காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் பாக்கம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ராஜா என்ற சமூக ஆர்வலர் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதில் அவர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த சோத்துப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவர் ஒரு சமூக ஆர்வலர். அரசு புறம்போக்கு நிலம், அரசு நில ஆக்கிரமிப்பாளர்கள், ஏரி குளங்களை ஆக்கிரமிப்போருக்கு எதிராக சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர் வழக்குகள் விசாரணைக்காக அடிக்கடி சென்னை வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், சென்னையில் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் சென்றுவிட்டு சொந்த கிராமத்திற்கு திரும்பிக்கொண்டிருந்த போது பாக்கம் நெடுஞ்சாலையில் ஒரு மர்ம கும்பல் திடீரென இன்று காலை பெட்ரோல் குண்டுகளை வீசித் தாக்கிவிட்டு தப்பியோடியது.
இதில், ராஜா அதிர்ஷ்டவசமாக காயங்களின்றி உயிர்தப்பினார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் வழக்குப் பதிவு செய்து பெட்ரோல்குண்டு வீசிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.