். 105 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் தனிப்பெரும்பான்மையுடன் இருப்பது பாஜக தான். கர்நாடகாவில் பாஜக ஆட்சியமைத்தால் எடியூரப்பா தான் முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என மத்திய அமைச்சர் சதானந்தகவுடா தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT