தமிழ் மொழித் திருவிழா

இலக்கியத்தில் காவேரி

29th Dec 2019 03:07 AM | திருக்குறள் சு. முருகானந்தம் எம்.ஏ.பிட்.

ADVERTISEMENT

 

மனித குலத்தின் நாகரிகத்தின் தொட்டில் நதிகளேயாகும். நதிகள் உயிர்கள் வாழ ஊற்றாய் அமைந்துள்ளன. அதேபோல் நாகரிகம், பண்பாடு வளரவும், முழுமுதல் காரணங்களாக உள்ளன. நீர் வானின்று வருவது. இந்த நீரே மனித சமூகத்தின் ஒழுக்கத்திற்கும் இன்றியமையாதது என்பதை,

நீரின்றி அமையாது உலகுஎனின் யார்யார்க்கும்
வானின்றி அமையா ஒழுக்கு.

என்று திருவள்ளுவர் கூறுவார். கடல்நீர் சூரிய வெப்பத்தால் ஆவியாகி மழையாக பொழிகின்றது என்ற அறிவியல் நுட்பத்தை சங்ககால தமிழர்கள் அறிந்திருந்தார்கள்.

ADVERTISEMENT

வான்முகந்த நீர் மலைப் பொழியவும்
மலைப்பொழிந்த நீர்கடல் பரப்பவும்
மாரிபெய்யும் பருவம் போல்
நீரின்றும் நிலத்து ஏற்றவும்
நிலத்தினின்று நீர்ப்பரப்பவும்
அளந்து அறியாப் பலபண்டம்.

என்ற பட்டினப்பாலை என்ற (126- 131 வரிகள்) உணரலாம். நீரியியல் சுழற்சியை இப்பாடலில் உருத்திரங்கண்ணனார் என்ற புலவர் அறிவியல் நுட்பத்தோடு கூறியுள்ளார். நீரியியல் சுழற்சியால் உலகில் உள்ள நீரின் அளவு குறையாமலும், மிகாமலும் நிலையாகவே உள்ளது என்பதை,

 கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக்கு அணி''

என்ற குறிப்பறிதல் அதிகாரத்தில் திருவள்ளுவர் ‘‘மாறாநீர்'' என்பது உலகில் நிலையாக உள்ள நீரின் அளவையே குறிப்பிடுகிறார். தமிழர்கள் நீரியியல் மேலாண்மையில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மேன்பட்டு இருந்தனர் என்பதற்கு மேற்கண்ட பாடல்களே சான்றாகும்.

நீரின் நுட்பத்தை அறிந்த தமிழர்களே தான் அந்நீரை சுமந்து செல்லும் நதிகளின் தேவைகளையும் நன்கறிந்திருந்தனர். அதிலும் தமிழகத்திற்கு தாயாக பாலூற்றி வளர்க்கும் காவிரியின் அழகையும், அவசியத்தையும் உணர்ந்த காரணத்தினால் தமிழ் புலவர்கள் அனைவரும் காவிரியைப் பாடாமல் தங்கள் பாடல்களையும், காவியங்களையும் நிறைவு செய்வதில்லை. தமிழ் இலக்கியங்கள் கூறும் காவிரியின் கவின்நயத்தைக் காணலாம்.

பட்டினப் பாலை (1-6)

வசையில் புகழ்வயங்கு வெண்மீன், திசைதிரிந்து தெற்கேகினும்
தற்பாடிய களியுணவின், புட்டேம்பப் புயன்மாறி
வான் பொய்யினும் தான் பொய்யா, மலைத்தலை இய கடற்காவிரி.

பொருள்: வெள்ளி எனப்படும் நட்சத்திரமானது தான் செல்லுவதற்குரிய திசையாகிய வடக்கு செல்லாது தெற்கு நோக்கிச் சென்றாலும், வானம்பாடி என்னும் பறவை மழை துளியாகிய உணவைப் பெறாமல் வருந்தும்படி மேகம் பொய்த்த பஞ்சகாலம் உண்டானாலும் தான் தவறாமல் காலந்தோறும் பெருக்கெடுத்து வருகின்றதும், குடகுமலையினிடத்தே தோன்றி கடலில் சென்று விழுவதுமான காவேரியாறு என்றும் நீர் வருவதின் தவறாத் தன்மையும் அந்த ஆறு தோன்றி விழும் இடமும் நன்கு விளக்கப்பட்டிருக்கிறது.

புறநானூறு
புனிறு திர்குழவிக்கிலிருந்து பசும் பயிறுவளர்த்துபொன்கதிருக ஆக்குபொன் கொழிக்கும் காவேரியே.

பத்துப்பாட்டு
பொருநராற்றுப்படையில் 238-248 வரிகளில் காவேரியின் மகிமையால் சோழநாடு நெற்களஞ்சியம் என்று விளக்கப்படுகிறது.

நரையும் நரந்தமும் அகிலுமாரமும்
 துரைதரைதோறும் பொறையுயிர் தொழுகி
துரைத்தலைக் குறைப்புனல் வரைப்பகம்புகு தொரும்
  புனலாடு மகளிற்கதுமெனக் குடையக்
சூடு கோடாக பிறக்கி நாடொறுங்
 குன்றெனக்குவை இயக்குன்றாக் குப்பை
 சாலிநெல்லின் சிறை கொள்வேலி
 காவேரிபுரக்கு நாடுகிழவோனே.


சிலப்பதிகாரம்

நாடுகாண் காதையில்: கடல்வனனெதிர்க் ‘‘கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும் கயவாய் நெரிக்கும்'', எனக் கூறி புனலொடு எப்பொழுதுமிருந்து நின்நாட்டைப் புனல் நாடென பெயர் எடுக்கசெய். நின்னாட்டில் ‘‘தாம்பியும், கிழாரும் வீங்கிசையேத்தமும்'' ஒலிக்கவேண்டாம் என்று காவேரியை பற்றிக் கூறப்படுகிறது.

‘‘சிலப்பதிகார ஆசிரியர், காவேரியாறு வாழிகாலம் வரை சோழநாட்டிற்கு தன் வற்றாத வளஞ்சுரக்கும் ஈகையினை அழகுற மொழிந்துள்ளார்.''
‘‘வாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும்
தாயாகி ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழிகாவேரி''

மற்றும் இளங்கோவடிகள் காவேரி தரும் வளத்தை சித்தரித்து காட்டுகிறார். - (சிலப்பதிகாரம்)

‘‘உழவர் ஒதை மதுகு ஒதை; உடைநீர் ஒதை; தண்பதங்கொள்
நடந்தாய் வாழிகாவேரி விழவர் ஒதை சிறந்தார்ப்ப.''
‘‘மருங்குவண்டு சிறந்தார்ப்ப மணிப்பூவாடை அதுபோர்த்து
கருங்கயற்கண் விழிதொல்கி நடந்தாய் வாழிகாவேரி.''
பூவார்கோலை மயிலாலப்புரிந்து குயில்களிசைபாடக்
காமர்மாலை அருகசைய நடந்தாய் வாழிகாவேரி.

பொருள்: பூக்கள் நிறைந்த சோலைகளில் மயில்கள் கூட்டங் கூட்டமாக ஆடவும், குயில் அதற்கேற்ப இசைபாடவும் உள்ள பக்கங்களையுடைய காவேரி என்றும் மகளிர் காவேரி யம்மனை புதுநீர்ப் பெருக்கின்போது தூபதீபங்காட்டி வழிபட்டு வழியனுப்பும்போது இடும் பூமாலைகளை தாங்கிச் செல்லும் காவேரி யென்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

மணிமேகலை ஆசிரியராகிய சீத்தலைச்சாத்தனார் கூறுவதாவது :

(1) கோள்நிலை திரிந்து கோடை நீடினும்
தான்நிலை திரியாத் தண்டமிழ்ப்பாவை.''

தமிழ்நாட்டின் வளத்துக்கு காவேரி காரணமாயிருப்பதால் தண்தமிழ்ப்பாவை யெனக் கூறப்பட்டுள்ளது.

மணிமேகலை
(2) துறக்க வேந்தன் துய்ப்பிலன் கொல்லோ
அறக் கொல்வேந்தன் அருளிலன் கொல்லோ
சுரந்துகாவேரி புரந்து நீர்பரக்கவும்
நலத்தகையின்றி நல்லுயிர் கெல்லாம்
அலத்தற் காலையாகியது ஆயிழை.

ஆசிரியர் ‘‘பாத்திரங்கொண்டு பிச்சைபுக்க காதை'' என்ற பகுதியில், காவேரி எப்படிப்பட்ட காலத்தும் நீர்வளம் குன்றுதலில்லை யென்று அதன் சிறப்பை விளக்குகிறார்.

அதே நூலில், காவேரிப்பட்டினத்தின் தேவதையான சம்பாதேவி காவேரியை வரவேற்கும்போது,

காவேரி நெற்களஞ்சியம் பொற்களஞ்சியம் மட்டும் அல்லாமல் வருங்காலத்தில் மின்னொளி எடுத்து நாடெங்கும் மக்கள் விளக்கிட்டு ஒளியைப் பரப்ப போகின்றது என்பதையும் அறிவிக்கின்றது போலும்!

செங்கதிர்ச் செல்வன் திருக்குலம் விளக்கும்
கஞ்சவேட்கையிற் காந்தமன் வேண்ட
அமரமுனிவன் அகத்தியன் தனது
காகம் கவிழ்த்த காவிரிப்பாவை
ஆணுவிசும்பின் ஆகாய கங்கை வேணவாத் தீர்த்தவிளக்கு. (மணிமேகலை)
காவேரியைப் பற்றி புகழுங்கால்,
‘‘வருநற் கங்கை வடதிசைப் பெருமையும்,
தென்திசைச் சிறுமையும் போக்கி.''
என்று திவாகர நிகண்டு கூறுகிறது.


பாரதம்
‘காவேரி யென்னத் தப்பா கருணை' என புகழப்படுகிறது.

கம்பராமாயணம்
(1) ‘காவேரி நாடன்ன கழனிநாடு' என ஆசிரியர் கூறுகிறார். கோசல நாட்டின் சிறப்பைக்கூற வந்த கம்பர் நதியின் பெருமையால் விளக்குகிறார். காவேரி நதி பாய்கின்ற சோழ நாட்டைப் போன்ற ‘கோசலநாடு' என்று நதியின் மூலமாய் நாட்டின் பெருமை விளக்கப்படுகிறது. நாட்டின் பெருமையை விளக்குவதற்கு எடுத்துக்காட்டாக நிற்பது காவேரியே. நதி என்றாலே காவேரி நதியை தான் குறிக்கும். அது அத்தகைய சிறப்பு வாய்ந்தது.

அகத்தியப்படலம்
(2) ‘‘கன்னியில வாழைகனி யீவகதிர்வாலின்
செந்நெலுள தேனொழுகு போதுமுளதெய்வம்
பொன்னியென லாயபுனலாறு முளபோதா
அன்னமுள பொன்னிவளொடன் பின்விளையாட.''
என்று கூறுமிடத்து தாய்நாட்டுப் பற்றுடை கம்பர் புண்ணியத்தன்மை பொருந்திய காவேரி நதியை ‘தெய்வப் பொன்னி' என குறித்துள்ளமையால் காவேரியின் ஏற்றம் புலனாகும்.

(3) கம்பராமாயணம் - கிட்கிந்தா காண்டம்
சுக்ரீவன் சீதையைத் தேடும்படி வானரர்களைத் தென்பால் சென்று பார்க்கவேண்டிய இடங்களைக் குறிப்பிடுகையில் காவேரி நாட்டை குறிப்பிடுகிறார்.

......................அதற் பிள்ளையவை நளிநீர் பொன்னிச்
சேடுறு தண்புனற் றெய்வத் திருநதியின்
யிருகரையுஞ் சேர் திருமாதோ.

(4) கம்பர் அகத்திய படலத்தில் அகத்திய முனிவனது சிறப்புகளைப் பற்றி கூறுமிடத்து, (ஆரணிய காண்டம் - அகத்தியப் படலம் - 46-ம் செய்யுள்)

‘‘எண்டிசையும் ஏழுலுலகம் எவ்வுயிர்க்கும் வுய்யக்
குண்டிகையினில் பொருஇல் காவேரி கொணர்ந்தான்.''
என்று புகழ்கின்றார். இதன்மூலம் காவேரியானது எட்டு திக்குகளும், ஏழுலுலகங்களும், அவற்றிலுள்ள எல்லா உயிர்களும் நற்கதி அடையும்படி ஒப்புயர்வற்றுத் தவழ்ந்து செல்கின்றது என்பது தெளிவாகத் தெரிகிறது.

சேக்கிழார்
பெரிய புராணத்தில் காவேரி நதியைப் பூமகளின் மார்பில் திகழும் முத்துமாலையாக வர்ணிக்கிறார்.

1. ‘‘ஆதி மாதவமுனி யகத்தியன்தரு
பூதநீர்க்கமண்டலம் பொழிந்த காவேரி
மாதர் மண்மடந்தை பொன்
மார்பிற் றாழ்ந்ததோர்
ஓதநீர் நித்திலத்தாம மொக்குமால்.''

2. திங்கள் சூடியமுடிச் சிகரத்துச்சியிற்
பொங்கு வெண்டலை நுரைபொருது போதலால்
எங்கணாயகன் முடிமிசை நின்றேயிழி
கங்கையாம் பொன்னியாங் கன்னிநீத்தமே.

3. மாவிரைத் தெழுந்தார்ப்ப வரைதரு
பூவிருத்த புதுமதுப் பொங்கிட
வாவியிற் பொலிநாடு வளந்தரக்
காவேரிப்புனல் கால்புரந் தோங்குமால்.

ஔவையார்
சோழன் மன்னன் ஔவைப் பிராட்டியை நோக்கி நீங்கள் எங்கிருந்து வந்தாய் என்று கேட்க,
...........................
..........................கூனல்
கருந்தேனுக்குக் கண்ணாந்த காவேரிசூழ் நாடா
இருந்தேனுக் கெங்கேயிடம்.

மற்றொரு சமயம் சிலம்பி என்னும் தாசிக்கு கம்பன் பொன் வாங்கிக்கொண்டு எழுதிக்கொடுத்த அரைப்பாடலை ஔவை பிராட்டியார் கூழுக்காகப் பூர்த்தி பண்ணிப் பாடினாள். முதல் இரு அடிகள் பின்வருமாறு:

‘‘தண்ணீருங் காவேரியே தார்வேந்தன் சோழனே
மண்ணாவதும் சோழ மண்டலமே.''

மற்றொரு இடத்தில் ‘சோழவள நாடு சோறுடைத்து' என்றும் கூறுகிறார்.

ஒட்டக்கூத்தர்
வெள்ளத் தடங்காச் சினவாளை வேலிக் கமுகின் மீதேறித்
துள்ளி முகிலைக் கிழித்து மழைத்துளியோ டிறங்குஞ் சோணாடா.

பொருள்: காவேரி நீர் பிரவாகத்தில் கோபங்கொண்ட வாளை மீன்கள் வேலிகளாக அமைந்துள்ள கமுக சோலைகளின் மீதேறி துள்ளி மேகபடலத்தை பிளந்து மழை துளியோடு இறங்கும் சோழநாடு.

புகழேந்திப் புலவர்
‘‘பங்கப் பழனத்து முழவர் பலவின் கனியைப் பறித்தென்று
சங்கிட்டெறிய குரங்கிள நீர்தமைக்கொண் டெலியுந்தமிழ்நாடா.''

நீர்வளமும் சோறும் பொருந்திய காவேரி கழனிகளில் உழவர்கள் சுவை நிறைந்த பலாபழங்களை குரங்குகள் பிடுங்கினவென்று கழனிகளில் விளைந்த சங்குகளைக் கொண்டு வீசவும், குரங்குகள் இளநீர்தமைகொண்டு எறிகின்ற இடத்தையுடைய சோழநாடு என்று கூறுகிறார். மற்றொரு இடத்தில் புகழேந்திப் புலவர் காவேரி கரையிலமர்ந்துள்ள திருநெய்தானத்துப் பெருமானை புகழ்ந்து பாடுகையில் காவேரியின் சிறப்பைக் குறிப்பிடுகிறார். நீர் வற்றுதலில்லாத ஓடைகள். பாரை என்னும் மச்சங்கள், மேகத்தை தொட்டுள்ள கமுக மரங்களில், மீன்கள் மேலே தாவிப் பாக்கு குலைகளை உதிரும்படி செய்கின்றன. பின்னர் திரும்பி நெல் வயல்களில் தாளடியில் வீழ்கின்றன. மீண்டும் கரும்பாலைகளின் பாகு வெள்ளத்திற் பாய்ந்து விளையாடுகின்றன.

சொக்கநாதப் புலவர்
இவர் தொண்டை நாட்டில் பிறந்தவராயினும் அவருடைய தனிப்பாடல்களில் ஒன்றில் திருவெண்காட்டில் எழுந்தருளியுள்ள சிவபெருமானைத் துதிக்கும் வகையில் காவேரியின் சிறப்பையும், உருப்படுத்தியிருக்கிறார்.

அவர் சொல்லுவதாவது குளிர்ச்சி பொருந்திய குவளை மலர் நிறைந்த தடாகங்கள் சூழ்ந்த காவேரி நதி பாய்கின்ற சோழநாட்டில் ஓர் அதிசயம் உண்டு. கண்ணெதிராக நாரையின்மீது வெண்காடைக்கு இடப்புறத்தே பசுமையாகிய அன்னப்பறவை சேர்ந்திருப்பதையும் பார்த்தோம் என்கிறார். சிவபெருமானின் வெள்ளை எருது திருவெண்காட்டு சிவபெருமான்- பச்சை அன்னம் பார்வதிதேவி என்றும் பொருள்படும்.

காளமேகப் புலவர்
ஒருசமயம் புலவர் காவேரியாற்றுக்கும் ஆட்டக்  குதிரைக்கும்சிலேடையிடநேர்ந்தது.

‘‘ஓடுஞ்சுழி சுத்த முண்டாகுந் துன்னவரைச்
சாடும் பரிவாய் தலைசாய்க்கும் - நாடறிய
தேடுபுகழான் திருமலைராயன் வரையில்
ஆடுபரி காவேரி யாமே.''

நீர் விரைவாயோடும், நீர் சுழியுமுடையதாகும், சுத்தம் உண்டாகும், ஸ்நானம் செய்பவருக்கு உள்ளும், புறமும் தூய தன்மையை அளிக்கும், மலர்களை மோதி ஒதுக்கும், உயர்ச்சியுள்ள அலைகளை பக்கங்களில் வீசும். இது ஆற்றைப் பற்றிய வரையில் உள்ள பொருளாகும்.

பிறநூல்களிலிருந்து வரலாறு
காவிரி தோன்றிய வரலாறு, நல்லாற்றூர்ச் சிவப்பிரகாச அடிகளார் இயற்றியுள்ள ‘பிரபு லிங்க லீலை' என்னும் நூலின் விநாயகர் காப்புச் செய்யுளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பாடலாவது:

‘‘சுர குலாதிபன் தூய்மலர் நந்தனம்
பெருக வார்கடல் பெய்த வயிற்றினோன்
கரக நீரைக் கவிழ்த்த மதகரி
சரணம் நாளும் தலைக்கு அணி ஆக்குவாம்''

என்பது பாடல். அகத்தியனின் கமண்டலம் தந்த காவிரி, மண் மடந்தையின் மார்பில் ஒரு முத்து மாலை அமைந்திருப்பது போல் தோன்றுவதாகக் கூறுகிறார். சேக்கிழார் அருளிய பெரிய புராணத்திலும் இதே கருத்து கூறப்பட்டுள்ளது. பாடல்:

‘‘ஆதி மா தவ முனி அகத்தியன் தரு
பூத நீர்க் கமண்டலம் பொழிந்த காவிரி
மாதர் மடந்தை பொன் மார்பில் தாழ்ந்ததோர்
ஓதநீர் நித்திலத் தாமம் ஒக்குமால்'' (திருநாட்டுச்சிறப்பு –21)

செயங்கொண்டாரின் கலிங்கத்துப்பரணியில் உள்ள ஒரு குறிப்பு கவனிக்கத் தக்கது. சோழன் ஒருவன் காவிரியைக் கொண்டு வந்ததாக ஒரு செய்தி இந்நூலில் சுட்டப்பட்டுள்ளது.

‘‘காலனுக்கு இது வழக்கென உரைத்த அவனும்
காவிரிப் புனல் கொணர்ந்த அவனும் ...''

என்பது பாடல் பகுதி.

காவிரி ‘ஹொகெனகல்' நீர்வீழ்ச்சியாய்க் கீழே விழுந்ததும் ஒரு பெரிய பள்ளத்தாக்கில் மறைந்து விட்டதாம். பிறகு வெளிப்படவில்லையாம். நீதிவழுவா மன்னன் ஒருவன் தன் உயிரைக் கொடுத்தால் மீண்டும் காவிரி வெளிப்படும் என்று அறிவிக்கப்பட்டதாம். அதனை அறிந்த சோழ மன்னன் ஒருவன் தன் உயிரைத் தந்து காவிரியை வெளிக் கொணர்ந்து தொடர்ந்து ஓடச் செய்தானாம். இதுதான் சோழன் காவிரி கொண்டு வந்து ஒரு புது வரலாறு.

காவிரி கால்ளால் (கால்வாய்களால்) வளப்படுத்துவதைக் கலிங்கத்துப் பரணி (278) பின்வருமாறு கூறுகிறது.

‘‘காலால் தண்டலை உழக்கும்
காவிரியின் கரை மருங்கு''

பல கிளைக் கால்வாய்கள் பிரியப் பிரியக் காவிரி குறுக்களவில் மிகவும் சிறுத்து விட்டது.

தமிழ்நாட்டில் ஓமலூர், திருச் செங்கோடு மாவட்டங்களில் வடக்குத் தெற்காக ஓடும் ஆறு, பின்னர்ச் சோழ நாட்டில் தென் கிழக்காக ஓடுகிறது என்பதை அக நானூற்றில், (76).

‘‘சிறைபறைந் துரைஇச் செங்குணக்கு ஒழுகும்
அந்தண் காவிரி போல''

என்னும் பாடல் பகுதி அறிவிக்கிறது. நாம் இப்போது இதை நேரிலும் காண்கிறோம். முன்னோரிடத்தில் காவிரி வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ஓடுவதால்தான் இங்கே செங்குணக்காக ஓடுகிறது என்று சொல்லவேண்டியது நேரிட்டது. செங்குணக்கு நேர் கிழக்கு. பதிற்றுப்பத்து (50) என்னும் நூலிலும்,

‘‘செங்குணக்கு ஒழுகும் கலுழி மலிர்நிரைக்
காவிரி யன்றியும்...''
என இது குறிப்பிடப்பட்டுள்ளது.

பாரதிதாசன் கா விரிதல் என்னும் அடிப்படையில் ஒரு பாடல் அளித்துள்ளார்:

‘‘பூ விரிந்து வானெங்கும் தேன் விரிந்து
பொன்விளைந் தாற்போலும் நறும்பொடி விரிந்த
கா விரிதல் போலெங்கும் விரிதலாலே
காவிரியாறு என்றார்கள்''

என்பது பாடல், விரிதல் என்பதை அடிப்படையாக வைத்து இப்பாடலில் பெயர்க் காரணம் கூறப்பட்டுள்ளமை காணலாம்.

காவிரிக்குப் ‘பொன்னி' என்னும் பெயர் ஒன்றுள்ளது. காவிரி தன் நீர் வளத்தால் நாட்டில் பொன் கொழிக்கச் செய்கிறது – அதாவது –செல்வம் பெருக்குகிறது– என்ற பொருளில் பட்டினப்பாலையில் ஒரு பெயர்க்காரணம் குறிப்பாகக் கூறப்பட்டுள்ளது.

‘‘புனல் பரந்து பொன் கொழிக்கும்
விளைவறா வியன் கழனி''

என்பது பட்டினப் பாலைப் பாடல் (7, 8) பகுதி. மற்றும், காவிரி மழைக் காலத்தில் வண்டலுடன் குழம்பாகச் செல்லும். அந்நீரில் பொன் துகள் போன்ற பொடி மின்னும்.

சேந்தன் திவாகரம் – இடப்பெயர்த் தொகுதியில் ‘‘பொன்னி காவிரி'' (50) எனக் காவிரிக்குப் பொன்னி என்னும் பெயர் உண்மை அறிவிக்கப்பட்டுள்ளது.

‘‘திருவரங்கத்துப் பெருநகரில் தெண்ணீர்ப்பொன்னி
திரைக்கையால் அடிவருடிப் பள்ளி கொள்ளும் கருமணி''-  குலசேகர ஆழ்வார் – திவ்வியப் பிரபந்தம்
 
‘‘பொன்னி சூழ்திருவரங்கா'' – தொண்டரடிப்பொடி யாழ்வார் – திவ்வியப் பிரபந்தம் (901)

‘‘வளவர் பொன்னி வளந்தரு நாடு '' – சம்பந்தர் தேவாரம்

‘‘செண்டாடு புனல் பொன்னிச் செழுமணிகள்
வந்தவைக்கும் திருவையாறே'' – சம்பந்தர் தேவாரம்

‘‘வரைவந்த சந்தோ டகிலுந்தி வந்து மிளிர்கின்ற
பொன்னி வடபால் '' – சம்பந்தர் தேவாரம்

‘‘தீர்த்த நீர் வந்திழி தரு பொன்னியின் பன் மலர்'' – சம்பந்தர் தேவாரம்

‘‘மத்த யானையின் கோடும் வண்பீலியும் வாரித்
தத்துநீர்ப் பொன்னி சாகரமேவு சாய்காடே'' – சம்பந்தர் தேவாரம்

(சேக்கிழாரின் பெரிய புராணத்திலிருந்து) –

‘‘போலும் நான்முகனையும் பொன்னிமா நதி''
‘‘எம்பிரானை இறைஞ்சலின் ஈர்ம் பொன்னி
உம்பர் நாயகர்க்கு அன்பரும் ஒக்குமால்'' (57)
‘‘பாலைந் துறைப் பொன்னி நீர்''
‘‘செம்பியர் பொன்னி நாடு'' & (502)
‘‘சோழர் பொன்னித் திரு நாடு (1022)''
‘‘பூந்தன் பொன்னி ... அளிக்கும் புனல் நாடு (1211)
‘‘பொங்கு புனலார் பொன்னியின் இரண்டு கரையும்(1571)
‘‘வாய்ந்தநீர் வளத்தால் ஓங்கி மன்னிய பொன்னி நாடு

ஒட்டக் கூத்தரின் நூல்களிலிருந்து:

‘‘கொள்ளும் குடகக்குவடு அறுத்திழியத்
தள்ளும் திரைப் பொன்னி தந்தோன்'' - விக்கிரம சோழன் உலா  23, 24

‘‘சென்னிப் புவியேறிருத்திக் கிரிதிரித்துப்
பொன்னிக் கரைகண்ட பூபதி'' - வி.சோ. உ. 25, 26.

‘‘பொய்யாத பொன்னிப் புதுமஞ்சனம் ஆடி''  வி.சோ.உ. 87

‘‘மன்னர் குலப் பொன்னி ஆடுதிரால்
அன்னங்காள் நீரென் றழிவுற்றும் – வி. சோ. உ. 509.

‘‘பிழையாத பொன்னித் துறைவன் பொலந்தார் '' – வி. சோ. உ. 520

‘‘மண் கொண்ட பொன்னிக் கரை கட்ட வராதார்'' - குலோத்துங்க சோழன் உலா.

‘‘முடுகிக் கரை எறிந்த பொன்னி'' &இராச ராச சோழன் உலா- 29

‘‘பொன்னிக்கும் கோதா விரிக்கும் பொருளைக்கும்
கன்னிக்கும் கங்கைக்கும் காவலனை –சென்னியை ''-  இ.ரா.சோழன் உலா& 493-94

‘‘வற்றாத பொன்னி நதி'' &குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழ்- 15

‘‘பொன்னி யாற்றுப் புனற்போலத் தொடர்வதூண்டாம் ''- பாரதிதாசன்

இன்னும் கந்தபுராணம் கந்தபுராண வெண்பா முதலிய பலப்பல நூல்களில் பொன்னி என்னும் பெயர் எடுத்தாளப்பட்டுள்ளது. ஆழ்வார்களால், பூம்புனல் பொன்னி வருபுனல் பொன்னி, வருநீர்ப் பொன்னி, செல்வப் புனல்பொன்னி, செழும் பொன்னி
என்றெல்லாம் ‘‘பொன்னி'' எனக் காவிரி செல்லமாக அழைக்கப்பெற்றுள்ளது.

 சோழன் குள முற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனை வெள்ளைக்குடு நாகனார் பாடிய புறநானூற்றுப் பாடல்:

‘‘அலங்கு கதிர் கனலி நால்வயின் தோன்றினும்
இலங்கு கதிர் வெள்ளி தென்புலம் படரினும்
அந்தண் காவிரி வந்து கவர் பூட்டத்
தோடு கொள் வேலின் தோற்றம் போல
BkPs கரும்பின் வெண்பூ நுடங்கும்
நாடெனப் படுவது நினதே''

கதிர் பரப்பும் ஞாயிறு கிழக்கே மட்டுமன்றி நான்கு திசைகளிலும் தோன்றினாலும், வடக்கே இருக்க வேண்டிய வெள்ளி தெற்கே செல்லினும் – அதாவது கோள் நிலையில் எந்த மாறுபாடு தோன்றினும் – சோழ நாட்டுக்குத் தண்ணீர்த் தட்டுப்பாடு இல்லாமல் காவிரியாறு நாடு முழுதும் நீர் ஊட்டுவதனாலே, வேலின் தோற்றம்போல் கரும்பு தோன்றும் சோழ நாடே நாடு எனப்படும் –என்பது பாடலின் கருத்து.

சோழன் குள முற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனைக் கோவூர் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் (386) வருக:-

‘‘குணதிசை நின்று குடமுதல் செலினும்
குடதிசை நின்று குணமுதல் செலினும்
வடதிசை நின்று தென்வயிற் செலினும்
தென்திசை நின்று குறுகாது நீடினும்
யாண்டு நிற்க வெள்ளி யாம்
வேண்டிய துணர்ந்தோன் தாள்வா ழியவே'' (22-27)

வெள்ளி என்னும் கோள் (சுக்கிரன்) கிழக்கேயிருந்து மேற்கே செல்லினும், மேற்கே யிருந்து கிழக்கே சென்றாலும், வடக்கேயிருந்து தெற்கே சென்றாலும், இருக்கக் கூடாத தென் திசையை விட்டு அப்பால் செல்லாமல் அங்கேயே நீண்ட நாள் இருப்பினும்,(கோள் மாறுபட்டதால் மழை வளம் குன்றினும்) எமக்கு வேண்டிய வளத்தை உணர்ந்து வழங்கும் சோழன் தாள் வாழ்க – என்பது பாடல் கருத்து.

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனை நல்விறையனார் பாடிய பாடல் பகுதி வருமாறு(393):

‘‘கோடை யாயினும் கோடா ஒழுகத்துக்
காவிரி புரக்கும் நல்நாட்டுப் பொருந''
‘‘வற்றாத பொன்னி நதி'' &ஒட்டக்கூத்தரின் குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ்
‘‘பொய்யாத பொன்னிப் புது மஞ்சனம் ஆடி''&
‘‘பிழையாத பொன்னித் துறைவன் பொலன்தார்''  ஒட்டக் கூத்தரின் விக்கிரம சோழன் உலா

அடுத்து, வில்லி பாரதம்&ஆரணிய பருவம்&அருச்சுனன் தவநிலைச் சருக்கத்தில் உள்ள 24 ஆம் பாடல்:

‘‘நீவிரே யல்லீர் முன்னாள் நிலமுழு தாண்ட நேமி
நாவிரி கீர்த்தி யாளன் நளனெனும் நாம வேந்தன்
காவரி என்னத் தப்பாக் கருணையான் சூதில் தோற்றுத்
தீவிரி கானம் சென்ற காதை நும் செவிப்படாதோ?''

இந்தப்பாடலில், சூதில் தோற்று விட்ட மன்னன் நளன், காவிரி ஆறுபோல் தப்பாமல் பலர்க்கும் வழங்கும் அருள் உடையவன் - எனப் பாராட்டப்பட்டுள்ளான்.

அடுத்துப் பாவேந்தர் பாரதிதாசனின் பாடலில்,

‘‘புகுந்து மொழிப் பேச் செல்லாம் பொன்னியாற்றுப்
புனல் போலத் தொடர்வதுண்டாம் அன்னார் பாட்டில்''

பொன்னியாம் காவிரி யாற்று நீர் தொடர்ந்து பாயும் என்னும் குறிப்பு இப்பாடல் பகுதியில் அமைந்துள்ளது.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் இரண்டு பாடல் பகுதிகளைப் பார்க்கலாம்;

‘‘கங்கை யமுனை காவிரி முதலிய
வற்றிலா நதிகளில் மடைகள் ஆக்கவும்''
‘‘வற்றலில் கங்கை காவேரி
 வளஞ் செய் பரத நாட்டினிலே'' - மலரும் மாலையும்

கங்கையைப் போலவே காவிரியும் வற்றாதது என்னும் கருத்து இப்பாடல் பகுதிகளால் அறிய வருகிறது.
இறுதியாக,

‘‘காவிரி தென்பெண்ணை, பாலாறு- தமிழ்
கண்டதோர் வைகை பொருனை நதி- என
மேவிய ஆறு பலவோடத் - திரு
மேனி செழித்து தமிழ்நாடு''

என்ற பாரதியின் பாடல் தமிழ்நாட்டிற்கே பெருமை சேர்ப்பது ஆறுகள்தான். இருப்பினும், அவற்றுள் காவிரியே முதன்மையானது என்ற பாரதியின் பாடல்வழி அறிந்து இன்புறுவோமாக.

ADVERTISEMENT
ADVERTISEMENT