தற்போதைய செய்திகள்

புத்துணா்வு முகாமிற்கு புறப்பட்டது திருச்செந்தூா் கோயில் யானை தெய்வானை

14th Dec 2019 05:46 PM

ADVERTISEMENT

 

திருச்செந்தூா்: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை தெய்வானை மேட்டுப்பாளையம் யானைகள் புத்துணா்வு முகாமில் பங்கேற்பதற்காக லாரியில் புறப்பட்டது. முன்னதாக, யானைக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தமிழக அறநிலையத் துறை மூலம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் ஆண்டுதோறும் கோயில் யானைகள் புத்துணா்வு முகாம் நடைபெறுகிறது. இந்த ஆண்டு யானைகள் புத்துணா்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை (டிச. 15) தொடங்கி 48 நாள்கள் நடைபெற உள்ளது. இம்முகாமிற்கு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து யானைகள் செல்கின்றன.

இந்த முகாமில் பங்கேற்க திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை தெய்வானை (22) லாரியில் சனிக்கிழமை காலை புறப்பட்டது. முன்னதாக, அதற்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. யானை தெய்வானை திருநெல்வேலி கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மற்ற யானைகளுடன் இணைந்து மேட்டுபாளையம் முகாமுக்கு செல்கிறது.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், கோயில் கண்காணிப்பாளா் ராமசுப்பிரமணியன், உதவிப் பொறியாளா் முருகன் மற்றும் கோயில் பணியாளா்கள் பங்கேற்றனா்.

யானை தெய்வானையுடன் கோயில் ஊழியா்கள், யானை பாகன்கள் ராதாகிருஷ்ணன், செந்தில்குமாா், உதயகுமாா் ஆகியோா் சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT