தேசம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது: அபிஷேக் சிங்வி குற்றச்சாட்டு

பொருளாதார விவகாரத்தில் தனது தோல்வியை மறைப்பதற்காக, மத்திய அரசு வேறு பிரச்னைகளை ஏற்படுத்தி மக்களின் கவனத்தை திசை திருப்பி வருகிறது
தேசம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது: அபிஷேக் சிங்வி குற்றச்சாட்டு


""நமது நாட்டில் இப்போது பொருளாதார மந்தநிலை ஏற்படவில்லை; தேசம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது'' என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், அக்கட்சியின் செய்தித் தொடர்பாளருமான அபிஷேக் மனு சிங்வி குற்றம்சாட்டியுள்ளார்.

பொருளாதார விவகாரத்தில் தனது தோல்வியை மறைப்பதற்காக, மத்திய அரசு வேறு பிரச்னைகளை ஏற்படுத்தி மக்களின் கவனத்தை திசை திருப்பி வருகிறது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

சமீபகாலமாக கார், இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. முக்கியமாக வாகனங்களின் விற்பனை குறைவால், உற்பத்தியும் நிறுத்தப்பட்டு வருகிறது. இதனால் பல நிறுவனங்கள் தற்காலிகமாக தங்கள் ஆலைகளை மூடுவது, பணியாளர்களை நீக்குவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.

இந்நிலையில், தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அபிஷேக் சிங்வி கூறியதாவது:
நாட்டில் இப்போது வாகன உற்பத்தித் துறை மிகப்பெரிய நெருக்கடியில் சிக்கியுள்ளது. இது ஏதோ ஓரிருநாளில் நிகழ்ந்ததல்ல. பயணிகள் வாகன விற்பனை மட்டும் கடந்த 9 மாதங்களில் 31 சதவீத ம் சரிந்துள்ளது. ஓராண்டில் வாகன உற்பத்தி மிகப்பெரிய வீழ்ச்சியைக் கண்டுள்ளது. சர்வதேச அளவில் மிகப்பெரிய வாகனச் சந்தைகளில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. 

இத்துறையில் ஏற்பட்டுள்ள சரிவால் ஆயிரக்கணக்கானோர் வேலையை இழந்துள்ளனர். அடுத்து வரும் மாதங்களில் இத்துறையில் நிலைமை மேலும் மோசமடையும் என்று தெரிகிறது.

சமீப நாள்களில் பங்குச் சந்தையும் மிகப்பெரிய சரிவுகளைச் சந்தித்துள்ளது. நாட்டின் நிதிப்பற்றாக்குறையும் அதிகரித்து வருகிறது. கட்டுமானத் துறையும் முடங்கிவிட்டது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் குறைந்து வருகிறது. அந்நிய நேரடி முதலீடு, பங்குச் சந்தைகளில் அந்நிய முதலீடு ஆகியவையும் குறைந்து வருகின்றன. 
இதன் மூலம் நாட்டில் பொருளாதார சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக சிலர் கூறுகின்றனர். ஆனால், நாட்டில் ஏற்பட்டுள்ளது பொருளாதார சுணக்கமல்ல. உண்மையில் தேசம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. சரியாகக் கூறுவதென்றால் நிதித்துறை நெருக்கடி நிலை நமது நாட்டில் ஏற்பட்டுள்ளது.

இவை அனைத்துக்கும் மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைதான் காரணம். ஆனால், பொருளாதார விவகாரத்தில் தனது தோல்விகளை மறைப்பதற்காக மத்திய அரசு வேறு பிரச்னைகளை ஏற்படுத்தி மக்களின் கவனத்தை திசை திருப்பி வருகிறது. பிரதமர் மோடி தலைமையிலான முதல் ஆட்சியையும், இப்போதைய ஆட்சியையும் ஒப்பிட்டுப் பார்த்தால், நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து வீழ்ச்சிப் பாதையில் செல்வதை தெரிந்து கொள்ள முடியும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com