அரசு பெண்கள் பள்ளிக்கு மாற்று இடம் வலுத்து வருகிறது கோரிக்கை..!

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் தற்காலிகமாக அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செயல்படும்
அரசு பெண்கள் பள்ளிக்கு மாற்று இடம் வலுத்து வருகிறது கோரிக்கை..!


திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் தற்காலிகமாக அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செயல்படும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு மாற்று இடத்தில் நிரந்தரக் கட்டடம் கட்ட வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.

திருத்துறைப்பூண்டியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, புனித தெரசாள் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் இரண்டு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் செயல்பட்டுவருகின்றன. இதில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தற்போது, பட்டுக்கோட்டை சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பாதுகாப்பற்ற சூழலில் செயல்பட்டு வருகிறது.

பெண்கள் பள்ளியின் வரலாறு: திருத்துறைப்பூண்டி நகரில் வேதாரண்யம் சாலையில் உள்ள பழைய கால்நடை மருத்துவமனை வளாகத்தில் 1986-ஆம் ஆண்டு சுமார் 300 மாணவிகளுடன் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி தொடங்கப்பட்டது.

இப்பள்ளி 2002- ஆம் ஆண்டில் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட போது, தற்காலிகமாக அதே இடத்தில் கீற்றுக் கொட்டகை அமைக்கப்பட்டு, அதில் செயல்பட்டுவந்தது.

இந்நிலையில், கும்பகோணத்தில்  உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நேரிட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, கீற்றுக் கொட்டகையில் பள்ளிகள் செயல்பட தமிழக அரசு தடை விதித்தது. இதனால்,  இப்பள்ளியை,  அரசு ஆண்கள் மருத்துவமனை வளாகத்துக்கு மாவட்ட நிர்வாகம் இடமாற்றம் செய்தது. (அந்த இடத்தில் ஆண்கள் மருத்துவமனை செயல்படவில்லை.) இதைத்தொடர்ந்து, அந்த இடத்தில் புதிய பள்ளிக் கட்டடம் கட்ட வேண்டும் என அப்போதைய எம்எல்ஏ கோ. பழனிச்சாமி சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்தார். மேலும், பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் அனைத்து சேவை சங்கங்களும் கோரிக்கை விடுத்தன. இந்த கோரிக்கைகளின் அடிப்படையில், அரசு அனுமதி பெற்று, திருத்துறைப்பூண்டி நகர்மன்றத்தில் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  அதன்படி,  அரசு ஆண்கள் மருத்துவமனை வளாகத்தில் பெண்கள் பள்ளிக்கு 17 வகுப்பறைகள், ஆய்வகம் மற்றும் சுகாதார வளாகத்துடன் புதிய கட்டங்கள் கட்ட நபார்டு திட்டத்தின் கீழ் ரூ. 90 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் மேற்கொள்ள ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டன.

இந்நிலையில், திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த கல்வியாளர் ஒருவர், சுமார் 3 கி. மீ. தொலைவில் நெடும்பலம் ரயில்வே கேட்  அருகே உள்ள தனக்குச் சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை பள்ளிக் கட்டடம் கட்ட நன்கொடையாக வழங்கினார். இதனால், அந்த இடத்தில் புதிய கட்டடம் கட்ட ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, பருவமழைக் காலத்தில், அந்த இடத்தில் வெள்ளநீர் சூழும் அபாயம் இருந்ததாலும்,  ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ளதால், மாணவிகள் பள்ளிக்குச் சென்றுவர சிரமம் ஏற்படும் எனத் தெரியவந்ததால், அந்த இடத்தை தவிர்த்து, வேறு இடத்தை தேர்வு செய்ய கல்வித்துறை அறிவுறுத்தியது.

இதையடுத்து, திருத்துறைப்பூண்டி நகரில் பிறவி மருந்தீசுவரர் கோயிலுக்குச் சொந்தமான இடம்  பெண்கள் பள்ளி கட்ட தேர்வு செய்யப்பட்டது. ஆனால், அந்த இடத்தை கோயில் நிர்வாகம் தானமாக பெற்றதிலும், இந்து சமய அறநிலையத் துறை பதிவேட்டிலும் வேறுபாடுகள் இருந்ததால், வருங்காலத்தில் பிரச்னை ஏற்படும் எனக் கருதி அந்த இடமும் தவிர்க்கப்பட்டது.

வேறு இடத்துக்கு மாற்றம்: இந்நிலையில், அரசு ஆண்கள் மருத்துவமனை வளாகத்தில் சிரமமான சூழ்நிலையில் பெண்கள் பள்ளி செயல்பட்டு வந்ததையறிந்த அப்போதைய மாவட்ட ஆட்சியர் எம். சந்திரசேகரன், பட்டுக்கோட்டை சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில்,  நபார்டு திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்டு, திறக்கப்படாமல் இருந்த 17 வகுப்பறைகள் கொண்ட கட்டடத்துக்கு பெண்கள் பள்ளியை மாற்றி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, அந்த கட்டடத்தில் பெண்கள் பள்ளி செயல்பட்டுவருகிறது.

குறைந்துவரும் மாணவிகளின் எண்ணிக்கை:  பழைய பேருந்து நிலையம் அண்ணா சாலை பகுதியில் பேருந்துகளிலிருந்து இறங்கி, முள்ளி ஆற்றங்கரை பகுதியைக் கடந்துதான் பள்ளிக்கு மாணவிகள் நடந்து வரவேண்டியுள்ளது. அப்போது, ஆற்றங்கரையோரம் சிலர் நின்றுகொண்டு மாணவிகளை கிண்டல் செய்வது தொடர்ந்து வருகிறது. மேலும், ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தடுப்புச்சுவர் அமைக்கப்படாத நிலையில், போதிய பாதுகாப்பற்ற சூழலில்  பெண்கள் பள்ளி செயல்படுகிறது. இதன் காரணமாக 970 மாணவிகள் படித்து வந்த இப்பள்ளியில் படிப்படியாக மாணவிகளின் எண்ணிக்கை குறைந்து, தற்போது 370 மாணவிகளே பயின்று வருகின்றனர்.

மாற்று இடம்: இதனால், இப்பள்ளிக்கு பாதுகாப்பான மாற்று இடத்தில் நிரந்தரக் கட்டடம் கட்டி அதில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வலுத்துவருகிறது. 

திருத்துறைப்பூண்டி திருக்குளத்தின் மேல்கரையில் முன்பு செயல்பட்டுவந்த அரசு பெண்கள் மருத்துவமனை வேதாரண்யம் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த மருத்துவமனை வளாகத்துக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, அந்த இடத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி தற்காலிகமாக செயல்பட்டு, அதுவும் தற்போது திருவாரூர் சாலையில் உள்ள தண்டலச்சேரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டது.

தற்போது, அரசு பெண்கள் மருத்துவமனை இருந்த இடம் பயன்பாடின்றி உள்ளதால், அங்கு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்குப் புதிய கட்டடம் கட்டி, அங்கு நிரந்தரமாக செயல்பட  மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்களும், பொதுமக்களும் விரும்புகின்றனர். 

இதுகுறித்து, மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டபோது, இந்தக் கோரிக்கை குறித்து பள்ளிக் கல்வித் துறைக்கு உரிய அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். எனவே, இக்கோரிக்கையை தமிழக அரசு விரைவாக பரிசீலித்து, பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்குப் புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com