தமிழ் மொழித் திருவிழா

தமிழ் வாழ்வில் கோவை

2nd Jan 2020 10:00 AM | புலவர் செந்தலை ந.கவுதமன்

ADVERTISEMENT

 

கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி என இன்று நான்கு மாவட்டங்களாக இருப்பவை முனபு ஒன்றுபட்ட கோவை மாவட்டமாக இருந்தவை. தொழில் நகரம் கோவை என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை. தமிழ் வளர்த்த எழில் நகரம் கோவை என்பது இன்னும் உணரப்படாத உண்மை. கோவை அமைந்துள்ள கொங்கு நாடு பெருமன்னர்களின் தனிக்குடையின் கீழ் எப்போதும் இருந்ததில்லை. அதனால் கோவையும் கொங்குநாடும் இங்கு நிகழ்ந்த தமிழ் வளர்ச்சிப் பணிகளும் தனிக்கவனம் பெறாமல் போயின. இன்றுள்ள கோவை நகரம் சங்க காலத்தில் மக்களின் வாழ்விடமாக மலர்ச்சி பெறவில்லை. சங்க இலக்கியத்துக்கு வளம் சேர்த்துள்ள ஊர்கள் கோவை நகரைச் சுற்றியுள்ள ஊர்களே.

சங்க இலக்கியப் புலவர்கள்
உடுமலையை அடுத்துள்ள குடிமங்கலத்தில் வாழ்ந்தவர் குடிமங்கலத்து பொதுனி நற்சேந்தனார். அகநானூற்றில் உள்ள 179, 232 இரு பாடல்களும் இவர் எழுதியவை.பல்லடம் வட்டம் கொடுவாயின் பழைய பெயர் குடவாயில். மேற்கு வாசல் என்பது இதன் பொருள் (தஞ்சை மாவட்டத்திலும் ஒரு குடவாசல் உள்ளது). கொடுவாயில் வாழ்ந்தவர் குடவாயில் கீரத்தனார் என்கிறது கொங்கு மண்டலச் சரகம். குறுந்தொகையில் இடம் பெற்றுள்ளது இவரது பாடல். பவானி அருகேயுள்ள பெருந்தலையூரில் வாழ்ந்தவர் பெருந்தலைச் சாத்தனார். அவர் எழுதிய பாடல்களை புறநானூறு, அகநானூறு, நற்றிணை முதலியவற்றில் காணலாம்.

தமிழ்ச் சங்கங்கள்
புலமையாளர்கள் ஒன்று கூடிச் சிந்திக்கவும், படைப்புகளை வரன்முறைப்படுத்திக் கொள்ளவும் உருவானவை தமிழ்ச் சங்கங்கள்.
விசயமங்கலம் தமிழ்ச் சங்கம்
காடையூர்த் தமிழ்ச் சங்கம்
கவசைத் தமிழ்ச் சங்கம்
கொங்குத் தமிழ்ச் சங்கம்
கோவைத் தமிழ்ச் சங்கம் முதலிய பல தமிழ்ச் சங்கங்கள் கோவையில் செயல்பட்டு வந்துள்ளன.

ADVERTISEMENT

விசயமங்கலம் தமிழ்ச் சங்கம் புகழ்மிக்கது. கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டு வரை செயல்பட்டுள்ளது. பெருங்கதை எழுதிய கொங்குவேளிர் விசயமங்கலத்தைச் சேர்ந்தவர். விசயமங்கலத்தை அடுத்த சீனாபுரத்தின் பழைய பெயர் சனகை. அவ்வூரில் பிறந்த பவணந்தி எழுதியதே நன்னூல். பெருங்கதையும் நன்னூலும் விசயமங்கலம் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்றப்பட்டவை.பொள்ளாச்சியை அடுத்துள்ள களந்தையில் வாழ்ந்தவர் குணவீரபண்டிதர். அவர் வச்சணந்திமாலை, நேமிநாதம் என்னும் இலக்கண நூல்களை இயற்றியவர்.

பொப்பண காங்கேயர் இயற்றிய உரிச்சொல் நிகண்டு எனும் அகராதி வகை நூலும் விசயமங்கலம் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்றப்பெற்றதே. சிலப்பதிகாரத்துக்கு உரையெழுதிய அரும்பத உரையாசிரியர், அடியார்க்கு நல்லார் இருவரும் விசயமங்கலத்தைச் சேர்ந்தோரே.

காப்பியங்கள்
தாராபுரத்தின் பழைய பெயர் வஞ்சிபுரம். இங்கு வாழ்ந்த திருத்தக்கத் தேவர் படைத்த சமணக் காப்பியம் சீவகசிந்தாமணி. விருத்தப்பாவில் அமைந்த முதல் காப்பியம் எனப் போற்றப்படும் இந்த காப்பியத்தை வழங்கிய பெருமை கோவைக்குரியது. விருத்தப்பாவில் சீவகசிந்தாமணியின் அடியொற்றி எழுந்ததே கம்பராமாயணம். இராமாயண கருத்துக்கு எதிராக எழுந்த இன எழுச்சிப் பெருங்காப்பியம் இராவண காவியம். தமிழில் தடை செய்யப்பட்ட முதல் காப்பியம் இதுதான். அரசின் ஒடுக்குமுறைக்கு 1948 இல் ஆளான இந்நூல், 1973}இல் தடை நீக்கப்பட்டு அனைவர் கைகளுக்கும் கிடைக்கத் தொடங்கியது. இராவண காவியம் படைத்தவர் பவானியில் வாழ்ந்த புலவர் குழந்தை.

கோவை பூ.சா.கோ. சர்வசன பள்ளித் தமிழாசிரியர் அ.கி.நாயுடு 4,030 வெண்பாக்களால் திருவள்ளுவர் வரலாற்றை எழுதி 1958 இல் வெளியிட்ட நூல் திருவள்ளுவர் காவியம். இராமாயணக் கதையை உடுக்கை போன்ற இசைக் கருவியை ஒலித்தபடி பாடுவதற்காக எழுந்தது தக்கை இராமாயணம். 3,250 பாடல்களைக் கொண்ட இந்த காப்பியத்தை வழங்கியவர் சங்ககிரியைச் சேர்ந்த பித்தர்பாடி என்னும் புலவர்.கொங்கு நாட்டில் எழுந்த பழமையான காப்பியமான தகடூர் யாத்திரை, இதுவரை முழு நூலாகக் கிடைக்காதது தமிழுக்கு இழப்பு.

சிற்றிலக்கியங்கள்
கோவை, உலா, அந்தாதி, பிள்ளைத் தமிழ் முதலிய சிற்றிலக்கிய வகை நூல்களையும் கோவை தந்துள்ளது. பேரூர், மருதமலை தொடர்பாக எழுந்துள்ள இந்நூல்களின் எண்ணிக்கை மிகுதி.சூலூர் இராயர் கோயில் புகழ்பாடும் நூல் சூரனூர் நொண்டி நாடகம். சிரவை ஆதீனம் கந்தசுவாமி அடிகள், தண்டபாணி பிள்ளைத் தமிழ், இராமானந்தசுவாமி பிள்ளைத் தமிழ் முதலிய ஆறு பிள்ளைத் தமிழ் நூல்களைப் பாடியுள்ளார்.

சிவன் மலைக் குறவஞ்சி, பூந்துறைக் குறவஞ்சி, அலகுமலைக் குறவஞ்சி முதலிய குறவஞ்சி நூல்களும் கொடுமுடிப் பள்ளு, வையாபுரி பள்ளு, திருச்செங்கோட்டுப் பள்ளு முதலிய பள்ளு நூல்களும் பேரூர் உலா, அவிநாசி உலா போன்ற உலா நூல்களும் கொங்குநாட்டில் தோன்றியவை.

சிந்துவெளி எழுத்து
தமிழினத் தொன்மையைக் காட்டும் சிந்துவெளி எழுத்துச் சான்றுகளைத் தமிழ் நாட்டில் கண்டறிந்துள்ள மூன்று இடங்களில் ஒன்று கோவை சூலூர். உலகின் முதன்மையான எழுத்தாகக் கருதப்படும் சிந்துவெளி எழுத்துகளின் 417 குறியீடுகளை ஆய்வாளர்கள் வகைப்படுத்தியுள்ளனர். கோவையில் 2010 ஆம் ஆண்டு நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் சிந்துவெளி எழுத்துகளை ஆய்ந்து corpus of indus seals and inscriptions எனும் நூல் தொகுதிகளாக வழங்கியுள்ள பின்லாந்து நாட்டுப் பேராசிரியர் அசுகோ பர்போலா அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியால் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார். சிந்துவெளி எழுத்துச் சான்றோடு கோவையில் கிடைத்த சூலூர்த் தட்டு இலண்டன் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படும் செய்தியை உலகின் பார்வைக்கு கொண்டு வந்தவர் அறிஞர் ஐராவதம் மகாதேவன்.

இதழ்கள்
கோவைத் தமிழ்ச் சங்கம் 1934 இல் வெளியிடத் தொடங்கி நான்காண்டு காலம் நடத்திய கொங்கு மலர் இதழின் ஆசிரியராகத் திகழ்ந்தவர் கோவைகிழார் கோ.ம.இராமச்சந்திரன் செட்டியார். கொங்குநாட்டு வரலாறு இவரின் புகழ்மிகு படைப்பு. கோவையில் வெளியிடப்பட்ட முதல் இதழ் கோயமுத்தூர் அபிமானி. 1879 ஆம் ஆண்டிலிருந்து இரண்டாண்டுகள் வெளிவந்த இந்த இதழை நடத்தியவர் சே.ப.நரசிம்மலு நாயுடு. கோவை நகரின் முதல் அச்சகமான கலாநிதி அச்சுயந்திரச் சாலையை 2.10.1881 இல் நிறுவியவரும் இவர்தான். சொந்த அச்சகம் உருவான பின் கோயமுத்தூர் கலாநிதி எனும் இதழை 15.10.1881 முதல் வெளியிட்டு வந்தார் சே.ப.நரசிம்மலு நாயுடு அவர்கள்.

கோவை சிறையில் இருந்தபோது இதழ் நடத்த முடிவெடுத்த தந்தை பெரியார், 1925 இல் குடி அரசு இதழையும், 1937 இல் விடுதலை இதழையும் ஈரோட்டில் இருந்து வெளியிட்டு வந்தார். விடுதலை இதழின் துணையாசிரியராக 1938 முதல் அறிஞர் அண்ணாவும், குடி அரசு இதழின் துணையாசிரியராக 1945 முதல் கலைஞர் மு.கருணாநிதியும் ஈரோட்டில் பெரியார் இல்லத்தில் தங்கிப் பணியாற்றி வந்தார்கள். பிற்காலத்தில் இருவரும் தமிழக முதலமைச்சர் பதவியை அலங்கரித்தார்கள்.

கோவையில் இருந்து 1971 அக்டோபர் முதல் வெளிவரத் தொடங்கிய வானம்பாடி இதழ், தமிழ் இலக்கிய வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் புதுப்பாய்ச்சலை உருவாக்கியது. இலக்கிய இதழாகக் கோவையிலிருந்து முதன் முதலில் வெளிவரத் தொடங்கியது வசந்தம். ஆர்.சண்முகசுந்தரத்தை ஆசிரியராக அமர்த்தி வெளியிட்டு வந்தவர், இந்தியாவின் முதல் நிதியமைச்சராகப் பதவி வகித்த ஆர்.கே.சண்முகம் செட்டியார்.

அறிவியல் தமிழுக்கு அறுபது ஆண்டுகளுக்கு மேல் வளம் சேர்த்து வரும் கலைக்கதிர் இதழ் பூ.சா.கோ. கல்வி நிறுவனத்தின் வழியாக வெளிவரக் காரணமானவர் முன்னாள் துணைவேந்தர் ஜி.ஆர்.தாமோதரன். கலைக்கதிர் இதழை அடியொற்றி அறிவியல் தமிழ் வளர்க்கும் இதழாக கோவை தி.சு.அவினாசிலிங்கம் மனையியல் கல்லூரி வெளியிட்டு வந்த இதழ் விஞ்ஞானச் சுடர்.

தமிழ், ஆங்கிலம் இருமொழி இதழை முதன் முதலில் கோவையில் நடத்தியவர் சாமிக்கண்ணு வின்சென்ட். மகாஜன நேசன் என்ற பெயரில் வார இதழாக வெளிவந்த அவ்விதழின் தமிழ்ப் பகுதியைப் பார்த்துக் கொண்டவர் கோவை அய்யாமுத்து. மகாஜன நேசன் போல இருமொழி இதழாக 1980 இல் கோவையிலிருந்து கு.வெ.கி. ஆசான் வெளியிட்டு வந்த இதழ்கள் இங்கும் அங்கும், ஊரும் உலகும். தமிழ்நாட்டின் முதல் திரைப்பட இதழாக பி.எஸ்.செட்டியார் வெளியிட்ட சினிமா உலகம், கோவையிலிருந்தே வெளிவந்தது. அதன் துணையாசிரியராகப் பணியாற்றி வந்தவர் வல்லிக் கண்ணன். திரைப்பட இதழாக நெடுங்காலம் வெளிவந்து கொண்டிருந்த பேசும்படம் இதழும் கோவையில் தொடங்கப்பட்டு பின்னர் சென்னைக்கு இடம் மாறியது.

முதன்மைச் சிறப்பு
தமிழில் வெளிவந்த முதல் பயண நூல் தட்சிண இந்திய சரித்திரம், எழுதியவர் கோவை சே.ப.நரசிம்மலு நாயுடு. தமிழில் வெளியான முதல் இதழியல் வரலாற்று நூல், கோவை வி.நா.மருதாசலக் கவுண்டர் எழுதி கோவைத் தமிழ்ச் சங்கம் 1935 ஆம் ஆண்டு வெளியிட்ட இந்திய பத்திரிகைத் தொழிலியல் என்னும் நூல். தமிழில் வெளியான முதல் தன் வரலாற்று (சுயசரிதை) நூல் குருபரத் தத்துவம், கோவை சரவணம்பட்டி கவுமார மடாலயத்தை நிறுவிய இராமானந்த அடிகளாரின் ஆசிரியர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் எழுதிய இந்நூல், 1882இல் வெளிவந்தது.

தமிழ்க் காப்பு முயற்சிகள்
இந்தி திணிப்பை எதிர்த்து 1938 இல் தொடங்கிய முதலாவது மொழிப் போரில் 3.6.1938 ஆம் நாள் கைது செய்யப்பட்டு முதலாவது வீரராக சிறை சென்றவர் பல்லடம் பொன்னுசாமி.  கோவை நகரம் 1950 ஆம் ஆண்டு இருபெரும் தமிழ் மாநாடுகளைக் கண்டது. சென்னை மாநில அரசு சார்பில் தமிழ் வளர்ச்சிக் கழகம் 1950 மே 20, 21 இருநாள்கள் கோவை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் நடத்தியது தமிழ் வளர்ச்சி மாநாடு. அதே ஆண்டு திராவிடர் இயக்கம் சார்பில் கோவை இரத்தின சபாபதிபுரம் சாஸ்திரி மைதானத்தில் 1950 மே 27, 28 இரு நாள்கள் நடத்தப்பட்டது முத்தமிழ் வளர்ச்சி மாநாடு. இம்மாநாட்டில் முத்தமிழ்ப் பெருமன்றம் நிறுவப்பட்டுத் தலைவராக நாவலர் ச.சோமசுந்தர பாரதியாரும் செயலராக பாவேந்தர் பாரதிதாசனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவ்விரு மாநாடுகளின் விளைவாகத் தமிழின் ஆழ, அகலத்தை விரிவாகக் கற்பிக்கும் தமிழ்க் கல்லூரியின் தேவை உணரப்பட்டு பேரூர் திருமடம் 1953இல் சாந்தலிங்கர் தமிழ்க் கல்லூரியைத் தொடங்கியது. தமிழுக்கு வலிமையும் வளமும் சேர்க்கும் படைப்பாளிகளும் பதிப்பகங்களும் அமைப்புகளும் நிறுவனங்களும் நிரம்பி நிற்கும் இலக்கியப் பாடி வீடாக இன்று வரைத் தனித் தன்மையுடன் திகழ்ந்து வருகிறது கோவை.

ADVERTISEMENT
ADVERTISEMENT