தமிழ் மொழித் திருவிழா

மொழியும் சமயமும் அடையாளங்கள்

23rd Dec 2019 05:38 PM | அரங்க. ராமலிங்கம்

ADVERTISEMENT

 

பக்தி இயக்கம்
 தமிழ் இலக்கிய வரலாற்றில் கி.பி. ஆறாம் நூற்றாண்டு முதல் பன்னிரண்டாம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தைத் தமிழ் பக்தி இயக்கத்தின் பொற்காலம் எனக் குறிப்பிடலாம். இக்காலக் கட்டத்தில்தான் பக்தி இயக்கம் தமிழகத்தில் தோன்றி மெல்ல மெல்ல வடபுலம் நோக்கிப் பெயர்ந்து உலகளாவிய இயக்கமாகப் பரவியது.

 பக்தி இயக்கத்திற்கு வித்திட்ட பெருமை தமிழகத்திற்கு உரியது. அதற்கு உயிரூட்டியவர்கள் நாயன்மார்களும் ஆழ்வார்களும் ஆவர். நாயன்மார்களில் முன்னின்றவர்கள் இருவர். ஒருவர் திருநாவுக்கரசர்  மற்றவர் திருஞான சம்பந்தர். இவ்விருவரின் அடியொட்டியே ஏனைய நாயன்மார்கள் பக்தி இயக்கத்திற்கு உரம் ஊட்டினார்கள். கி.பி. 12ஆம் நூற்றாண்டில் தோன்றிய தெய்வச் சேக்கிழார் பக்தி இயக்கத்தின் விழுதுகளாக விளங்கிய திருத்தொண்டர்களின் வாழ்க்கையைக் காப்பியமாகப் புனைந்து வரலாற்றில் நிலைக்கச் செய்தார்.

திருக்கோயில்களே சமுதாயக் கூடங்கள்
 மக்கள் தங்களுக்குள்ள வேறுபாடுகளை மறந்து, ஒருங்கிணைகின்ற இடமாகத் திருக்கோயில்கள் மடை மாற்றம் செய்யப்பெற்றன. சுருக்கமாகச் சொல்லப் போனால் திருக்கோயில்கள் சமுதாயக்கூடங்களாக மாறின. மக்கள் தொடர்புச் சாதனமாக அதாவது வெகுஜன ஊடகமாகத் திருக்கோயில்கள் உருப்பெறலாயின. திருக்கோயில்களை மையப்படுத்தி இசை, நாட்டியம், கூத்து, நாடகம் என அனைத்துக் கலைகளும், சிறப்பு விழாக்களும் பூசனைகளும் நடைபெற்றன. அரசன் முதல் ஆண்டிவரை ஆண்டவன் முன்னால் அனைவரும் சமம் என்ற சமுதாயப் புரட்சியைத் திருக்கோயில்கள் நிகழ்த்தின.

ADVERTISEMENT

மக்கள் இயக்கம்
 வெற்று ஆரவாரச் சடங்குகள், அன்பு நெறிக்கு ஒவ்வாத வழிபாட்டு முறைகள் மற்றும் மது, மாமிசம் அருந்துதல், புலித்தோல் ஆடை புனைதல், மண்டை ஓடு அணிதல் இன்னபிற நடைமுறைகளோடு இருந்து வந்த -சைவத்தை அன்பு நெறிச் சைவமாக மாற்றிய பெருமை, திருஞானசம்பந்தருக்கும் திருநாவுக்கரசருக்கும் உரியது. இப்பெருமக்கள் தமிழகத்தின் ஊர்கள்தோறும் சென்று மக்களைச் சந்தித்து அவர்களை ஒருங்கிணைத்துச் சைவத்தை மக்கள் சைவமாக  மாற்றினர்.

 மக்கள் இயக்கமாகச் சைவ சமய இயக்கம் உருவாயிற்று. மக்கள் சக்தியைத் திரட்டி அவர்களை ஓர் இயக்கமாக்கி அவர்கள் மூலம் பழைய திருக்கோயில்களைப் புதுப்பித்தும் - பல புதிய திருக்கோயில்களை உருவாக்கியும் இசைத்தமிழால் இறைவனைப் போற்றித் துதித்தனர். இசையும் நாடகமும் மீண்டும் தமிழகத்தில் புத்தெழுச்சி பெற்றன. தமிழ்ப் பண்பாடும் தமிழ் உணர்வும் இவர்தம் பாடல்களில் வெளிப்பட்டன. "காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்க' இறைவனை வழிபடும் தூய பக்திநெறி உரம் பெற்றது; வளம்பெற்றது; வளர்ந்தது. பண்டைத் தமிழரின் அகத்திணை மரபு ஆன்மிக அடித்தளத்தில் மீண்டும் தளிர்த்துத் தழைத்தது.

சங்க காலமும் சமயமும்
 சங்ககாலச் செவ்விலக்கியங்களில் சமயம் தொடர்பான செய்திகள் விரவிக்கிடக்கின்றன. இறைத்தன்மை குறித்த தெளிவான பார்வையோடு பழந்தமிழர் வாழ்ந்தனர் என்பது அச்செய்திகளால் வலுப்பெறுகிறது.

தீயினுள் தெறல் நீ  பூவினுள் நாற்றம் நீ 
கல்லினுள் மணியும் நீ சொல்லினுள் வாய்மை நீ 
அறத்தினுள் அன்பு நீ  மறத்தினுள் மைந்து நீ 
வேதத்து மறை நீ  பூதத்து முதலும் நீ 
வெஞ் சுடர் ஒளியும் நீ  திங்களுள் அளியும் நீ 
அனைத்தும் நீ  அனைத்தின் உட்பொருளும் நீ 
ஆதலின்,
உறைவும் உறைவதும் இலையே  உண்மையும்
மறவியில் சிறப்பின் மாயமார் அனையை 
முதல்முறை, இடைமுறை, கடைமுறை,தொழிலில்
பிறவாப் பிறப்பு இலை  பிறப்பித்தோர் இலையே
(கடுவன் இளவெயினார், திருமால் 
பரிபாடல்  3: 63-72)

உரை:- தீயில் அமைந்த வெப்பம் நீ; மலருள் மணம் நீ  மணிகளுள் அம்மணியின் தன்மை நீ.சொற்களுள் வாய்மைத் தன்மை நீ. அறச்செயல்களுள் அன்புடைமையாக இருக்கின்றாய். மறச் செயல்களுள் நீ வன்மைப் பண்பு.வேதத்துள் அரும்பொருளாக விளங்குபவன் நீ. பூதங்களுள் அவற்றின் முதற்பொருளாக விளங்குபவன் நீ. ஞாயிற்றின் ஒளியாவாய் நீ. திங்களில் குளிர்ச்சிப் பண்பும் நீ. இங்குக் கூறப்படாத எல்லாப்பொருளும் நீ. எல்லாப் பொருளிடத்தும் அவற்றின் உட்பொருளாய் இருப்பவனும் நீ. ஆதலால் நீ உறைதலும் இல்லை. உறைதலுக்கு வேறாக உறையும் இடமும் இல்லை. மறதியுடையார் நின்னைச் சிறப்பிக்கும் காரணமாய்ச் சொல்லப்பட்ட அவை நினக்கு உள்ள தன்மையும் பொய். இத்தகைய தன்மை உடையாய் ஆதலால், உலகில் முதலிலும் இடையிலும் இறுதியிலும் படைப்பு, அளிப்பு, அழிப்பு என்னும் முத்தொழில்களைச் செய்யும் பொருட்டு நீ பிறவாத பிறப்பும் இல்லை. அவ்வாறு பிறந்தாயாயினும் நின்னைப் பிறக்கும்படி செய்தவரும் இல்லை.

இன்னோர்
சேர்வார் ஆதலின், யாஅம் இரப்பவை
பொருளும் பொன்னும் போகமும் அல்ல  நின்பால்
அருளும், அன்பும், அறனும், மூன்றும்
உருள் இணர்க் கடம்பின் ஒலி தாரோயே
(கடுவன் இளவெயினார் -முருகன் - 
பரிபாடல் 5: 79-82)

உரை:- தேர்ச்சக்கரத்தைப் போன்ற மலர்கள் உடைய கொத்துக்கள் பொருந்திய கடம்ப மாலையை அணிந்தவனே!  நின் திருவடி நிழலை அடைய விரும்பும் யாம் நின்னிடம் இரப்பவை, நுகரப்படும் பொருளும் அவற்றைத் தரும் பொன்னும், அவற்றால் அனுபவிக்கும் இன்பமும் அல்ல. எமக்கு வீடுபேறு அளிக்கும் நின் திருவருளும் அந்த அருளை உண்டாக்க வல்ல நின்னிடத்தே யாம் செலுத்தக் கடவுவது அருளும் அன்பும், அவ்விரண்டானும் வரும் அறமும் ஆகிய மூன்றுமே ஆகும். இவற்றை நீ எமக்கு அளித்தருள வேண்டும்.

எமக்கு என வகுத்த அல்ல, மிகப் பல,
மேம்படு சிறப்பின் அருங் கல வெறுக்கை
தாங்காது பொழிதந்தோனே  அது கண்டு,
இலம்பாடு உழந்த என் இரும் பேர் ஒக்கல்,
விரல் செறி மரபின செவித் தொடக்குநரும்,
செவித் தொடர் மரபின விரல் செறிக்குநரும்,
அரைக்கு அமை மரபின மிடற்று யாக்குநரும்,
மிடற்று அமை மரபின அரைக்கு யாக்குநரும்,
கடுந் தெறல் இராமனுடன் புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வெüவிய ஞான்றை,
நிலம் சேர் மதர் அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங் கிளை இழைப் பொலிந்தாஅங்கு,
அறாஅ அரு நகை இனிது பெற்றிகுமே
இருங் கிளைத் தலைமை எய்தி,
அரும்படர் எவ்வம் உழந்ததன்தலையே
(ஊன்பொதி பசுங்குடையார் -
 புறநானூறு - 378: 10-24)

