மேட்டூர் அணை நாளை திறப்பு: தமிழக அரசு உத்தரவு

சம்பா சாகுபடி பாசனத் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து நாளை தண்ணீர் திறக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 
மேட்டூர் அணை நாளை திறப்பு: தமிழக அரசு உத்தரவு


சென்னை: சம்பா சாகுபடி பாசனத் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து நாளை தண்ணீர் திறக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

தென்மேற்கு பருவமழை நிகழாண்டு தாமதமாக ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தொடங்கி தற்போது கர்நாடகம், கேரள மாநிலங்களில் தீவிரமடைந்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நீலகிரி, கோவை, தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.

கேரள மாநிலம், வயநாடு பகுதியில் பெய்யும் மழை நீரானது கர்நாடகம் மாநிலத்தில் உள்ள கபினி அணை வழியாக மேட்டூர் அணைக்கு வந்தடையும். கர்நாடகம் மாநிலத்தில் உள்ள ஹேரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரானது கிருஷ்ணராஜசாகர் அணை வழியாக மேட்டூர் அணைக்கு வந்துசேரும். பலத்த மழையின் காரணமாக கடந்த சில நாள்களாக கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து வெகுவாக அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு கருதி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 

இதனால், ஒகேனக்கல்லில் தண்ணீர் வரத்து படிப்படியாக உயர்ந்தது. கடந்த 9-ஆம் தேதி கபினி அணையிலிருந்து விநாடிக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் கனஅடி நீரும், கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து விநாடிக்கு 5,000 ஆயிரம் கனஅடி நீரும், தாரகா அணையிலிருந்து விநாடிக்கு 25 ஆயிரம் கன அடி நீரும் வெளியேற்றப்பட்டது. 10-ஆம் தேதி மாலை 6 மணியளவில் நீர்வரத்து மொத்தம் 2 லட்சம் கன அடியாக உயர்ந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. 

தற்போதைய நிலையில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், அடுத்த சில தினங்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80 அடியை எட்ட வாய்ப்புள்ளது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டும் வரை காத்திருக்காமல், நீர்மட்டம் 80 அடியை எட்டியதும் காவிரி டெல்டா மாவட்ட பாசனப் பகுதிகளுக்கு அணையிலிருந்து தாமதமின்றி தண்ணீரை திறந்துவிட தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். 

இந்நிலையில், மேட்டூர் அணை நீர்மட்டம் 85 அடியை எட்டியுள்ளதை அடுத்து சம்பா சாகுபடி பாசனத் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து நாளை தண்ணீர் திறக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேட்டூர் அணையை முதல்வர் பழனிசாமி திறந்து வைக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com