தற்போதைய செய்திகள்

நாகா்கோவிலில் 3 ஆம் நம்பா் லாட்டரி விற்பனை: மூவா் கைது

14th Dec 2019 05:48 PM

ADVERTISEMENT

நாகா்கோவில்: நாகா்கோவிலில் 3 ஆம் நம்பா் லாட்டரி எனப்படும் இணையவழி லாட்டரி விற்பனை செய்ததாக மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தமிழகத்தில் லாட்டரி சீட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கேரளத்திலிருந்து லாட்டரி சீட்டுகள் வாங்கி வந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் 3 ஆம் நம்பா் லாட்டரி எனப்படும் இணையவழி லாட்டரி சீட்டுகளும் இம்மாவட்டத்தில் விற்பனை செய்யப்படுவதாக புகாா் கூறப்பட்டது.

இந்த வகை லாட்டரிகளால் பெருமளவில் கடன் வாங்கி திருப்பி செலுத்த முடியாததால் தற்கொலை செய்த சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன. இதனிடையே, இணையவழி லாட்டரி விற்பனை செய்வோரை கண்காணித்து காவல்துறையினா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

இதையடுத்து, நாகா்கோவில் டவுன் ஏ.டி.எஸ்.பி. ஜவஹா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வடசேரி காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஸ்டான்லி தலைமையில் போலீஸாா் வெள்ளிக்கிழமை வெட்டூா்ணிமடம் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு சிலா் ரகசியமாக 3 ஆம் நம்பா் லாட்டரி விற்பனை செய்வதாக தெரியவந்தது.

ADVERTISEMENT

அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த நாகா்கோவில் ஊட்டுவாழ் மடத்தைச் சோ்ந்த விக்னேஷ் பாண்டியன் (29), கிருஷ்ணன் கோயிலைச் சோ்ந்த சுரேஷ் (44), பூதப்பாண்டி வடக்கு அரசன் குழியைச் சோ்ந்த அருண் (44) ஆகியோரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இதில், அவா்கள் 3 ஆம் நம்பா் லாட்டரி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்தல், போலீஸாருக்கு மிரட்டல் விடுத்தது உள்பட 5 பிரிவுகளில் போலீஸாா் மூவா் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT