கேந்திரிய வித்யாலயத்துக்கு நிலம் கை விரிக்கிறதா புதுச்சேரி அரசு?

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் கடந்த 2010}ஆம் ஆண்டு காரைக்கால் கோயில்பத்து பகுதியில் தற்காலிக இடத்தில் கேந்திரிய
காரைக்கால் கேந்திரிய வித்யாலயத்தின் முகப்புத் தோற்றம்.
காரைக்கால் கேந்திரிய வித்யாலயத்தின் முகப்புத் தோற்றம்.



காரைக்கால்: காரைக்காலில் கடந்த 10 ஆண்டுகளாக தற்காலிக இடத்தில் செயல்படும் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயத்துக்கு, நிரந்தரக் கட்டடம் கட்ட  புதுச்சேரி காங்கிரஸ் அரசு காலம் கடத்திவருவது, கல்வியாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் கடந்த 2010}ஆம் ஆண்டு காரைக்கால் கோயில்பத்து பகுதியில் தற்காலிக இடத்தில் கேந்திரிய வித்யாலயா கல்வி நிலையம் தொடங்கப்பட்டது. அப்போது, மத்திய இணை அமைச்சராக இருந்த வி. நாராயணசாமி தொடங்கிவைத்தார்.

இதனுடன் தொடங்கப்பட்ட என்.ஐ.டி.க்கு திருவேட்டக்குடி பகுதியில் 300 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, ரூ.150 கோடி மதிப்பில் கட்டடங்களும் கட்டப்பட்டுள்ளன. ஆனால், கேந்திரிய வித்யாலயத்துக்கு நிரந்தரக் கட்டடம் கட்ட இதுவரை நிலம் ஒதுக்கவில்லை.

தொடக்கத்தில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். ஆனால், கேந்திரிய வித்யாலயத்தின் விதிகளின்படி போதிய வகுப்பறைக் கூடம், நூலகம், கணினி அறை, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட  எந்தவித வசதிகளும் செய்யப்படவில்லை. பின்னர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நிரவி பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கிய பழைய கட்டடத்தை சீரமைத்து, அங்கு கேந்திரிய வித்யாலயம் இடமாற்றம் செய்யப்பட்டது. இங்கும் மாணவர்களின் நலனுக்கான எந்த வசதியும் இல்லை.

கேந்திரிய வித்யாலயத்துக்கு  நிரந்தரக் கட்டடம் கட்ட 10 ஏக்கர் நிலம் வழங்க தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. நிலம் வழங்கினால், அதில் பள்ளிக்குத் தேவையான கட்டடங்கள் கட்ட  ரூ.30 கோடி செலவு செய்ய தயாராக உள்ளதாக கேந்திரிய வித்யாலயத் தலைமை தெரிவித்தது. இருப்பினும் நிலம் வழங்கப்படவில்லை.

கண்டுகொள்ளாத எம்எல்ஏக்கள்: கேந்திரிய வித்யாலயத்தின் விதிகளின்படி மாணவர் சேர்க்கை என்பது எம்.பி.க்கள், மாவட்ட ஆட்சியருக்கு என குறிப்பிட்ட அளவில் சீட் 

தரப்படுகிறது. எம்.எல்.ஏ.க்களுக்கு பரிந்துரை அதிகாரம் இல்லை. இதனால், இப்பள்ளி காரைக்காலில் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன என்ற மனோபாவம் மக்கள் பிரதிநிதிகளுக்கு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

மாணவர்கள் தவிப்பு: உரிய கட்டமைப்புடன் பள்ளி இல்லாததால், மாணவர்கள் கல்வி பயிலுதல், கல்விக்கு அப்பாற்பட்ட பிற திறன் வளர்ப்பில் ஈடுபடுதல், ஆய்வுக்கூட வசதி, கலையரங்க வசதிகள், கணினிக் கூடம் உள்ளிட்ட எந்த வசதியையும் பெறமுடியாமல் தவிக்கின்றனர்.  திருநள்ளாறு பகுதி பூமங்கலம் கிராமத்தில் 10 ஏக்கர் நிலம் கேந்திரிய வித்யாலயத்துக்கு தேர்வு செய்யப்பட்ட நிலையில், அந்த நிலம் கோயில் நகர வளர்ச்சித் திட்டப்பணிக்குத் தேவையென கேந்திரிய வித்யாலயத்துக்கு தர அரசு நிர்வாகம் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. 

 ஆசிரியர்கள் தயக்கம்: கேந்திரிய பள்ளியானது, ரிமோட் ஏரியா என்று சொல்லக்கூடிய வகையில் காரைக்காலில் அமைந்திருக்கிறது. போக்குவரத்து, தங்கும் வசதிகள் பெருநகரத்துக்கு இணையாக இல்லை எனக் கருதி இந்த பள்ளிக்கு பணியிடமாற்றம் செய்யும் ஆசிரியர்களும் இங்கு பணியாற்ற தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது. இதனால் தற்காலிக ஆசிரியர்களை வைத்து கல்வி போதிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

இதுகுறித்து, காரைக்கால் திமுக அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச்.நாஜிம் கூறியது: காரைக்காலில் இந்த பள்ளி அமைவதற்கு திமுக தீவிர முயற்சி மேற்கொண்டது. நான் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோதுதான். இந்த பள்ளி அமைய கோயில்பத்து பகுதியில் தற்காலிக இடத்தை தேர்வு செய்து, அதனை சீரமைத்துத்தரவும் ஏற்பாடு செய்தேன்.  தற்போது, மாணவர்கள், பெற்றோர்கள் படும் அல்லல் வேதனையளிக்கிறது என்றார்.

காரைக்கால் கேந்திரிய வித்யாலயத்தின் முதல்வர் வி.கணேசன் கூறியது: ஆட்சியர் தலைமையில் நடைபெறும் விஎம்சி என்கிற கூட்டத்தில் கேந்திரிய வித்யாலயத்துக்கு நில தேவையின் அவசியம் குறித்து வலியுறுத்துவோம் என்றார்.

மாவட்ட ஆட்சியர் ஏ.விக்ரந்த் ராஜா கூறியது: திருநள்ளாறு பூமங்கலம் பகுதியில் கேந்திரிய வித்யாலயத்துக்கு நிலம் தருவதற்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை மாவட்ட நிர்வாகம் கைவிடவில்லை என்றார்.

அரசியல் செய்யும் ஆட்சியாளர்கள்: என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் என். ரங்கசாமி முதல்வராக இருந்தார். அப்போது நிலம் கோரிக்கை இருந்தபோது, மத்திய இணை அமைச்சர் வி. நாராயணசாமி தாம்தான் இப்பள்ளியை கொண்டுவந்ததாகக் கூறிக்கொண்டிருந்ததால், இரு தரப்புக்கும் இணக்கமான சூழல் இல்லாத நிலையில், நிலத்தை தேர்வு செய்து மாநில அரசு ஒப்படைக்காமல் காலம் கடத்தியது. 

தற்போது, மாநிலத்தில் ஆள்வது காங்கிரஸ் கட்சி. கேந்திரிய பள்ளி மத்திய அரசுடையது (பாஜக)  என்ற பார்வை மாநில அரசுக்கு இருப்பதாலோ என்னவோ இதன் மீது மாநில ஆட்சியாளர்கள் அக்கறை செலுத்தவில்லை என்கிற பேச்சும் பரவலாக உள்ளது.  மாநில அரசு இந்த விவகாரத்தில் கை விரிக்காமல் மாவட்ட நிர்வாக யோசனைக்கு ஆதரவு அளிக்கவேண்டும். மாணவர் சமுதாயத்தின் நலன் கருதி  காரைக்கால் மாவட்ட ஆட்சியர் சிறப்பு கவனம் செலுத்தினால், நிலம் ஒப்படைப்பு சாத்தியம் என்கின்றனர் கல்வியாளர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com