தமிழ் மொழித் திருவிழா

காலந்தோறும் தமிழ் மொழி - அன்றும்... இன்றும்...

25th Dec 2019 02:44 PM | தஞ்சை வெ.கோபாலன்

ADVERTISEMENT


“கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றி மூத்த குடி” என்று தமிழ்க்குடி பற்றி பெருமை படப் பேசுகிறார்கள். அப்படிப்பட்ட தொன்மையான மொழி உலகின் மூத்த பல மொழிகளுள் ஒன்றாக இருந்திருக்கிறது. பல்வேறு மொழி ஆராய்ச்சி ஆசிரியர் பெருமக்களும் எவரும் மறுக்க இயலா அளவிற்குத் தமிழ் மூத்த மொழி என்பதை உறுதிபடக் கூறுகிறார்கள். 

தமிழ் மொழியில் இன்று நமக்குக் கிடைக்கும் பண்டைய இலக்கியங்களை ஆய்வு செய்தால் இம்மொழி காலத்தால் மிகவும் முற்பட்டது என்பதை அறியமுடிகிறது. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த வரலாறுகளும், இன்று நமக்குக் கிடைக்கும் சங்க நூல்களை வைத்தும் பார்க்கும்போது தமிழ் மொழியின் தொன்மையையும், அது காலந்தோறும் எப்படியெல்லாம் வளர்ந்தது, சந்தர்ப்ப சூழ்நிலை, ஆள்வோரின் மொழிகளால் ஏற்பட்ட தாக்கம், தயக்கம், தடை இவற்றையெல்லாம் தாண்டி தமிழ் மொழி என்றும் மாறா இளமையுடன் வீறுநடை போடுவதை நம்மால் உணர முடிகிறது. இன்று நமக்குக் கிடைக்கும் ஆதாரங்களை வைத்துப் பார்க்கும் போது தமிழ் மொழியின் பல சிறப்பான இலக்கியங்கள் சங்க காலத்தில் தோன்றியிருப்பது தெரிகிறது. 

தமிழின் மூத்த இலக்கண நூல் தொல்காப்பியம், அதன் காலம் கி.மு.500 என்றும், அந்நூலில் காணும் குறிப்புகளிலிருந்து அதற்கு முன்பும் பல நூற்றாண்டு காலங்கள் பின்னோக்கிய காலத்தே தமிழ் மொழி கோலோச்சிக் கொண்டிருந்தது என்பதும் தெரிகிறது. அப்போதிருந்த மன்னர்களிடம் சென்று அவர்கள் புகழைப் பாடிப் பரிசில் பெற்ற புலவர்களின் தனிப்பாடல்கள் எல்லாம் சங்கப் பாடல்கள் என்ற பெயரில் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர் உழைப்பால் தேடிக் கண்டுபிடித்து இன்று நமக்குக் கிடைக்கின்றன. 

அதன் பின் ஆங்கில வழி ஆண்டு முறைப்படி சுமார் ஐநூறு ஆண்டுகள் சங்கம் மருவிய காலம் என்கின்றனர். இந்த காலகட்டத்தில்தான் சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற பல காப்பியங்கள் பல உருவாகின. இவை உருவான காலத்தில் இளங்கோ பெளத்த துறவி என்பதால் பெளத்த மதமும், நாலடியார் உருவாக்கிய புலவர்கள் சமணர்கள் என்பதால் சமணமும் தழைத்து வளர்ந்திருந்தது என்பதும் தெரிகிறது. தமிழின் சுவையும், தமிழிலக்கியங்களின் பெருமையும் இந்தக் காலத்து நூல்களில் இருந்து நமக்குத் தெரிய வருகிறது. 

ADVERTISEMENT

தொடர்ந்து வந்த காலத்தில் சமய இலக்கியங்கள் பற்பல தோன்றியிருக்கின்றன. மூவர் பாடிய தேவாரம், மாணிக்கவாசகரின் திருவாசகம், ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத் திவ்ய பிரபந்தம் போன்ற சமய நூல்கள் தோன்றியிருக்கின்றன. தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு இவர்கள் பெரிதும் உறுதுணையாக இருந்திருக்கின்றனர். 

மேலும் அவர்கள் காலத்தில் ஆண்களும், பெண்களும் கல்வியில் சிறந்து விளங்கி இருந்ததும் தெரிய வருகிறது. பன்னிரெண்டாம் நூற்றாண்டில் கவியரசர் கம்பரின்  ‘ராம காதை’ தமிழுக்கு ஒரு மகுடாபிஷேகம் என்று சொல்லக் கூடிய அளவுக்கு சிறப்பான காவியமாக மலர்ந்தது. சேர, சோழ, பாண்டியர்கள் தமிழகத்தைச் சிறப்பாக ஆண்டதோடு, தமிழ் மொழியின் ஆக்கத்துக்கும் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். 

காவிரி பாய்ந்தோடும் சோழ தேசத்தை ஆண்ட மன்னர்களில் கடைச்சோழ மன்னர்கள் எனப்படும் விஜயாலய சோழனின் வாரிசுகள் தமிழத்தின் பொற்காலமாக ஆக்கி வைத்திருந்தார்கள். மாமன்னன் ராஜராஜ சோழனும், ராஜேந்திர சோழனும் தமிழை கடல் கடந்தும் கொண்டு சென்ற பெருமைதான், இன்றும் காம்போஜத்தில் மாபெரும் சிவாலயமும், தூரக்கிழக்கு நாடுகளில் நமது திருப்பாவை, திருவெம்பாவையையும் மொழி புரியாமலாவது பாடிக் கொண்டிருக்கும் நிலைமைக்கு அவர்களே காரணம். 

விஜயாலயன் பரம்பரையின் கடைசி மன்னன் 1279இல் போரில் மாண்ட பின் அந்த சோழ வம்சம் முடிவுக்கு வந்தது. இவர்கள் காலத்தில் தமிழில் சிற்றிலக்கியங்கள் உருவாகின. இவர்கள் ஆட்சிக்குப் பிறகு இரண்டு நூற்றாண்டுகள் பற்பலரும் இந்தப் பிரதேசத்தை ஆளவும், அவரவர் மொழிகளை இங்கே பரப்பவும் செய்ததால் தமிழின் வளர்ச்சி மெல்ல மெல்ல மங்கத் தொடங்கியது.

பதினைந்தாம் நூற்றாண்டில் வளர்ச்சியடைந்த விஜயநகரப் பேரரசு காலத்தில் கிருஷ்ணதேவ ராயரும், அவருடைய இளவல் அச்சுததேவ ராயரும் தென்னாடு முழுவதும் தங்கள் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்தியிருந்ததோடு, வடக்கிலிருந்து படையெடுத்து வந்த முகலாயர்கள், தட்சிண சுல்தான்கள் ஆகியோரிடமிருந்து தமிழகத்தையும், தமிழ் மொழியையும் அழியவிடாமல் பாதுகாத்தார்கள். எனினும் விஜயநகர மன்னர்கள் காலத்தில் தெலுங்கு மொழி இங்கு கோலோச்சத் தொடங்கியது. 

தமிழ் பண்டிதர்கள் கையில் மட்டும் தமிழ் மொழி செழித்து வளர்ந்ததே தவிர பொதுமக்கள் மத்தியில் தமிழ் பெரிதும் வளர்ந்ததாகத் தெரியவில்லை. ஆள்வோர் மொழிக்கும் தங்கள் பேச்சு மொழிக்குமாக மக்கள் ஊசலாடிக் கொண்டிருந்தனர். நூற்று முப்பது ஆண்டுகள் நாயக்க மன்னர்கள் தமிழகத்தை ஆண்ட பின்னர், மராத்தியர்கள் தஞ்சை, செஞ்சி, மதுரை ஆகிய பகுதிகளில் 190 ஆண்டுகள் தங்கள் ஆட்சியை நிலைநாட்டிய சமயம், தெலுங்கு தவிர மராத்திய மொழியும் இங்கே வளர்ச்சியடைந்தது. தமிழ் மெல்ல ஒளியிழக்கக் காரணமாயிருந்தது இப்படிப்பட்ட வேற்று மொழி ஆட்சியும், அப்போது மெல்ல ஆங்கில கம்பெனியார் உட்புகுந்து இங்கு வழக்கிலிருந்த கல்வி முறையை மாற்றி மெல்ல ஆங்கிலத்தின் ஆளுமையை அதிகப் படுத்தியதும் காரணமாகும். 

தமிழகம் பெரும்பாலும் விவசாயிகளையும், கைத்தொழில் புரிவோரையும் கொண்ட நாடு என்பதால் கல்வி, படிப்பு இவைகளெல்லாம் ஒருசாராருக்கு மட்டுமே கிடைத்தும், இதர மக்கள் கல்வி அறிவு பெற வசதியில்லாமல் போயிற்று. ஒரு காலகட்டத்தில் தமிழகத்தில் குறிப்பாக நாயக்கர்கள், மராத்தியர்கள் ஆண்ட பிரதேசங்களில் வழங்கிய மொழி கொச்சையான இலக்கணப் பிழை, எழுத்துப் பிழைகள் கொண்ட மொழியாகவே இருந்திருக்கிறது. பண்டிதர்கள்,  பாமரனுக்குப் புரியாத கடுந்தமிழில் பேசவும் எழுதவுமாக இருந்த காரணத்தால் நல்ல தமிழ் பேசும் வாய்ப்பு உழைப்பவனுக்கோ, அல்லது பாமரனுக்கோ அமையாமல் போய்விட்டது. ஆங்கிலக் கல்வியை லார்ட் மெக்காலே கொண்டு வந்தபோது தமிழ் அழிவின் விளிம்பிற்குச் சென்றிருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. 

தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னர்களில் வீரமும், நிர்வாகத் திறனும் மிக்காவராகத் திகழ்ந்தவர் பிரதாபசிம்ம ராஜா. அவருடைய மகன் துளஜேந்திர ராஜாவும் அவருடைய தத்துப் பிள்ளையான சரபோஜி ராஜாவும் ஆண்ட காலத்தில் தமிழ் மொழிக்குப் பெரிதும் ஏற்றம் ஏற்பட வாய்ப்பில்லாமல் இருந்தது. சரபோஜி காலத்தில் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் என்ற ஒரு தமிழ்ப் புலவர் குழு இருந்த போதிலும் அவர்கள் சிற்றிலக்கியங்களில் ஈடுபட்டு வந்தனரே தவிர பொது மக்கள் மத்தியில் தமிழை நன்கு பேசவும், எழுதவும் வழிவகுத்ததாகத் தெரியவில்லை. 

மன்னர் பிரதாபசிம்மன் காலத்தில் கர்னல் மெக்கன்சி என்பார் அந்தக் கால அரசியல் விவகாரங்களை நான்கு மொழிகளில் அந்தந்த மொழிக்கு ஒரு சுருக்கெழுத்தாளரைக் கொண்டு எழுதி வைத்தார். அவை ஆங்கிலம், தெலுங்கு, மராத்தி, தமிழ் ஆகிய மொழிகளில் இருந்தன. அவர் காலத்தில் எழுதப்பட்ட தமிழ் மொழியைச் சிறிது படித்தால் தான் தமிழின் அன்றைய நிலைமை நமக்குப் புரியும்.

கர்னல் மெக்கன்சி சுவடிகள் எனப்படும் இவை சரஸ்வதி மகால் நூலகத்தில் இருந்தது. அதைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் ஒரு நூலாக “தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு” என்ற தலைப்பில் வெளியிட்டிருக்கிறார்கள். அந்த நூலில் இருந்து ஒரு சிறு பகுதியை இங்கு தருகிறேன். அந்தத் தமிழ் நடையைப் பார்த்தாலே தெரியும் தமிழ் அன்று பட்ட பாட்டை. 

அது இதோ:- “காட்டு ராஜா வென்கிறவன் வெள்ளாட்டி மகன் சுபானி யென்று பேர். அப்படிக் கொத்தவனுக்கு தஞ்சாவூர் றாட்சியம் போசலே வமிச பரம்பரையாய் பண்ணிக் கொண்டு வந்த றாட்சியத்தை இந்த வெள்ளாட்டி மகனுக்கு ஆனது சேதி உறைமுறையார் முதலான சகல செனங்களுக்கும் வியக்தமாய் தெரிந்த பிற்பாடு, இந்த கிறுத்திறமத்திலே சேர்ந்து இருந்த சயிது யென்கிறவன் பரம்பரையாய் ராஜாவுடைய சேவுகம் பண்ணிக் கொண்டு வருகிறோமென்றும், வெகு செனங்களுக்குள்ளே லட்சை (லட்சை = வெட்கம்) யாகுதென்றும், இதுலே முக்கியமாய் யெகோஜி ராசா சேர்மானம் பண்ணியிருக்கப்பட்ட ஸ்ரீகளுக்குப் பிறந்த சந்திரபானுஜி போசலே அவர் பிள்ளை னாயக்கஜி போசலே யென்கிறவன் பாக்கியத்திலேயும் சவுரியத்திலேயும் பிறக்கியாதியாக யிருந்தான். அவன் பயத்தினாலே இப்போ  றாட்சிய வம்சத்திலே பிறதாப சிம்ம ராஜா றூபத்திலேயும் கிறிகை (கிரிகை = செயல்பாடு) குணம், புத்தி இந்த குணங்களிலே யோக்கியமா யிருக்கிறா ரென்று பட்டம் கட்டின பிற்பாடு அந்த சயிது யென்கிறவன் கிறுத்திறமத்திலே யிருந்தான்.” பயப்படத் தேவையில்லை.  இது இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் தமிழ் மொழி பட்ட பாடு. 

பதினெட்டாம் நூற்றாண்டில் சோழ தேசத்தில் தமிழ் பட்ட பாடு இது. இதில் குறிப்பிடப்படும் பிரதாபசிம்ம ராஜாவின் மகன் துளஜேந்திர ராஜா. அவருக்கு ஆண் வாரிசு இல்லாமையால் மராத்திய பிரதேசத்துக்குச் சென்று அங்கு சரபோஜி எனும் பத்து வயது சிறுவனை சுவீகாரம் எடுத்துக் கொண்டு வந்து அரசானாக்கியதும், இடைக் காலத்தில் அமர்சிங் என்பார் அரசாண்டதும் மராத்திய வரலாற்றில் வரும் செய்திகளாகும். இந்த சரபோஜி மன்னன் வாழ்ந்த காலத்தில் இவர் அவையில் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் எனும் புலவர் தலைமையில் ஒரு புலவர் குழு இயங்கி வந்தது. சில சிற்றிலக்கியங்கள் தவிர இவர்கள் வேறெந்த புகழ்வாய்ந்த இலக்கியங்களைப் படைத்ததாகத் தெரியவில்லை. இவர்கள் காலத்திலேயே நமது தமிழகத்துப் பாரம்பரிய கல்வி முறையைத் தகர்த்தெறிந்துவிட்டு ஆங்கிலக் கல்வியை நிலைநாட்ட லார்டு மெக்காலே ஒரு கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார். அதன் தொடர்ச்சிதான் நாம் இன்றும் படித்து வரும் கல்வி முறை. ஜி.யு.போப், மாயூரம் வேதநாயகம் பிள்ளை, வேதநாயக சாஸ்திரியார், வள்ளலார் இராமலிங்கனார், தாயுமானவர், காளமேகம் போன்ற சிலர் அரிய பல தமிழ் இலக்கியங்களைப் படைத்திருக்கின்றனர். 

ஆனாலும் இவை அத்தனையும் படித்த வர்க்கத்தினர் மத்தியிலேதான் பரவி வந்தனவே தவிர பாமரன் கற்கவோ, புரிந்து கொள்ளவோ தமிழ் மொழி அன்று உயர்ந்து விளங்கவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் படித்த புலவர்கள், சாதாரண பாமர மக்களுக்கான வகையில் மொழியைப் பயன்படுத்த வில்லை. அவர்களுக்கேன்றே மிக உயர்ந்த தமிழ் நடையில் எழுதினார்களேனும், அவை பல்வகைத்தானும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுப் பாடுபடும் பாமரத் தமிழன் புரிந்து கொள்ளுமளவுக்கு அமையவில்லை. 

ஆகவே பண்டிதத் தமிழ் என்றும், பாமரன் பேசும் பாமரத் தமிழென்றும் பிரித்துப் பார்க்கும் படிதான் தமிழின் நிலை அன்று இருந்தது. பாரம்பரியமாக காலம் காலமாக இருந்து வந்த குருகுல கல்வி முறை ஆணும் பெண்ணும் கல்வி கற்று கவிபாடும் திறமை கொண்ட புலவர் பல்லோர் இருந்த தமிழ் நாட்டில் தமிழின் நிலை பரிதாபமானதாக ஆகியிருந்தது.  இதைத்தான் பாரதி “தமிழச் சாதி” எனும் தலைப்பில் அமைந்த கவிதையில் சொல்கிறார்“எனப்பல பேசி இறைஞ்சிடப் படுவதாய்   நாட்பட நாட்பட நாற்றமும் சேறும்  பாசியும் புதைந்து பயன் நீர் இலதாய் நோய்க் களமாகி அழிகெனும் நோக்கமோ?  விதியே! விதியே! தமிழச் சாதியை என்செய நினைத்தாய், எனக்குரையாயோ? சார்வினுக் கெல்லாம் தகத்தக மாறித் தன்மையும் தனது தருமமும் மாயாது என்றுமோர் நிலையா யிருந்துநின் அருளால் வாழ்ந்திடும் பொருளொடு வகுத்திடுவாயோ?  
      
   “சிலப்பதிகாரச் செய்யுளைக் கருதியும்  திருக்குறளுறுதியும் தெளிவும் பொருளின் ஆழமும் விரிவும் அழகும் கருதியும் ‘எல்லையொன்றின்மை’எனும் பொருள் அதனைக் குறிகளாற் காட்டிட முயலும் முயற்சியைக் கருதியும், முன்பு நான் தமிழச் சாதியை அமரத் தன்மை வாய்ந்தது” என்று உறுதி கொண்டிருந்தேன்.  ஒரு பதினாயிரம் சனிவாய்ப் பாட்டும் தமிழச் சாதிதான் உள்ளுடைவின்றி உழைத்திடு நெறிகளைக் கண்டு எனது உள்ளம் கலங்கிடாதிருந்தேன்.  

 விதியே! விதியே! தமிழச் சாதியை என்செயக் கருதி யிருக்கின்றாயடா?”இப்படி பாரதி காலத்தில் தமிழின் நிலை கண்டு மனம் வெதும்பி பாடிய பாடல் வரிகள் இவை. சரி! இந்த நிலை சீரடைய வேண்டுமானால், தமிழ் மொழி, தன்னுடைய முந்தைய பெருமையை, உயர்வை அடைய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டுமென்பதையும் சொல்கிறான். “மெல்லத் தமிழினி சாகும், அந்த மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்” என்றந்தப் பேதை உரைத்தான். ஆ! இந்த வசை யெனக்கெய்திடலாமோ? சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!” என்றும் அறைகூவல் விடுக்கிறான். 

பாரதி வாழ்ந்த காலத்தில் தமிழ் மொழி, புலவர்கள் கையில் அடைக்கலமாகி இருந்தது. பாமரனுக்குப் புரியாத கடுந்தமிழ் வாசகங்கள், அவை தங்களுக்கு இல்லை என்பது போல் அந்தப் பாமர மக்களும் கல்வியில் அக்கறை இல்லாமலே இருந்து விட்டனர். அந்த நிலை மாறத்தான் பாரதி பண்டிதர்களின் கரங்களில் இருந்த கடுந்தமிழை எளிய தமிழில், “சொல் புதிது, பொருள் புதிது,” என்று நவகவிதை யாத்துத் தந்து பாமரன் கைகளில் கொடுத்துத்  தமிழுக்குப் புத்துயிர் அளித்தான். இருபதாம் நூற்றாண்டில் தமிழ் புத்துயிர் பெற்றது. 

தமிழுணர்வு உருவாகி பரந்து விரிந்த பகுதிகளில் அனைவரும் பிழையின்றி தமிழைப் பேசவும், எழுதவும், படிக்கவும் தொடங்கி இன்று தமிழ் முன்னைப் பெருமைக்கும் மேலும் மெருகூட்டி மெத்த வளருது இங்கே. அந்த வளர்ச்சி மேலும் மேலும் வளர்ந்து கல்வியில் மட்டுமல்ல, பேச்சில் எழுத்தில் கவிதைகளில், காப்பியங்களில் இவற்றோடு அறிவியலிலும் ஓங்கி வளர வேண்டும். அந்த வளர்ச்சி நம் கையில் தான் இருக்கிறது. செய்வோம், செய்து முடிப்போம் என்று சூளுரைப்போம். வாழ்க தமிழ்!

ADVERTISEMENT
ADVERTISEMENT