தமிழ் மொழித் திருவிழா

இலக்கியங்களில் பாசனத் தொழில்நுட்பம் 

முனைவர் ஆர்.நிர்மலாதேவி

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி தமிழ்க்குடி. தமிழ்ப் பெருங்குடியின் தொன்மைச் சிறப்பினையும் பண்பாட்டு விழுமியங்களையும் படம் பிடித்துக் காட்டும் காலகண்ணாடியாக விளங்குபவை தமிழரின் படைப்புகளே! பழந்தமிழர்களின் நாகரிகமும், பண்பாடுகளும் இன்னபிறவும் எந்நாட்டவர்களுக்கும், எச்சமூகத்தவர்களுக்கும் மெய்மையை அதாவது அறத்தினை மொழிந்து, கரையும் ஆழமும் காணமுடியாத வகையில் கடல் போன்றே பரந்து விரிந்து காணப்படுவதாகும்.

தொல்பழங்காலம் தொட்டே பண்டைத்தமிழர் கடைப்பிடித்து ஒழுகும் வாழ்வியல் பண்பாட்டு நலக்கோலங்களின் திரட்சியை, ஒரு தலைமுறையினர் அதன் அடுத்த தலைமுறையினர்க்கு வழங்குவது இன்றியமையாத கடமையாகும். உழவன் ஒரு நிலத்தைப் பயிரிட பயன்படக் கூடிய விளைநிலமாக மாற்ற எவ்வாறு மீண்டும் மீண்டும் உழுது பண்படுத்துகிறானோ, அதுபோல ஒரு கொள்கையினைப் பழக்க வழக்கத்தை நாகரிகத்தை நடைமுறைபடுத்தி வெளிக்கொணர்தல்  வேண்டும்.

சங்ககால இலக்கியம் உலக இலக்கியங்களின் இமயம் என்று போற்றப்படுகிறது. மக்களின் இயற்கையோடு இயைந்த வாழ்வு இலக்கியத்தின் ஆணி வேராக அமைந்தது.

வீட்டு வாழ்க்கையை அகமாகவும், நாட்டு வாழ்க்கையைப் புறமாகவும் கொண்டு எழுதப்பட்ட இவை ஆற்றலுடையவை மட்டுமல்ல, மனிதர்களை நல்வழிப்படுத்துபவையும் கூட. சங்ககாலத்தைப் பற்றிய அரசியல், சமூகம், பண்பாடு, சமயம், பொருளாதாரம் பற்றி அறிய நமக்கு இன்று உள்ள ஒரே ஆதாரம் சங்க இலக்கியங்கள் மட்டுமே.

பண்டைத் தமிழர் நிலத்தின் இயற்கை அமைப்பு,  இயற்கைச் சூழல், பருவகாலம் ஆகியவற்றிற்கேற்ப பாகுபடுத்தியுள்ளனர். நாடோடி வாழ்க்கை முடிவுற்று, ஒரிடத்தில் கூடி வாழத்தலைப்பட்ட சங்ககால மக்கள் நிலத்தை அடிப்படையாகக் கொண்ட வாழ்வை மேற்கொண்டனர்.

உற்பத்திக்கு அடிப்படை ஆதாரமாக நிலமே விளங்கியது. ‘ஓவ்வொரு குழுவும் நிலத்தைக் கையகப்படுத்தி பின்னர் அது தனி உடைமையாக மாறிய நிலையில் வேளாண்வர்க்கம் உருப் பெருகின்றது.”( பெ.மாதையன், சங்க இலக்கியத்தில் வேளாண் சமுதாயம் பக். 4)

தமிழகத்தில் சிறந்த தொழிலாக வேளாண்மை விளங்கியது. ‘சுழன்றும் ஏர்பின்னது உலகம், உழந்தும் உழவே தலை” என வள்ளுவர் கருதினார். வேளாண்மை சிறப்புறக் காரணமாக விளங்கியவை நீர்;நிலைகளும், நீராதரங்களுமே.

அம் தண் காவிரி வந்து கவர்பு ஊட்ட
தோடு கொள் வேலின் தோற்றம் போல
ஆடுகண் கரும்பின் வெண்பூ நுடங்கும்
நாடு எனப்படுவது நினதே( புறம் 53: 3-11)

எனக் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனைப் புலவர் வெள்ளைக்குடி நாகனார் பாடியுள்ளார். ‘காவிரியாறு வாய்க்கால்கள் வழியாகச் சென்று வளம் பெருக்க, ஆதனால் வேலின் தோற்றம் போன்று கணுக்களையுடைய கரும்பின் வெண்மையான பூக்கள் மாறாது விளங்கும். இத்தன்மையில் வளநாடு என்று சிறப்பித்துக் கூறப்படுவது நின்னுடைய நாடு” என்பதே பாடலின்; பொருள்.

பருவம் தவறாமல் பெய்யும் மழை நீரைத் தேக்கிக் கயம், வாவி, தடாகம், பொய்கை, குட்டம், குளம், ஏரி, கிடங்கு, மடு ,மதகு, மடை ,போன்ற நீர்நிலைகளை உண்டாக்கி, அவற்றிலிருந்து தேவைக்கேற்ப நீரைப் பயன்படுத்தினர் என்பதை இலக்கியங்கள் வாயிலாக அறியலாம். ஓலைச்சுவடி வடிவில் காணும் கூவநூல் நிலத்தின் தன்மை பற்றியும் மரம் செடி கொடிகள் பற்றியும் அவற்றின் அடையாளம் கண்டு நீர் இருக்கும் பகுதிகளைப் பற்றி அறியும் முறைகளை அறிந்துக் கொள்ளும் களஞ்சியமாக விளங்குகிறது. ஓடைகளின் குறுக்கே கல்லாலான அணையைக் கட்டித் தண்ணீரைத் தேக்கிக் கால்வாய் வழியாக அனுப்பிய  முறையினை, எதிர்த்து வரும் வீரர்களைக் கற்சிறை போல ஒருவனாக நின்று தடுத்து நிறுத்தும் தலைவனுக்கு உவமையாகக் கூறுகிறார் தொல்காப்பியர்.

வருசிறைப் புனலைக் கற்சிறை போல
ஒருவன் தாங்கிய பெருமை யானும் (தொல். பொருள்.657)

நீர் நிலைகளை உருவாக்கி இந்நிலவுலகில் தம் புகழைப் பதித்திட வேண்டுமெனப் பாண்டிய நெடுஞ்செழியனைப் பார்த்துக் குடபுலவியனார் கூறும் அறிவுரையினைப் புறநானூற்றுப் பாடல் மூலம் அறியலாம்.

அடுபோர்ச் செழிய! இகழாது வல்லே
நிலன்நெறி மருங்கில் நீர்நிலை பெருகத்
தட்டோர் அம்ம, இவன்தட்  டோரே
தள்ளா தோர்இவன் தள்ளாதோரே. (புறம்.18:27-30)

சோழ நாடு சோறுடைத்து என்ற பெருமைக்குக் காரணமாக விளங்கியவர் கரிகால்சோழன். 1800 ஆண்டுகளுக்கு முன்பே காவிரியின் குறுக்கே பெரிய கருங்கற்களும், களிமண் கலவையும் கொண்டு சுமார் 1080 அடிநீளமும், 40  முதல் 80 அடி அகலமும், 15 முதல் 18 அடி ஆழமும் என்ற விகிதத்தில் ஆற்றின் குறுக்கே நாக வடிவில் வளைவாக  கல்லணையைக்கட்டி, நீர்ப்போக்கை ஒழுங்கு செய்து தமிழரின் பொறியியல் திறனை உலகுக்கு உணர்த்;திய சிறப்புக்குரியவர் என்பதைப் பொருநராற்றுப்படையில் முடத்தாமக்ககண்ணியார் பாடல்  உணர்த்துகிறது.

ஏரியும் ஏற்றத்தி னாலும் பிறர்நாட்டு
வாரி சுரக்கும் வளன்எல்லாம் தேரின்
அரிகாலின் கீழுகூஉம் அந்நெல்லே சாலும்
கரிகாலன் காவிரிசூழ் நாடு   (பொரு., தனிப்பாடல்)
 
இது போன்ற அணைக்கட்டுகள்  கற்சிறைகள்என்றழைக்கப்பட்டன. இவைநீரின்வேகத்தையும்அழுத்தத்தையும்கட்டுப்படுத்தும் வகையில் வளைவாக இருந்ததை,

வருந்திக் கொண்ட வல்வாய் கொடுஞ்சிறை
மீதில் கொடுநீர் போக்கி(அகம்346:9-10)
அகநானூற்றுப்  பாடல்மூலம்அறியமுடிகிறது.

நீர்த்தேக்கங்களைவளைவாகஅமைத்தால்நீர்ன்வேகம்கட்டுப்படும்என்பதைப்பழங்காலமக்கள்அறிந்திருந்தனர்என்பதை,

எண்ணாட் திங்கள் அனைய கொடுங்கரை
தெண்ணீர்ச் சிறுகுளம் (புறம்:118)

ஒரு பூங்கா அருவி, பொய்கை, கேணி முதலியவற்றோடு திகழ வேண்டும்  என்பதனைமணிமேகையில்

எந்திரக் கிணறும் இடுங்கற் குன்றமும்
வந்துவீ ழருவியும் மலர்பூம் பந்தரும்
பரப்புநீர்ப் பொய்கையும் கரப்புநீர்க் கேணியும்
ஒளித்துறை யிடங்களும் பளிக்கறைப் பள்ளியும்
யாங்கனும் திரிந்து தாழ்ந்து விளையாடி
- (மணிமேகலை, சிறைகோட்டம்  அறக்கோட்டமாக்கியகாதை102-106)

உலகம் புகழ, இன்புற ஐந்து வழிகளை சிறுபஞ்சமுலம் குறிப்பிடுகிறது.1. குளம் வெட்டுதல் 2.அதனைச் சுற்றி மரக்கிளைகளை வெட்டி நடுதல் 3.மக்கள் நடக்கும் வழியைச் செதுக்கிச் சீர்திருத்தல் 4.தரிசு நிலத்தின் உள்ளிடத்தைச் செப்பம் செய்து உழுவயல் ஆக்குதல் 5. அவற்றுடன் வளமாக நீர் வரும்படி தோண்டிச் சுற்றிலும் சுவர் எழுப்பிக் கிணற்றை உண்டாக்குதல்.

குளந்தொட்டுக் கோடு பதித்துவழி சீத்து
உளந்தொட(டு) உழுவயல் ஆக்கி – வளந்தொட்டுப்
பாகு படும்கிணற்றோ(டு) என்றிவ் வைம்பால் படுத்தான்
ஏகும் சுவர்க்கத் தினிது. (சிறுபஞ்சமூலம் :66)

வேண்டியபோது மலையில் மழை வந்து சூழ வேண்டும் என்று மிகுதியான பலியைத் தூவி வழிபட்டதால் மழை மிகுதியாகப் பெய்ததையும் ‘மழை நின்று மேகங்கள் மேலே போவதாக எனக் கடவுளை வேண்டியவுடன் மழை நின்று விட்டதைக் கண்டு குறவர் மகிழ்ந்ததையும்” (நற்றிணை:165:2-5) நற்றிணை விளக்குகிறது.

வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரியாற்றின் தன்மை பற்றிச் சங்க இலக்கியங்கள் ஏராளமான செய்திகளை நமக்குத் தருகின்றன. பாலாறு, தென்பெண்ணை, வைகை, தாமிரபரணி போன்ற ஆறுகள் வேளாண்மைக்கும் செல்வச் செழிப்பிற்கும், பொருளாதார வளர்ச்சிக்;கும் பெரும் பங்காற்றின. நிலவளம் சிறந்து விளங்கியதாலும் உழவன் மெய்வருத்தம் பாராமல் உழைத்ததாலும் மருத நிலமே வேளாண் பொருளாதாரத்திற்கு அடிப்படையாக இருந்தது. மருத நில மக்கள் செல்வச் செழிப்பில் திளைத்தனர். எல்லா இடங்களிலும் வேளாண்மை செய்யப் பட்டாலும் ஆறுகள் கடலில் கலக்கும் இடங்களிலேயே அதிகமாக நடைபெற்றது.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நிலப்பகுதிகளில் வாழ்ந்த சமூகம் நான்கு வகையான இயற்கைச் சூழலை அடிப்படையாகக் கொண்டு தோன்றியவை. மலையும் மலை சார்ந்த நிலமாகிய குறிஞ்சியில் புன்செய் வேளாண்மை செய்யப்பட்டது. மூங்கிலரிசியும், அவரையும், கிழங்கும், வெண்சிறு கடுகும், ஐவன நெல்லும், இஞ்சியும், மஞ்சளும், மிளகும் இந்நிலத்தில் வாழ்ந்த மக்களின் அடிப்படை உணவாகும். ‘பறம்பு மலை நால்வகை உணவுப் பொருளை நல்கும்” ; (புறம் 53: 3-11)  எனப் புறநானூறு விளக்குகிறது. கால்நடைப் பராமரிப்பை அடிப்படைத் தொழிலாகக் கொண்ட முல்லை நில மக்கள் பால், தயிர், மோர், திணை, வரகு, கொள், அவரை போன்றவற்றை உணவாக உண்டனர். (புறம் -109:3 )

‘வேளாண்மைக்குரிய நிலம், நீர்வள அடிப்படையில் இரு வகைப்படுத்தப்பட்டன. நீர் வசதி அற்ற நிலங்கள் புன்செய் நிலம் எனப்பட்டது.

அதனெதிர் நீர் வசதி பெற்ற நிலம் மென்புலமாகக்  கருதப்பட்டது.”நெல், கரும்பு, வாழை முதலானவை வளர அதிக நீரும், நல்ல நீரும் தேவை. இதை தொல்காப்பியம் ‘வேந்தன் மேய தீம்புனல் உலகம்” (தொல்.பொருள்.அகத்-நூற்பா-5) என்றும், நம்பியகப்பொருள் என்ற இலக்கணநூல் பழனம் (ப.11) என்றும் குறிப்பிடப்படுகிறது.

நன்செய் விளைநிலத்தைச் சங்க இலக்கியங்களில் வயல், கழனி, செறு, பழனம் எனக் குறிப்பிடுவதை பின்வரும் பாடல் வரிகளால் அறியலாம்.
வயல்வெள் ஆம்பல்(குறுந்.293:5)

கழனிமாத்து விளைந்துகு தீம்பழம்(குறுந் 8.1-2)

பெயர்த்தும் கடிந்த செறுவில் பூக்கும் நின்
ஊர் நெய்தல் அனையேம் பெரும.(குறுந். 309:5-6)

உழவுத் தொழிலில் உயர்ந்து விளங்கும் நாடே பஞ்சத்தில் வீழ்ந்து பரிதவிக்காது. அந்நாடே செல்வத்திலே சிறந்து விளங்கும் என்னும் உண்மைண்யை நன்குணர்ந்தவர்கள் தமிழர்கள்.

‘கருவி வானம் தண்டனி சொரிந்தெனப்
பல்விதை உழவிற் சில் ஏராளர்
பனித்துறைப் பகன்றைப் பாங்குடைத் தெரியல்
கழுவுறு கலிங்கம் கடுப்பச் சூடி
இலங்கு கதிர்த் திருமணி பெறூஉம்
அகன் கண் வைப்பின் நாடு கிழவோயே”15
என்ற பாடல் மூலம் இதனை அறியலாம்.

உழவர் மருதநிலக் கடவுளாகிய இந்திரனை வழிபட்டனர். உலக வாழ்க்கைக்கு நெல்லும், நீரும் அடிப்படை என்று நம்பினர். குடபுலவியனார் பருவ மழையை முற்றிலும் நம்பி வாழும் நிலையினின்றும் உழவரை நல்ல நீர்ப்பாசனத் திட்டம் காக்கும் என்கிறார். திருவள்ளுவர் உழுதுண்டு வாழ்வோரே வாழ்வார், மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர் என்றும், உழுவார் உலகத்தார்க்கு ஆணி என்றும் உழவரைப் புகழ்கின்றார். நிலத்தை உழவேண்டும், எருவிட வேண்டும், நாற்று நடவேண்டும், நீர்பாசன ஏற்பாடு செய்தல் வேண்டும், பட்டிமாடுகள் மேய்ந்துவிடா வண்ணம் காத்தல் வேண்டும் என்று உழவர்க்கு அறிவுறுத்துகிறார்.

காவிரி, பெண்ணை, வையை, பொருநை, முன்னி, ஆன்பொருநை போன்ற பல ஆறுகளின் பெயர்கள் அகநானூற்றுப் பாடல்களிலே காணப்படுகின்றன. வறண்ட காலத்திலும், காவிரி நதி பெருக்கெடுத்து ஓடுகிறது. நறைக்கொடி, நரந்தப்புல், அகில், சந்தனம் இவற்றைத் துறைகள் தோறும் தள்ளிக் கொண்டு செல்கின்றது. நுரையைச் சுமந்து போகின்றது. ஆரவாரத்துடன் குளத்திலும், தோட்டத்திலும், புகுகின்றது. பெண்கள் அவ்விடங்களில் குடைந்து நீர் விளையாடுகின்றனர். காவிரி தனது நீரைப் பாய்ச்சுதலால் ஒரு வேலி நிலத்தில் ஆயிரம் கலமாகச் சோழ நாட்டிலே நெல் விளைகின்றது. ( பொரு : 232-248) எனக் காவிரியின் சிறப்பைப் பொருநராற்றுப்படை இயம்புகிறது.

பரிபாடலில் ஒன்பது பாடல்கள் வைகையாற்றின் பெருமை பாடுகின்றன. ஓவ்வொரு பாடலும் மலையிலே பிறந்து வரும் வையை எனத் தொடங்குவது குறிப்பிடத்தக்கது. இன்று வைகை நதி கடலோடு கலக்கவில்லை. இடையிலே நின்று விடுகிறது. பண்டைக்காலத்தில் அதாவது  கடைச்சங்க காலத்தில் வையை நதி மலையிலே பிறந்து கடலில் கலந்தது. ‘வைகை நதியிலே மக்கள் புகுந்து நீராடுந்துறையை திருமருத முன் துறை” ( பரிபாடல் :7-3) எனவும்  திருமருதநீட்ப்பூந்துறை ( பரிபாடல்: 11: 30) எனவும் அழைத்தனர்.

மாங்குடி மருதனார் மதுரைக்காஞ்சியில் வைகை நதி பற்றிப் பாடும் போது ‘ஆறுகள் கொள்ள அமையாமல் பெருகி வருகின்ற வெள்ளத்தால் குளங்கள் நிறைந்தன. குளங்கள் வழியாகப் பாயந்;த நீரால், வயல்களில் யானைகள் நின்றால் அவற்றை மறைக்கும்படி கதிர்கள் விளைந்தன. தாமரை, நெய்தல்;, நீலம், ஆம்பல் முதலிய பூக்கள் செறிந்து பின்னிக் கிடக்கும் பொய்கைகளில் கம்புட் கோழிகள் தத்தம் துணையோடு படுத்துறங்கின. வலைஞர் இக்கோழிகளின் தூக்கம் கலையும்படி, பொய்கைகளில் இறங்கி வலை வீசி மீன் பிடிப்பர் என ஆறு, குளம், பொய்கை போன்ற நீர்நிலைகள் பற்றிக் கூறுகிறது.( மதுரைக்காஞ்சி:  240-255)  மேலும்
  “முழங்குகால் பொருத மரம்பயில் காவின்
 இயங்குபுனல் கொழித்த வெண்தலைக் குவவு மணல்
  கான் பொழில் தழீஇய அடைகரை தோறும்
  தாது சூழ் கோங்கின் பூமலர் தாஅய்
  பல்வேறு பூத்திரள் தண்டலை சுற்றி
 கோதையின் ஒழுகும் விரிநீர் நல்வரல்
அவிர் அறல் வையைத்துறை துறை தோறும்;”  
(மதுரைக்காஞ்சி:240-255)
என விவரிக்கின்றார்.

‘மண்ணுற வாழ்ந்த மணிநீர்க் கிடங்கின்” என்ற மதுரைக்காஞ்சி வரிகள் மூலம் ‘அகழி” பற்றிய செய்தியை அறிகிறோம். ‘அகழ் இழிந்தன்ன கான் யாற்று நடவை” என மலைபடுகடாம் கூறுகிறது.

‘வேட் கோவன் வனைகின்ற கலத்துடன் சுழற்றி விட்ட திரிகை சுழலுவது போல குமிழிகள் சுழல விரைந்து வாய்க்காலிடந்தோறும் ஒழிவின்றி ஓடுகின்ற கண்ணுக்கினிய சேயாற்றைக் காண்பரீகள். காண்போர் விரும்பும் அழகுமிக்கது அந்த ஆறு” என சேயாறு பற்றிய செய்தியை அறிகிறோம்.
வைகைப் பெருக்கைக் காண மதுரை மக்கள் வைகைக் கரையிலே வந்து கூடியது, பற்றிப்; பரிபாடல் அழகுற விளக்குகிறது.

நீர்ப்பாசன வசதியைப் பெருக்கினால் தான் நிலம் வளப்படும். உழவர்களும், ஊக்கமுடன் உழைத்து உற்பத்தியைப் பெருக்குவர். நீர்பாசன வசதியற்ற நாட்டிலே உற்பத்தி பெருக இயலாது. ஆதலால் அரசின் முதற்கடமை நாட்டிலே நல்ல  நீர்பாசன வசதிகளை ஏற்படச் செய்வதுதான் என்ற உண்மையை சங்ககால மக்கள் உணர்ந்திருந்தனர்.

‘நீரும் நிலனும் புணரியோட்,; ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசினோரே”( புறம் -18)

என்பதை இவ்வரிகள் காட்டுகின்றன. அதே சமயம் பருவ மழை தவறிய போது பஞ்சம் ஏற்பட்டதைச் சங்கப்புலவர்கள் சிலர் மழை வேண்டிப் பாடியமையால் அறியலாம். இறையனார் அகப்பொருள் உரையில்; பன்னீராண்டு வற்கடம் பேசப்படுகிறது. இதனால் தான் தமிழ்ச் சங்கமே தற்காலிகமாக முடிவுக்கு வந்தது என அறிகிறோம்.

இலக்கியச் சான்றுகளுக்கு அடுத்தப்படியாக அரசர்கள் நீர் ஆதாரங்களை உண்டாக்கி தங்கள் பெயரினை பொன்னெழுத்தில் பொதித்து வைத்ததைச் செப்பேடுகளும், கல்வெட்டுகளும் விளங்குகின்றன. செப்பேடுகளில் புகழ் பெற்ற கூரம் செப்பேட்டில் ‘முதலாம் பரமேசுவரவர்மனனின் ஆட்சிக்காலத்தில் இருபது சதுர்வேதி பிராமணர்க்குப் பரமேசுவரமங்கலம் என்னும் பெயரில் பிரமதேயமாக நிலங்கொடுத்தான். அத்தோடு அவ்வூரில் பரமேசுவர தடாகம் என்னும் ஏரியை ஏற்படுத்திப் பாலாற்றிலிருந்து நீர் கொண்டு வர பெரும்பிடுகு கால் என்னும் கால்வாயையும் வெட்ட, அக்கால்வாயிலிருந்து தலைவாய், தலைப்பேழை, ஊற்றுக்கால் என்னும் கிளைகளையும் வெட்டிக் கொள்ள அனுமதி அளித்தான் பரமேசுவரன்’ என்று எடுத்துரைக்கிறது. மகேந்திரவாடிக் கல்வெட்டு மகேந்திர தீர்த்தம் என்ற குளத்தைப் பற்றிய செய்தியினைக் கூறுகிறது.

உத்தரமேரூரின் ஜிவநாடியாக அமைந்தது வயிரமேகத் தடாகம். பல்லவ மன்னன் நந்திவர்மனுக்கு வயிரமேகன் என்ற சிறப்புப்பெயர் உண்டு. இப்பெயரால் அமைந்தது தான் வயிரமேகத் தடாகம் என்னும் ஏரி என்று உத்தரமேரூர் செப்பேடுகளும் கல்வெட்டுகளும் கூறுகின்றன.

கங்கை கொண்ட சோழபுரத்தில் மாமன்னன் இராசேந்திர சோழன், சோழ கங்கன் என்ற தன் பட்டப் பெயரால் சோழ கங்கன் என்ற ஏரியை உருவாக்கினான் இன்று பொன்னேரி என்று அழைக்கப்படுகிறது. அந்த ஏரியின் வடிகாலாக தனது சிறப்புப் பெயரான வீரநாராயணன் என்ற பெயரில் வீரநாராயண ஏரி என்ற பெயரில் உருவாக்கினான் இன்று வீராணம் ஏரி என்று வழங்கப்படுகிறது.

வறனுழக்கும் பைங்கூழ்க்கு வான் சோர்வினிதே, காய்ந்து வறண்டு கிடக்கும் பயிரினங்கள் மழையைக் கண்ட அளவிலேயே செழித்து வளரும். மேலும் சோலையை வளர்ப்பதை விடவும் பிற உயிர்களுக்கு உதவுவதெற்கென குளத்தைத் தோண்டுதல் மிகவும் இனிதாகும். பறவைகளும் விலங்குகளும் அனைத்து உயிரினங்களும் மகிழ்வுடன் வாழ உதவும் சோலைகளைவிட அச்சோலைகள் உருவாவதற்கும் மேலும் மேலும் வளர உறுதுணையாய் விளங்கும் நீரைச் சேமிக்கும் குளங்களைப் பாதுகாத்தல் ஒவ்வொரு இளைஞனின் பெருங்கடமையாகும். கடமையைச் செய்! பலனை எதிர்பாராதே! என்ற ஆன்றோர் வாக்கின்படி நீராதரங்களைச் சீர்படுத்தி நாட்டுக்கும் வீட்டுக்கும் நன்பயனாளிப்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

இன்ஸ்டா பக்கத்திலிருந்து வெளியேறியது ஏன்? - யுவன் விளக்கம்!

நாளை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

SCROLL FOR NEXT