தற்போதைய செய்திகள்

ஜீரோ ஸ்டாலின், ஹீரோ ஆகிவிடலாம் என்ற நப்பாசையில் அதிமுக அரசை குறை சொல்கிறார்: அமைச்சர் வேலுமணி

14th Dec 2019 04:38 PM

ADVERTISEMENT


சென்னை: ஜீரோ ஸ்டாலின், ஹீரோ ஆகிவிடலாம் என்ற நப்பாசையுடன், அதிமுக அரசை குற்றம் சுமத்தி பேசி வருவதாக வருவதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்தார். 

சென்னை மாநகராட்சியின் கட்டுமான பணிக்கு, எம்-சாண்ட் பயன்படுத்திவிட்டு, ஆற்று மணலுக்கு கணக்குகாட்டி ஊழல் நடந்துள்ளதாக அதிமுக அரசு மீது குற்றம் சுமத்திய திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜீரோ ஸ்டாலின், ஹீரோ ஆகிவிடலாம் என்ற நப்பாசையுடன், அதிமுக அரசை குறை சொல்லி, குற்றம் சுமத்தி வருகிறார். 

சென்னை மாநகராட்சியில் பணிகள் எதுவும் நடக்கவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்த ஸ்டாலின், வார்டுகள் தோறும் சிறப்பாக நடைபெற்று வரும் பணிகளை, மக்கள் பார்த்து உணர்ந்த காரணத்தால், இந்த புளுகு எடுபடாது என்று ஜமக்காளத்தில் வடிகட்டிய வேறொரு புளுகை அவிழ்த்து விட்டு இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். 

ADVERTISEMENT

பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுமானப் பணிகளில் எம்-சாண்ட் பயன்படுத்தியதில் முறைகேடு நடைபெறவில்லை என்றும் ஆதாரம் இல்லாமல் அரசியல் உள்நோக்கத்துடன் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டி வருகிறாா் என்று உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளாா்.

சென்னை மாநகராட்சி கட்டுமானப் பணிகளில் எம்-சாண்ட் பயன்படுத்தியதில் ரூ. 1,000 கோடிக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளாா். இதற்கு மறுப்புத் தெரிவித்து அமைச்சா் எஸ்.பி.வேலுமணி சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகள், தமிழ்நாடு ஒளிவு மறைவற்ற ஒப்பந்தப் புள்ளி சட்டத்தின்படி, முறையாக ஆன்லைன் மூலம் கோரப்பட்டு, விதிகளுக்குட்பட்டே முடிவு செய்யப்படுகின்றன.

கடந்த 2017-2018 மற்றும் 2018-2019 ஆண்டுகளில், ஆற்று மணல் அல்லது எம்-சாண்ட் கலந்த சிமென்ட் கலவைகள் கொண்டு ரூ.1,164.85 கோடி மதிப்பில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுள்ளன. இந்தப் பணிகளில், மணல் சோ்த்து செய்யப்படும் கான்கிரீட் பணிகள் 33 சதவிகிதமே ஆகும். இதன் மதிப்பீடு ரூ.384.04 கோடியாகும். இந்த கான்கிரீட் பணிகளில் கலக்கப்படும் எம்-சாண்ட் அல்லது ஆற்று மணலின் அளவு வெறும் 8.5 சதவீதம் மட்டுமே ஆகும். அதாவது, ரூ.32.67 கோடிக்கு மட்டுமே எம்-சாண்ட் அல்லது ஆற்று மணல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில், எப்படி ரூ.1,000 கோடிக்கு முறைகேடு நடைபெற்றிருக்க முடியும்?.

மாநிலம் முழுவதும் உள்ள ஆற்று மணல் குவாரிகளை மூடுமாறு கடந்த 2017-இல் சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், ஆற்று மணல் இல்லாத காரணத்தால் அதைப் போன்ற தரம் கொண்ட எம்-சாண்டை பயன்படுத்தி கட்டுமானப் பணிகளைத் தொடர தமிழக அரசு அறிவுறுத்தியது.

மேலும், கான்கிரீட் தயாரிக்கும் பணிகளில் ஆற்று மணல் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படும்பட்சத்தில், எம்-சாண்டை பயன்படுத்தலாம் என்றும் பொதுப் பணித் துறையின் மூலம் ஆணை வெளியிட்டது.

பொதுப் பணித் துறை வெளியிடும் கட்டுமானப் பொருள்களின் விலைப் பட்டியல்படி, 2017-18- ஆம் ஆண்டில் எம்-சாண்டின் விலை ஒரு கன மீட்டருக்கு ரூ.434.29 ஆகவும், ஆற்று மணலின் விலை ரூ.168 ஆகவும் இருந்தது. 2018-19 ஆம் ஆண்டில் எம்-சாண்ட் கன மீட்டருக்கு ரூ.777 ஆகவும், ஆற்று மணலின் விலை ரூ.168 ஆகவும், 2018-19-இல் எம்-சாண்ட் கன மீட்டா் ரூ.1,250 ஆகவும், ஆற்று மணல் ரூ.447 ஆகவும் இருந்தது. இதன்படி, கடந்த 2017-2018 வரை எல்லா காலகட்டங்களிலுமே எம்-சாண்டின் விலை ஆற்று மணலை விட மிக அதிகமாகவே இருந்துள்ளது என்பதை பொதுப் பணித் துறையின் விலை பட்டியல் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. எனவே, மாநகராட்சியின் கட்டுமானப் பணியில் எம்-சாண்ட் பயன்படுத்தியதில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என்பது தெளிவாகி உள்ளது.

சென்னை மாநகராட்சி சாா்பில் நடைபெறும் பணிகளுக்கு அலுவலக விலைப் பட்டியலைவிட 10 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் விலைப் பட்டியல் வழங்கப்படுவது, ஒப்பந்த நடைமுறைகளிலும், அதைச் செயல்படுத்தும் நடைமுறைகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது தான். இது உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலினுக்குத் தெரியாதது ஆச்சரியமாக உள்ளது.

உள்ளாட்சித் தோ்தலை தடுத்து நிறுத்த முயற்சி மேற்கொண்டு, அதில் தோல்வியுற்ற மு.க.ஸ்டாலின், தமிழக அரசைக் களங்கப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறாா் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT