தமிழ் மொழித் திருவிழா

தனிநாயக அடிகளின் தமிழாய்வுப் பணிகள்

2nd Jan 2020 10:09 AM | அமுதன் அடிகள், தனிநாயக அடிகள் தமிழியல் நிறுவனம்

ADVERTISEMENT


இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி தமிழகத்தில் கல்வி வளர்ச்சி காணத் தொடங்கிய காலம் எனலாம். பல கல்வி நிலையங்கள் தோன்றிய காலம் அது. அதன் விளைவாகத் தமிழ் ஆராய்ச்சி தளிர்விடத் தொடங்கிய காலமும் அதுவே. உ. வே. சாமிநாத ஐயர் சி. வை. தாமோதரம் பிள்ளை எஸ். வையாபுரிப் பிள்ளை மறைமலை அடிகள் போன்றோர் தமிழ் நூல்களை ஆராய்ச்சி நோக்குடன் பதிப்பித்த காலம் அது. ஆகவே கல்வி வளர்ச்சியோடு ஆராய்ச்சியும் முளைவிடத் தொடங்கியது.

    ஆயினும் தமிழ் ஆராய்ச்சி ஒரு வரையறைக்குள் அடங்கியிருந்த காலமே அது எனலாம். இலக்கியமும் இலக்கணமுமே தமிழ் ஆராய்ச்சிககுத் தகுந்த துறைகள் என அக்காலத்து அறிஞர்கள் எண்ணியிருந்தது போலத் தோன்றுகிறது. இந்நிலையை மாற்றி தமிழ் இலக்கிய இலக்கணங்களோடு தமிழரின் கலைகள் வாணிகத் தொடர்புகள் வாழ்க்கை நிலை உளவியல் அயல்நாட்டுத் தொடர்புகள் போன்றவையும் ஆராயப்பட வேண்டும் எனத் தமிழ் ஆராய்ச்சியில் மறுமலர்ச்சியைத் தோற்றுவித்த பெருமை சேவியர் தனிநாயக அடிகளாருக்கு உரியது. தமிழ் ஆராய்ச்சி தமிழ்மொழியில் மட்டுமில்லாமல் பிறமொழிகளிலும் - குறிப்பாக ஆங்கிலத்திலும் பதிவாக வேண்டும் என உறுதியாக நம்பிய அவர் Tamil Culture என்னும் ஆங்கில முத்திங்கள் ஆய்விதழை 1952- ஆம் ஆண்டில் தொடங்கினார். உலகின் பல்வேறு பல்கலைக்கழகங்களையும் சென்றடைந்த அவ்விதழ் உலகளாவிய தமிழாராய்ச்சிக்கு வழிவகுப்பதாயிற்று. தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிராத பிற நாட்டு அறிஞர்களும் தமிழ் ஆய்வில் ஈடுட்டு தங்கள் ஆங்கிலக் கட்டுரைகளை Tamil Culture இதழில் வெளியிடுவதைப் பெருமையாகக் கருதினர்.
    
இத்தகைய ஆய்வுகளை ஒருங்குபடுத்திட உலகத் தமிழறிஞர்களைக் கொண்ட அமைப்பு ஒன்றினை நிறுவவும் அடிகளார் திட்டமிட்டு அதில் வெற்றியும் கண்டார். அவரது அரிய முயற்சியின் விளைவாக உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் 1964- ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. அடிகளார் நிறுவிய உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் பெரும் முயற்சியால் பத்து உலகத் தமிழ் மாநாடுகள் இதுவரை நடந்திருக்கின்றன.  உலகின் பல்வேறு நாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமிழ் இன்று கற்பிக்கப்படுகிறது. தமிழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத எத்தனையோ பிற நாட்டு அறிஞர்கள் இன்று தமிழியல் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மலேசியப் பல்கலைக் கழகத்தின் இந்தியத் துறைத் தலைவராகவும் பேராசிரியராகவும் 1961 –ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்த அடிகளார் தமிழக  அரசின் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் உறுப்பினராகவும் இருந்தார். 26.07.1963 அன்று நடைபெற்ற தமிழ் வளர்ச்சிக் கழகக் கூட்டத்தில் கலந்து கொண்டபோது இந்தியாவிலும் பிற நாடுகளிலும் பல்கலைக் கழகங்களில் பணிபுரியும் தமிழ்ப்பேராசிரியர்களை ஒன்று கூட்டி ஆண்டு தோறும் உலக அளவில் தமிழ் ஆராய்ச்சிக் கருத்தரங்கம் நடத்தத் தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்னும் கருத்தை அடிகளார் முன் வைத்தார். தமிழ் வளர்ச்சிக் கழகமும் தமிழக அரசும் அக்கருத்தை ஏற்றுக் கொண்டன. 1964 –ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற உலகக் கீழ்த்திசை அறிஞர்கள் மாநாட்டிற்குப் பின்பு அதனை நடத்தலாம் என்று தமிழக அரசு திட்டமிட்டது. ஆயினும் அக்கருத்தரங்கம் நடைபெறவில்லை.
    
1964 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் ஆறாம் நாள் முதல் 10 –ஆம் நாள் வரை டெல்லியில் உலகக் கீழ்த்திசை அறிஞர்கள் மாநாடு நடைபெற்றபோது அதில் கலந்து கொண்ட தமிழறிஞர்களை ஒன்று கூட்டி உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தினை நிறுவ அடிகளார் திட்டமிட்டார். அவ்வாறே பல நாடுகளிலிருந்து வந்திருந்த தமிழ் அறிஞர்களும் இந்தியவியல் அறிஞர்களும் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தை அடிகளாரும் முதுமுனைவர் வ. அய். சுப்பிரமணியம் அவர்களும் ஏற்பாடு செய்தனர். அக்கூட்டத்தில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் அமைத்துப் பணிபுரிய வேண்டியதன் இன்றியமையாமையைப் பற்றி அடிகளாரும் கமில் சுவலபிலும் வலியுறுத்திப் பேசிய பின் மன்றம் அமைக்கப்பட்டது. பேராசியர் ஃபீலியோசா உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவராகவும் பேராசிரியர்கள் தாமஸ் பர்ரோ எம்.பி எமனோ எஃப்.பி.ஜே. கிய10ப்பர் தெ. பொ. மீனாட்சி சுந்தரம் மு. வரதராசன் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும் பேராசிரியர்கள் கமில் சுவலபில் சேவியர் தனிநாயக அடிகள் ஆகிய இருவரும் பொதுச்செயலாளர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இம்மன்றமே கோலாலம்பூரில் நடந்த முதல் உலகக் தமிழ் மாநாடு தொடங்கி எல்லா மாநாடுகளையும் நடத்தி வருகிறது.

    தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவரே ஆயினும் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் உரோமையிலும் கல்வி பயின்றபோதெல்லாம் தமிழைக் கற்றுக் கொள்வதில் ஆர்வமே இல்லாதிருந்தார் தனிநாயகம். ஐரோப்பிய மொழிகளைக் கற்றுத் தேர்வதில் அதிலும் ஆங்கிலத்தில் தனிப்புலமை பெறுவதில் தான் அவ்வமயம் தனிக் கவனம் செலுத்தினார். எனினும் 1945-ஆம் ஆண்டு தம் 32 –ஆம் வயதில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தமிழ் பயில அவர் முன் வந்தது விந்தையிலும் விந்தை என்றே கூறவேண்டும். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வடக்கன்குளத்தில் 1941 முதல் உயர்நிலைப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வந்த காலத்தில் அவர் தமிழரிடையே தமது பணியைச் செவ்வனே ஆற்றுவதற்காகத் தமிழ் கற்க முற்பட்டார். அவ்வமயம் சங்க இலக்கியத்தின் சிறப்பு அவர் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. ஆகவே அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தமிழ் பயில் முடிவு செய்தார். பல்கலைக்கழகத்தில்  அன்று தமிழ்ப் பேராசிரியர்களாகப் பணிபுரிந்த தெ. பொ. மீனாட்சி சுந்தரனாரும் சிதம்பரநாதன் செட்டியாரும் தமிழ் ஆய்வில் ஈடுபட அடிகளாரை ஊக்குவித்தனர்.

ADVERTISEMENT

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அடிகளார் நான்கு ஆண்டுக்காலம் பயின்று தமிழ் முதுகலை இலக்கிய முதுகலை ஆகிய இரு பட்டங்களையும் பெற்றார். இலக்கிய முதுகலைப் பட்டத்துக்காகப் ‘பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை’ என்னும் தலைப்பில் அவர் ஆய்வு செய்து எழுதிய நூல் ‘பழந்தமிழ் இலக்கியங்களைப் பற்றி இதுவரை எழுதப்பட்டவை அனைத்தையும் பலவகையிலும் விஞ்சி நிற்கின்றது’ என்று ஐரோப்பியத் திராவிடவியல் பேரறிஞராகிய முனைவர் கமில் சுவலபில் அவர்களால் மதிப்பீடு செய்யப்பட்டது.

    அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றபோது தமிழை நிறைவாகப் பயின்று தமிழின் சிறப்பை ஆய்ந்தறிந்த அடிகளார் அதை உலத அரங்கில் எடுத்தோதுவதைத் தமது தலையாய கடமை என்று உணர்ந்தார். ஆகவே 1949-50- ஆம் ஆண்டுகளில் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பயணத்தை மேற்கொண்டு  தமிழ்த் தூது நிகழ்த்தினார். அவ்வமயம் ஜப்பான் அமெரிக்க ஐக்கிய நாடு பிரேசில் எக்குவதோர் பெரு மெக்சிக்கோ இத்தாலி முதலிய பல நாடுகளுக்குச் சென்று உரை நிகழ்த்திய அடிகளார் அமெரிக்க ஐக்கிய நாட்டில் மட்டும் தமிழின் சிறப்பைப் பற்றி ஒரே ஆண்டில் 200 விரிவுரைகள் ஆற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்தம் அற்புதமான ஆய்வுரைகள் ஏற்கெனவே இந்தியவியல் ஆய்வில் ஈடுபட்டிருந்த – ஆனால் தமிழ் பற்றி மிகுதியும் அறிந்திராத பல மேனாட்டு அறிஞர்களின் கண்களைத் திறந்தன. அவர்களுள் பலரைத் தமிழாய்வில் ஈடுபட ஊக்குவித்த அடிகளார் பல்வேறு மேனாட்டுப் பல்கலைக் கழகங்களில் தமிழ்த்துறை அமைந்திடவும் வழிவகுத்தார். 
    
 இவ்வாறு இந்தியாவிலும் இலங்கையிலும் மட்டும் பல்கலைக்கழகங்களில் தமிழாய்வு மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையை மாற்றி உலக அரங்கில் பல நாடுகளில் தமிழாய்வு நடைபெற வழிவகுத்த பெருமை அடிகளாருக்கு உரியது. இந்திய நாகரிகத்தின் முழுமையையும் இலக்கியச் செழுமையையும் உரிய முறையில் ஆராய்ந்து அறிய வடமொழி அறிவோடு தமிழறிவும் இன்றியமையாதது என்பதை அறிஞர் உலகத்துக்கு அடிகளார் தெளிவாக உணர்த்தினார்.

    தமிழாய்வுக் கட்டுரைகளைத் தமிழில் மட்டும் படைத்தால் போதாது அவை ஆங்கிலத்திலும் வடிக்கப்பட்டால் தான் உலக அரங்கினைச் சென்றடைய முடியும் என்பதால் தமிழாய்வுக்காக ஆங்கில இதழ் ஒன்று வெளியிடப்படுவது அவசியம் என்பதைத் தம் உலகத் தமிழ்த் தூதுப் பயணத்தின் போது அடிகளார் உணர்ந்தார். இத்தேவையை நிறைவு செய்ய 1952 – ஆம் ஆண்டில்  Tamil Culture என்னும் ஆங்கில முத்திங்கள் இதழை அடிகளார் வெளியிடத் தொடங்கினார். இது தனியொருவர் மேற்கொண்ட தனிப்பெரும் முயற்சி என்பது மட்டுமல்ல 12 ஆண்டுகளுக்குப் பின்பு உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகம் தோன்ற வழிவகுத்ததும் ஆகும். மேனாடுகளைச் சார்ந்த தமிழ் அறிஞர்களாகிய கமில் சுவலபில் ஜான் ஃபீலியோசா எ. ஆந்திரனோவ் எம். பி. எமனோ அர்னோ லேமன் எஃப். பி.ஜே. கியூப்பர் ஜெ. ஆர். மார் எட்கர் நோல்ட்டன். சி. ஆர். பாக்ஸர் தாமஸ் பர்ரோ போன்ற மேனாட்டு அறிஞர்களும் இந்திய இலங்கைத் தமிழறிஞர்களும் எழுதிய ஆய்வுக்கட்டுரைகளைத் தாங்கி வந்த இவ்விதழ் பல மேனாட்டு பல்கலைக்கழகங்களின் நூலகங்களில் இடம் பெற்ற சிறப்புக்குரியதாகும்.

    பல்வேறு காரணங்களால் Tamil Culture இதழினைத் தொடர்ந்து நடத்த அடிகளால் இயலாமல் போயிற்று. ஆகவே 1966- ஆம் ஆண்டில் அவ்விதழ் நிறுத்தப்பட்டது. எனினும் அத்தகைய ஓர் ஆய்விதழின் இன்றியமையாத் தேவை தமிழறிஞர்களால் உணரப்பட்டதால் புதிய ஆய்விதழ் ஒன்றினை வெளிக்கொணரும் முயற்சியில் அடிகளாரே ஈடுபட வேண்டியதாயிற்று. எனவே அடிகளாரையே தலைமை இதழாசிரியராகக் கொண்டு Journal of Tamil Studies வெளியிடப்பட்டது. சென்னையில் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் ஏற்படுத்தப்பட்ட பின்னர் இவ்விதழ் அந்நிறுவனத்தின் சார்பில் வெளிவரத் தொடங்கியது.

    தமிழ் சார்ந்த எல்லாத் துறைகளுமே தமிழ் ஆய்வுக்கு உட்பட்டவைதாம் என்பதைத் தம் இதழ் மூலம் அடிகளார் வலியுறுத்தி வந்தார். தென்னிந்திய இந்திய மொழி இலக்கியங்களோடு மட்டுமல்லாமல் பிற நாட்டு இலக்கியங்களோடும் தமிழ் இலக்கியங்களை ஒப்பிட்டு ஆய்வு செய்வது தமிழ் வளர்ச்சிக்கு உறுதுணை புரியும் என்று அவர் உறுதியாக நம்பினார். அவரது எம். லிட். முனைவர் பட்ட ஆய்வேடுகளும் திருவள்ளுவர் பற்றி அவர் நிகழ்த்திய அறக்கட்டளைச் சொற்பொழிவுகளும் இத்துறையில் அடிகளாரின் ஈடுபாட்டைத் தெளிவாக விளக்குகின்றன.

    தமிழில் முதன் முதலாக வெளியிடப் பெற்ற கார்தில்யா தம்பிரான் வணக்கம் கிரிசித்தியானி வணக்கம் அடியார் வரலாறு போன்ற பல நூல்களை ஐரோப்பிய நூலகங்களில் ஆய்வு செய்து அவர் கண்டு பிடித்துத் தமிழ் உலகுக்கு வெளிப்படுத்தினார். அவ்வாறே 1679- ஆம் ஆண்டு அச்சிடப் பெற்ற தமிழ் - போர்த்துக்கேய அகராதியைக் கண்டுபிடித்து அதனை மறு பதிப்பாக 1966- ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடந்த  உலகத் தமிழ் மாநாட்டின்போது வெளியிட்டார். அடிகளாரின் முயற்சி இல்லையெனில் முதலில் அச்சேறிய இவ்வரிய தமிழ் நூல்கள் நமக்குக் கிடைக்காமலே போயிருக்கும். இதனால் 16- ஆம் நூற்றாண்டிலேயே கத்தோலிக்கக் குருக்களால் தமிழ் அச்சகம் நிறுவப்பட்டது என்னும் உண்மையும் இந்திய மொழிகளுள் தமிழிலேயே முதன் முதலாக நூல்கள் அச்சிடப்பெற்றன என்னும் உண்மையும் அடிகளாரால் நிறுவப்பட்டது.

    உரோமை கிரேக்கப் பேரரசுகளுடன் பழந்தமிழகம் கொண்டிருந்த வாணிக உறவுகளை நாம் அறிவோம். ஆனால் கிழக்காசிய நாடுகளுடன் அன்றைய தமிழகம் கொண்டிருந்த அரசியல் உறவு காரணமாகப் பண்பாட்டு உறவும் ஏற்பட்டது என்பதை அடிகளார் தாம் முதன் முதலில் ஆராய்ந்து வெளிப்படுத்தினார். தாய்லாந்து மன்னர்களின் முடிசூட்டு விழாவின் போது திருவாசகம் ஓதப்படுவதையும் கம்போடியக் கோவில்களில் திராவிடக் கலைத் தாக்கம் காணப்படுவதையும் அடிகளார் கண்டுபிடித்து வெளிப்படுத்தியிருக்கிறார். அவ்வாறே கம்போடியா தாய்லாந்து நாடுகளின் மொழிகளில் பல தமிழ்ச் சொற்கள் இடம்பெற்றிருப்பதையும் அடிகளார் சுட்டிக்காட்டியுள்ளார். இத்துறையில் முதன்முதலாக ஆய்வு செய்தது அடிகளாரே என்பது பன்மொழிப்புலவர் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் போன்ற பேரறிஞர்கள் ஏற்றுப் போற்றும் உண்மையாகும்.

     தமிழ் ஆங்கிலம் இலத்தீன் இத்தாலியம் பிரெஞ்ச் ஜெர்மன் போர்த்துக்கேயம் ஸ்பானிஷ் ஆகிய பல மொழிகளைக் கற்றிருந்தார் அடிகளார். ஆகவே அம்மொழிகளிலெல்லாம் தமிழ் மொழிபற்றி ஆய்வுரை நிகழ்த்தவும் ஆய்வுக் கட்டுரை வடிக்கவும் வல்லவராகத் திகழ்ந்தார். இதனாலேயே மேலை நாடுகளில் தமிழின் சிறப்பை எளிதாகப் பரப்பிட அடிகளாரால் இயன்றது எனலாம். தங்கள் பல்கலைக்கழகத்தில் தமிழ்பற்றிய ஆய்வுரை நிகழ்த்துமாறு பல ஐரோப்பிய அறிஞர்கள் அடிகளாரை அழைத்துப் பயன்பெற்றனர். மலேசியப் பல்கலைக்கழகத்தில் இந்தியத் துறைத் தலைவராக எட்டு ஆண்டுக்காலம் பணிபுரிந்த அடிகளார் பல புதிய பொருள்பற்றியும் துறைகள் பற்றியும் அப்பல்கலைக்கழகத்தில் தமிழாய்வு நடைபெற வழிகோலினார். அந்த்தாம் தெ ப்ரோயென்சா அடிகள் இயற்றிய தமிழ; போர்த்துக்கேய அகராதியின் மறுபதிப்புக்குத் தனிநாயக அடிகளார் எழுதியுள்ள அரிய ஆய்வுரை அறிஞருலகத்தின் பாராட்டினைப் பெற்றதாகும்.

    பேராசிரியப் பணி ஆய்வுப் பணி உலக அரங்கில் தமிழ்த் தூதுப்பணி கள ஆய்வுப் பணி ஆய்விதழ் ஆசிரியப் பணி உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தை நிறுவி உலகத் தமிழ் அறிஞர்களை ஒருங்கிணைத்து உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கருத்தரங்கம் நடைபெற வழிகோலிய பணி மறைந்த தமிழ் நூல்களைக் கண்டுபிடித்து வெளிக்கொணர்ந்த பணி கிழக்காசிய நாடுகளில் தமிழ்ப்  பண்பாடு பரவியிருத்தலைக் கண்டு உணர்த்திய பணி போன்ற பல பணிகள் மூலம் தனிநாயக அடிகளார் தமிழ் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT