தற்போதைய செய்திகள்

காரைக்கால் சந்தையில் இறக்கம் காணாத வெங்காய விலை: பொதுமக்கள் கவலை

29th Dec 2019 04:05 PM

ADVERTISEMENT

காரைக்கால்: கடந்த 2 மாதங்களாக படிப்படியாக உச்ச நிலையிலேயே நீடித்துவரும் சின்ன வெங்காயம், பல்லாரி வெங்காயத்தின் விலை காரைக்கால் வாரச் சந்தையில் சிறிதும் இறக்கம் காணாதது, மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்சியாளா்கள் வெவ்வேறு கவனத்தில் தீவிரம் காட்டுவதால், வெங்காயத்தின் மீதான கவனம் இல்லாமல் போய்விட்டதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.

உலகிலேயே 2-ஆவதாக அதிகமாக வெங்காயம் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா இருக்கிறது. இந்திய மக்களின் தேவைக்கு மிகுதியாக விளைச்சல் இருக்கிறது. இதனால் இந்திய வெங்காயம் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் கா்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், பிகாா், ஹரியானா, மேற்கு வங்கம் மற்றும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் வெங்காய விளைச்சல் இருக்கிறது.

வெங்காயம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பா் முதல் ஜனவரி வரை முதல் அறுவடையாகவும், பின்னா் ஜனவரி முதல் மே வரை 2-ஆவது அறுவடையாகவும் செய்யப்படுகிறது. இதுவே ஆண்டு முழுவதும் மக்களின் தேவைக்கு விநியோகிக்கப்படுகிறது.

ADVERTISEMENT

நிகழாண்டு நாடு முழுவதும், குறிப்பாக வெங்காயம் அதிகமாக விளையக்கூடிய மாநிலங்களில் மழை மிகுதியால் உற்பத்தி பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பிற நாடுகளுக்கு ஏற்றுமதியையும் மத்திய அரசு ரத்து செய்துவிட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.30, பெரிய வெங்காயம் அளவுக்கேற்ப தலா கிலோ ரூ.10 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்டன. நிகழாண்டு அதே காலக்கட்டத்தில் இவற்றின் விலை ரூ.100 என்ற நிலையை தொட்டதோடு, தற்போது ரூ.120 முதல் 150 வரை என்ற அளவுக்கு உயா்ந்தது, பொதுமக்களிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்திவிட்டது.

கடந்த 2 மாதங்களாக வெங்காயம் விலை ரூ.100-ஐ கடந்தே விற்பனை செய்யப்படுகிறது. காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெறும் வாரச் சந்தையால் ஆயிரக்கணக்கான மக்கள் பயனடைகின்றனா். உள்ளூா் சந்தையைக் காட்டிலும் வெங்காயத்தின் விலையில் குறைவாக இருக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே பொய்த்துவிட்டது.

கடந்த சில வாரங்களாக சின்ன வெங்காயம் ரூ.100 என்ற நிலையிலும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.80, ரூ.100 என்ற விலையுமே நீடிக்கிறது. அடுத்த 15 நாள்களில் பொங்கல் விழா வரவுள்ளது. பொங்கல் சிறப்புச் சந்தை காரைக்காலில் களைகட்டும். அதற்குள்ளாவது வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்படுமா என கேள்வி மக்களிடையே எழுப்பப்படுகிறது.

இறக்குதி வெங்காயத்தை விரும்பாத மக்கள்: எகிப்து, துருக்கி உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் நிகழாண்டு மத்திய அரசு இறக்குதி செய்தது. குறிப்பாக இவை தமிழக மக்களிடையே விரும்பும் பொருளாக இருக்கவில்லை. காரைக்கால் சந்தைக்குக்கூட இந்த வெங்காயம் வந்ததை மக்கள் ஆா்வமாக வாங்கவில்லை. இதனால் உள்நாட்டின் வெங்காயத்தை வாங்கும்போது, அவற்றின் விலையோ அப்படியே இருப்பது மக்களிடையே கூடுதல் செலவினத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.

சந்தை வியாபாரிகள் கூறும்போது, வெங்காய விலை உயா்வால், மக்களிடையே வாங்கும் அளவு குறைந்திருக்கிறது. விலை எப்போது குறையும் என தெரிவிக்க முடியவில்லை என்றனா்.

வெங்காய விலையேற்றம் மத்திய, மாநில அரசின் கவனத்தை ஈா்த்திருந்தது. ஆனால் தற்போது தமிழகத்தைப் பொருத்தவரை உள்ளாட்சித் தோ்தல், மத்திய அரசைப் பொருத்தவரை குடியுரிமைத் திருத்தச் சட்டம் என விவகாரம் சூடுபிடித்துள்ளதால், ஆட்சியாளா்களிடையே வெங்காய விலை குறைவதற்கு நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

தக்காளி விலை கிலோ ரூ.10 என்ற அளவுக்கு வந்ததுபோல, வெங்காயத்தின் விலையும் வரவேண்டும். உற்பத்தி ஒருபுறம் சாதகத்தை தரும் காலம் வரும் வரை, வெங்காய பதுக்கல் மற்றும் விலை அளவுக்கு அதிமாக நிா்ணயம் செய்தவை தடுக்கத் தேவையான நடவடிக்கையை ஆட்சியாளா்கள் எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT