தமிழ் மொழித் திருவிழா

மலையின் மேல் அறவிளக்கு

30th Dec 2019 10:00 AM | பேராசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியன், தஞ்சாவூர்.

ADVERTISEMENT

 

மலையின் மீது விளக்கேற்றி வைத்தால் நன்றாகத்தான் இருக்கும். அதுதான் திருவண்ணாமலையில் கார்த்திகைத் திருவிழாவன்று ஏற்றுகின்றார்களே. ஐம்பது கல் தொலைவுக்கு எல்லோரும் கண்டு வழிபடுகின்றனர். அவ்விளக்கு லட்சக்கணக்கான மக்களால் ஏற்றப்படும் நெய் விளக்கு. இறைவனை நெருப்பு வடிவில் கண்டு வணங்கும் சோதி விளக்கு. இங்கு நாம் காணப்போவது மலையின் மீது ஏற்றப்பட்ட ஓர் அறவிளக்கு. என்ன இது புதிராக இருக்கிறதே என்று எண்ணுகிறீர்களா? மேலே படியுங்கள்.

1969 ஆம் ஆண்டு நான் வேலூர் ஊரிசு கல்லூரியில் விரிவுரையாளராகப் பணி செய்து கொண்டிருந்த காலம். அதுவும் கார்த்திகை மாதம்தான். ஒரு விடுமுறை நாள் மதிய வேளையில் நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து எங்காவது சுற்றுலாப் போக எண்ணினோம்.

வேலூர் நகரிலிருந்து சில கல் தொலைவில் உள்ள ஓட்டேரியைக் கடந்து சென்றால் பாலமதி என்றொரு மலை இருப்பதாகவும், அருவிகள் தவழும் இனிய காட்சியும், பல்வகைப் பறவைகள் தம் குரல் எழுப்பி இன்னிசை புரியும் அழகிய சூழலும், இயற்கையின் பல கோல எழில் விளங்கும் சுற்றுப்புறமும் நம்மை நாமே மறக்கச் செய்யும் என்றார் நண்பர்.

ADVERTISEMENT

எல்லோரும் மிதிவண்டியில் புறப்பட்டோம். சம தளத்தில் மிதிவண்டி ஓட்டலாம். ஏறுமுகமான ஒரு பகுதியில் நாங்கள் களைத்துப் போனோம்.

மிதிவண்டிகளைத் தள்ளிக் கொண்டே நடந்தோம். நாங்கள் என்ன தள்ளாதவர்களா? எங்களுடன் வந்த அந்தப் பகுதியைச் சார்ந்த நண்பர் இன்னும் கொஞ்சத் தொலைவுதான் என்றார். இந்தக் கிராமத்தவர்களுக்கே தொலைவு தெரியாது. கூப்பிடு தூரம்தான், கண்ணுக்கெட்டிய தூரம்தான். கால் நடக்கும் தொலைவுதான் என்பார்கள். ஆனால், போகப் போகக் கண்ணன் திரெüபதிக்கு விட்ட சேலைபோலப் போய்க் கொண்டே இருக்கும்.

நல்ல வேளை. விறகுச் சுமையோடு எதிரே வந்த ஒரு முதிய பெண்மணி எதிர்ப்பட்டார்.

அம்மா! பாலமதிக்கு எப்படியே போகனும். விறகுக் கட்டு சுமக்கும் களைப்பை ஒற்றைக் கை கொண்டு முந்தானையால் துடைத்துக் கொண்டு எங்களுக்கு விடை கூறினார்.

"தா மேட்டு மேலே ஏறுங்க, அப்புறம் அங்கிருந்து இழிங்க" என்றார் எங்கள் புருவங்கள் உயர்ந்தன. "அதாமையா இறங்குங்க..." அவர் சற்றே நிறுத்தினார்.

ஓ! இழிங்க என்றால் இறங்குங்கள் என்று பொருளா? தலையின் இழிந்த மயிரனையர் என்றாரே அந்த இழிதல்தானோ? நாங்கள் ஒருவருக்கொருவர் வியப்பைப் பார்வையில் பகிர்ந்து கொண்டோம்.

இழிஞ்சதுக்கு அப்புற மேலுக்கு பாருங்க. கெழக்கால நெட்டுக்குத்தா ஒண்ணு, கம்பங் குதிர்க் கணக்கா ஒண்ணு. பெருங்கல் மேல பெருங்கல்லா அடுக்குப் பானை மாதிரிக்க ஒண்ணு நெறய கண்ணுக்குத் தெரியும். கறவை மடி சுரக்குறாப்பல அருவி ஒழுக்கமா இருக்கும். சில்லுன்னு மூஞ்சில சாரலடிக்கும். அதுதான் பாலமதி. போங்க" சொல்லிவிட்டு விறகுக் கட்டு அம்மையார் போய்விட்டார்.

ஔவையாரோ என எங்கள் உள்ளத்தில் ஓர் ஐயம். நாங்கள் மேட்டிலே ஏறினோம். பின்பு இறங்கினோம். இல்லை இழிந்தோம்.

பச்சைப் பட்டு விரித்தது போல் பசும் புல் பரப்பு. சில்லென்று தென்றல் முகத்தில் பன்னீர் தெளித்தது. ஒரு பாறையின் மீது மயில் தோகையை விரித்துக் கழுத்தை நிமிர்த்தி அருவியின் ஜதிக்கேற்ப நொச்சி இலை போன்ற காலை முன்னுக்குப் பெயர்த்து வைத்தது. இதுபோல ஒரு காட்சியைப் புரட்சிக் கவிஞர் பார்த்திருப்பார் என்பது தெரிந்தது. இல்லாவிட்டால்,

குயில் கூவிக் கொண்டிருக்கும் கோலம் மிகுந்த
மயிலாடிக் கொண்டிருக்கும்; வாசம் உடைய நற்
காற்றுக் குளிர்ந்தடிக்கும்...

 என்ற பாட்டுப் பிறந்திருக்குமா?

நாங்கள் நிமிர்ந்து பார்த்தோம். வெவ்வேறான உயர விகிதங்களில் மலைகள். அவற்றையெல்லாம் மலைகள் என்ற ஒரு பெயரால் சொல்லலாமா என்று எங்களுக்குள் விவாதம் எழுந்தது.

மிகப் பெரியது, மலைக்க வைப்பது மலை; மலையை நோக்க உயரம் குறைந்து நிற்பது குன்று. அந்த அம்மையார் சொன்னது போல ஓங்கி உயர்ந்து நெட்டுக் குத்தா நிற்பது ஓங்கல்; பானை மேல் பானைப் போலப் பாறை மேல் பாறையாய் அடுக்கிய தோற்றம் உடையது அடுக்கம். ஒற்றை வெளியில் தனியே நிற்பது வெற்பு. எல்லையை வரையறுப்பது வரை; செல்லும் வழியில் குறுக்காகக் கிடப்பது விலங்கல். பிளவும் பிரிப்புமின்றி மாப்பிள்ளைக் கல் போல இருப்பது பெருங்கல். வளைந்து செல்வது கோடு. செறிந்தும் திணிந்தும் இருப்பது இறும்பு. (இறுப்பூர், எறும்பூர், திருவெறும்பூர்) இப்படிப் பல பெயர்களைப் பற்றிய ஆராய்ச்சியில் நாங்கள் இறங்கியிருந்தபோது ஒரு நண்பர் வியப்பு மேலிட்டு 'அதோ பாருங்கள் அதோ பாருங்கள்' என்றார்.

அங்கே ஒரு குன்று. அதன் அகன்ற நெற்றியில் சுண்ணாம்பு நீற்றால் பெரிய பெரிய எழுத்துகளில் எழுதப்பட்டிருந்தது. ஒரு திருக்குறள்.

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.

சறுக்கலான குன்றில் ஏறி வாளியில் கரைத்த சுண்ணாம்பு கொண்டு தூரிகையால் பெரிய, பெரிய எழுத்துகளில் இஃது ஒரு குன்று இதனைப்போல் உயர்ந்த நிலையடைந்தவர்களின் சினத்தை ஒரு கணப்போதும் தாங்க இயலாது (பரி) என்ற பொருளுடைய குறளை எழுதியிருக்கிறார்; எழுதத் தக்க இடம் தெரிந்து எழுதியிருக்கிறார். அவர் யாரோ? என்ன பேரோ? ஏன் அவர் பெயரை எழுதாமற் போனார்? அவர் குணமென்னும் குன்றேறி நின்றவராதலால்.

நண்பர் மற்றொருவர் 'அதோ பாருங்கள்' என்று மேற்கில் இருந்த ஒரு குன்றைக் காட்டினார். அதில்,

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்.

என்று எழுதப்பட்டிருந்தது. அதன் பக்கத்தே மற்றொரு குன்று அதிலும் தெய்வப் பாவலர் திருக்குறள்.

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்னகத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை.

ஆம்! உண்மைதான். வினைக்குரிய ஒரு பொருளைக் கையிலே வைத்துக் கொண்டு அவ்வினையைச் செய்பவன் குன்றின் மேலே இருந்து கொண்டு யானைப் போரைப் பார்ப்பது போல அச்சமும் இல்லை; பாதுகாப்பும் ஆகும். குன்றத்தைக் குறித்த மற்றொரு குறளும் ஒரு குன்றில் மாக்கோலம் போட்டாற் போலத் தீட்டப் பெற்றிருந்தது. (898)

கிழக்கே சுவர் வைத்தது போல ஒரு மலை. அதிலிருந்து கறந்துவிட்ட பால் போல அருவி ஒழுகிக் கொண்டிருந்தது. அதன் மேலே

இருபுனலும் வாய்ந்த மலையிலும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற் குறுப்பு

என்ற அறவிளக்கு வெள்ளைச் சுடர் விட்டது. மற்றொரு பெரிய மலையிலும் ஒரு திருக்குறள் தகதகத்தது. (742)

இவற்றையெல்லாம் இந்தக் குன்றுகளிலும் மலைகளிலும் உயிர்க்கு நேரக்கூடிய எந்தத் துன்பத்தையும் பொருட்படுத்தாது திருக்கோட்டியூர்க் கோபுரத்தில் ஏறி நின்று வாரும் சகத்தீரே! நாராயண மந்திரத்தைக் கேட்டுக் கொள்ளுங்கள்' என்று உலக உபகாரமாகப் பெரியவர் இராமானுஜர் சொன்னதைப் போல் இந்தப் பாலமதி மலையிலும், குன்றிலும், 'உலகமே! இந்த அற விளக்கைக் காணுங்கள்' என்று சொல்லுவது போலத் திருக்குறளைப் பொறித்த அந்த மாமனிதர் யாரோ?

கண்ணெதிரே எல்லா மலைகளையும் விட ஓங்கி அகன்று நிற்கும் மலையை நாங்கள் கண்டோம். ஓ! எவ்வளவு பெரிய மலை? இந்த மலையை விட உலகில் வேறு எது உயர்ந்தோங்கி நிற்க முடியும்? என்று எங்கள் உள்ளத்தில் எழுந்த வினாவுக்கு அந்த மலையில் அந்தப் பெயர் தெரியாத சான்றோர் எழுதி வைத்த குறள் விடை கூறிற்று.

நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரியது.

எந்தச் சூழ்நிலையிலும் அசையாமல் நிலை கலங்காது, பிறர்க்கு உதவி செய்வதே வாழ்வின் குறிக்கோள் என்று வாழ்பவருக்கு முன் இந்த மலை எம்மாத்திரம்? இந்த மலைக்கும் சோதனைகள் வரலாம். எரிமலை இதனுள் வெடிக்கலாம். பூமி பிளந்து மலையே ஆழ்ந்து கடலுக்குள் மறையலாம். ஆனால், சான்றோர், பண்பாடுமிக்க பெரியவர் புகழ் என்ற மாமலை கால வெள்ளத்தில் கரையுமா? புத்தரின் சாந்தம், இயேசுவின் அருள் கனிந்த நோக்கும், முகம்மது நபியின் அஞ்சாமையும், வள்ளலாரின் அடக்கமும், காந்தியடிகளின் சான்றாண்மையை வெளிப்படுத்தும் இந்த மலையால் காட்ட முடியாதே என்றது அந்த அறவிளக்கு.

ADVERTISEMENT
ADVERTISEMENT