தற்போதைய செய்திகள்

சிவகங்கை தெப்பக்குளத்துக்கு 2-ஆவது ஆண்டாக பெரியாறு பாசன தண்ணீர்!

29th Dec 2019 08:09 PM

ADVERTISEMENT

 

சிவகங்கை: சிவகங்கையில் உள்ள தெப்பக்குளத்துக்கு 2-ஆவது ஆண்டாக பெரியாறு பாசனக் கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீர் ஞாயிற்றுக்கிழமை மாலை வந்தடைந்தது. இதனால் சிவகங்கையைச் சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

சிவகங்கை நகர் மையப் பகுதியில் தெப்பக்குளம் உள்ளது.இந்த குளம் சிவகங்கை நகரம் உருவாகிய போது,சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட முதல் தெப்பகுளம் ஆகும்.சிவகங்கை நகரின் முக்கிய நீராதாரமாக விளங்கக் கூடிய இந்த குளத்துக்கு வைகை அணையிலிருந்து பெரியாறு பிரதான கால்வாயில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் போது, சிவகங்கை மாவட்ட எல்லையான மலம்பட்டியில் தொடங்கும் பெரியாறு பிரதான கால்வாயான லெஷிஸ் கால்வாயிலிருந்து இடையமேலூர், கூட்டுறவுப்பட்டி,காஞ்சிரங்கால் உள்ளிட்ட பகுதிகள் வழியாக நீட்டிப்பு செய்து சிவகங்கை தெப்பக்குளத்துக்கு தண்ணீர் வரும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கால்வாய் வழியாக கடந்த 1996 ஆம் ஆண்டு தண்ணீர் திறக்கப்பட்டு தெப்பக்குளம் நிரப்பப்பட்டுள்ளது.அதன் பின்னர்,மேற்கண்ட கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படாத காரணத்தாலும்,மாவட்ட நிர்வாகம் போதிய கவனம் செலுத்தாத காரணத்தாலும் தெப்பக்குளத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.இதுபோன்று,தொடர்ந்து தண்ணீர் திறக்காத காரணத்தாலும்,பருவமழை பொய்த்து போனதாலும் தெப்பக்குளம் நீரின்றி வறண்டு காணப்பட்டது.

ADVERTISEMENT

இந்நிலையில்,கடந்தாண்டு பருவமழை சரியான அளவு பெய்ததால் முல்லைப் பெரியாறு மற்றும் வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்தது.இதனால் பெரியாறு பிரதான பாசனக் கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு 22 ஆண்டுகளுக்கு பின் கடந்த ஆண்டு(2018) சிவகங்கை தெப்பக்குளம் நிரம்பியது.

இதேபோன்று,இந்தாண்டும் சிவகங்கை தெப்பக்குளத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.இதையடுத்து,சிவகங்கை தெப்பக்குளத்துக்கு தண்ணீர் திறந்து விடுமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அண்மையில் உத்தரவு பிறப்பித்தார்.

இதைத் தொடர்ந்து,டிச.28 ஆம் தேதி மலம்பட்டி பிரிவில் உள்ள லெஷிஸ் கால்வாயிலிருந்து சிவகங்கை தெப்பக்குளத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

அவ்வாறு திறக்கப்பட்ட தண்ணீர் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு சிவகங்கை தெப்பக்குளத்திற்குள் வந்தடைந்தது.
தெப்பகுளம் மடை நுழைவு வாயிலில் வந்த தண்ணீரை தமிழக கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் க.பாஸ்கரன்,சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன்,சிவகங்கை வட்டாட்சியர் க.மைலாவதி,சிவகங்கை நகர் காவல் ஆய்வாளர் மோகன் உள்ளிட்ட பொதுமக்கள் ஏராளமானோர் மலர் தூவி வரவேற்றனர்.

சிவகங்கை நகர் மக்களின் கோரிக்கையை ஏற்று சிவகங்கை தெப்பக்குளத்திற்கு 35 கனஅடி வீதம் 5 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது.இதன் காரணமாக,சிவகங்கை தெப்பக்குளம் இரண்டாவது ஆண்டாக நிரம்ப வாய்ப்புள்ளதால் சிவகங்கையைச் சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சித் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT