ப.சிதம்பரத்தால் பூமிக்குத்தான் பாரம்: முதல்வர் பழனிசாமி ஆவேச பேச்சு

ப.சிதம்பரத்தால் தமிழகத்துக்கும், நாட்டுக்கும் என்ன கிடைத்தது?; அவரால் பூமிக்குத்தான் பாரம் என்று முதல்வர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.
ப.சிதம்பரத்தால் பூமிக்குத்தான் பாரம்: முதல்வர் பழனிசாமி ஆவேச பேச்சு


சேலம்: ப.சிதம்பரத்தால் தமிழகத்துக்கும், நாட்டுக்கும் என்ன கிடைத்தது?; அவரால் பூமிக்குத்தான் பாரம் என்று முதல்வர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.

காவிரி ஆற்றில் தொடர்ந்து நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. நீர்வரத்து அதிகரிப்பால், கடந்த 9-ஆம் தேதி 54.50 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம்,  திங்கள்கிழமை மாலை 92.55 அடியைத் தாண்டியது. கடந்த மூன்று நாள்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 35. 50 அடி உயர்ந்தது. அணையிலிருந்து நொடிக்கு ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 52. 65 டி.எம்.சி. யாக இருந்தது. நீர்மட்டம் 92.55 அடியைத் தாண்டியது. 

இதையடுத்து மேட்டூர் அணையின் நீர் மட்டம் 92.55 அடியைத் தாண்டியுள்ளதாலும், கணிசமான அளவில் நீர் வரத்து இருப்பதாலும் விவசாயிகள் நலன் கருதி பாசனத்துக்காக மேட்டூர் அணை இன்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 13) திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று திங்கள்கிழமை அறிவித்திருந்தார். 

அதன்படி, இன்று சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்த முதல்வர் பழனிசாமி,  காவிரியாற்றில் மலர்தூவினார். நீர் வரத்தை பொறுத்து நீர்திறப்பு படிப்படியாக வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்படும் என்றார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இறைவன் அருளால் மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மீது அக்கறை கொண்டது தமிழக அரசு. இன்றைய மேட்டூர் அணை 20 மாவட்ட மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது. மேட்டூர் அணை திறப்பு மூலம் டெல்டா பகுதியில் 16 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும். கால்வாய் பாசனத்தின் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் உள்ள 45 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும். மேட்டூர் அணையின் கிழக்கு, மேற்கு கால்வாய்களில் 137 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும். 
 
மேலும், பொதுப்பணித்துறை சொந்தமான 14 ஆயிரம் ஏரிகளும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான 39 ஆயிரம் குளம், குட்டைகள் தூர்வாரப்படும். காவிரியின் குறுக்கே 2 தடுப்பணைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது, மத்திய அரசின் உதவியுடன் டெல்டாவில் உள்ள அனைத்து கால்வாய்களும் கான்கிரீட் கால்வாய்களாக மாற்றப்படும். மேலும் மேட்டூர், கொள்ளிடம் இடையே 3 தடுப்பணைகள் கட்டப்படும். கோதாவரி - காவிரி நதிகள் இணைக்கப்படுவது உறுதி. கோதாவரி - காவிரி நதி நீர் இணைப்பால் தமிழகத்தில் 125 டி.எம்.சி தண்ணீர் கிடைக்கும். சேலம் தலைவாசல் பகுதியில் ஆயிரம் கோடி செலவில் கால்நடைப்பூங்கா அமைக்கப்படும் என்றார். 

இதனிடையே, செய்தியாளர்கள் மத்திய அரசு நாளை தமிழகத்தை யூனியன் பிரதேசமாக ஆக்கினால் அதிமுக கைக்கட்டி, தலை வணங்கி நிற்கும் என ப.சிதம்பரம் கூறியிருக்கிறாரே என கேள்வி எழுப்பினர். இதற்கு ப.சிதம்பரத்தால் தமிழகத்துக்கும், நாட்டுக்கும் என்ன கிடைத்தது?. அவரால் பூமிக்குத்தான் பாரம் என்று முதல்வர் பழனிசாமி பதிலளித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com