காஷ்மீர் விவகாரத்தில் சமரசம் செய்யத் தயார்: மீண்டும் மூக்கை நுழைக்கும் டிரம்ப்

தேவைப்பட்டால் இரு நாடுகளுக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்கவோ அல்லது தன்னால் முடிந்த உதவிகளை செய்யவோ 
காஷ்மீர் விவகாரத்தில் சமரசம் செய்யத் தயார்: மீண்டும் மூக்கை நுழைக்கும் டிரம்ப்


வாஷிங்டன்: ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் தன்னால் முடிந்த உதவிகளை செய்ய முயற்சிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், அழகான ஜம்மு காஷ்மீர், நீண்ட காலமாகவே சர்ச்சைக்குரிய இடமாக இருந்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே மிகப்பெரிய பிரச்னைகள் உள்ளன. இந்துக்கள், இஸ்லாமியர்கள் இணைந்து வாழ விருப்பம் இல்லாத பகுதியாக ஜம்மு காஷ்மீர் உள்ளது. இந்த பிரச்னையில் சுமுக தீர்வு காண்பது என்பது இயலாத காரியம்.

தேவைப்பட்டால் இரு நாடுகளுக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்கவோ அல்லது தன்னால் முடிந்த உதவிகளை செய்யவோ முயற்சிப்பதாக தெரிவித்த டிரம்ப், இரு நாட்டு பிரதமர்களிடமும் தாம் தொலைபேசியில் பேசியதாகவும் இருவரும் சிறந்த மனிதர்கள், தமக்கு நல்ல நண்பர்கள் என்று தெரிவித்துள்ளார் டிரம்ப்.

ஜம்மு காஷ்மீர் பிரச்னை குறித்து பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் தொலைப்பேசியில் பேசியதாக தெரிவித்த டிரம்பர், வரும் சனிக்கிழமை பிரான்சில் நடைபெறும் ஜி7 மாநாடுகளின் இடையே பிரதமர் மோடியை சந்திக்க உள்ளேன். அப்போது அவரிடம் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காண முயற்சி செய்வேன் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் பியாரிட்ஸ் நகரில் வரும் சனிக்கிழமை தொடங்கும் ஜி 7 நாடுகளின் மாநாட்டில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய ஏழு உறுப்பு நாடுகளும் இந்த ஆண்டு பொருளாதாரம், வெளியுறவு கொள்கை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கியப் பிரச்னைகளை குறித்து விவாதிக்க உள்ளன.

இந்த மாநாட்டிற்கு நட்பு நாடுகளான இந்தியா, ஆஸ்திரேலியா, சிலி, தென் ஆப்பிரிக்கா, உள்ளிட்ட நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்தில் மூன்றாம் நாடு தலையிட இடமில்லை என்று இந்தியா திட்டவட்டமாக அறிவித்த நிலையில் இப்பிரச்னையை இந்தியாவும் பாகிஸ்தானும் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது. 

இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்தில் தலையிட்டு சமரசம் செய்ய விரும்புவதாக மீண்டும் மூக்கை நுழைத்துள்ளார் டிரம்ப்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com