உரை:- அரசர்க்கே உரிய பல நல்ல அணிகலன்களை என் சுற்றத்தார்க்குக் கொடுத்தேன். அவர்கள் அதைக் கண்டு திகைத்தனர். அவர்கள், விரலில் அணிய வேண்டியதைச் செவிகளிலும்,செவியில் அணிய வேண்டியதை விரலிலும், இடையில் அணிய வேண்டியதைக் கழுத்திலும், கழுத்தில் அணிய வேண்டியதை இடையிலும், அணிந்தனர். இக்காட்சி இராவணனால் சீதை கவர்ந்து செல்லப்படும்போது, காடுகளில் சிதறிக் கிடந்த நகைகளை வானரங்கள் அணிந்துபார்த்து ஆனந்தம் அடைந்ததைப் போன்றது என்னும் குறிப்பைத் தருவதாக  உள்ளது.

விழவணி மகளிர் தழையணிக் கூட்டும்
வென்வேற் கவுரியர் தொன்முது கோடி
முழங்கிரும் பெளவம் இரங்கும் முன்றுறை
வெல்போர் இராமன் அருமறைக் கவித்த
பல்வீழ் ஆலம் போல
ஒலியவிந் தன்றிவ் வழுங்கல் ஊரே
(மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார்-அகநானூறு - 70.)

உரை:- இராமன் இலங்கைமேற் செல்லுதற் பொருட்டுத் திருவணைக்கரையின் அருகிலிருந்த பெரிய ஆலமரத்தின் கீழே, தமக்குத் துணைவராயினாரொடு, மறைகளைச் சூழுங்கால், ஆங்குள்ள பறவைகள் ஒலிக்காதவாறு தன் அணையால் அடக்கினன் என்றதொரு வரலாற்றினைப் புலவர் கூறுகிறார்.

அலர் தூற்றிய ஊராரின் பேச்சொலி தலைவனின் வரைவு வருகையால் அடங்கிற்று எனத் தோழி கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. புறநானூறும் அகநானூறும் கூறும் இச்செய்திகள் வால்மீகி இராமாயணத்திலும், கம்பராமாயணத்திலும் இல்லை. மறைந்துபோன தமிழ் இராமாயணநூல்களில் இக்கதைகள் இடம் பெற்றிருக்கலாம்.

மேற்குறிப்பிட்டுள்ள பாடல்கள் மட்டுமல்லாது கலித்தொகையில் இராமாயணம், மகாபாரதம், பாகவதம் மற்றும்  புராணச் செய்திகள் மிகுதியாக உவமைகளாகக் கூறப்பெற்றுள்ளன. இவை மட்டுமல்லாது சமயம் தொடர்பான குறிப்புகள் பல சங்க இலக்கியங்களில் காணப்பெறுகின்றன. இவையனைத்தும்  சமயச் சிந்தனையில் மேலோங்கியிருந்த நம் முன்னோர்களின் வாழ்வியலை எடுத்துக்காட்டுகின்றன. சங்க இலக்கியப் பாடல்கள் பல வினைக்கோட்பாட்டினை வலியுறுத்திக் கூறுகின்றன.

சங்கம் மருவிய காலமும் காப்பியங்களும்
பதினெண்கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்றான திருக்குறளில் "தெய்வம்' (குறள். 43,55,1023), "தாமரைக்கண்ணான் உலகு' (குறள். 1103), திரு (இலக்குமி)(குறள். 920) ஆகிய சமயம் தொடர்பான செய்திகள் இடம்பெற்றுள்ளன. கட்டுரையாசிரியரின், "திருக்குறளில் இறைநெறி' என்ற நூலினைப் படித்து உண்மை உணர்க.

ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறுங்காப்பியங்கள் ஆகிய பத்துக் காப்பியங்களில்  எட்டுக் காப்பியங்கள் சமண சமயக் காப்பியங்கள், இரண்டு பெளத்த சமயக் காப்பியங்கள் ஆகும். தமிழிலக்கியத்திற்கு சமண சமயமும் பெüத்த சமயமும் அளித்த கொடைகள் மிகுதி.

சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை 
            கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே
திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே 
(சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை - 1)

பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம்
விரிகமல வுந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியுங் கையும் திருவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ன கண்ணே 
(சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை - 2)

படர்ந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்கு தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே
நாராய ணாவென்னா நாவென்ன நாவே
(சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை - 3)

எனச் சமணக் காப்பியமான சிலப்பதிகாரம், சமயப் பொதுமையை வலியுறுத்துகிறது.

கம்பராமாயணத்தில்,
மும்மைசால் உலகுக்கு எல்லாம் 
    மூல மந்திரத்தை, முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும் 
    தனிப்பெரும் பதத்தை, தானே
இம்மையே எழுமை நோய்க்கும் 
    மருந்தினை, இராமன் என்னும்
செம்மைசேர் நாமம் தன்னைக் 
    கண்களின் தெரியக்கண்டான்
(கம்பராமாயணம் - 4117)

ஓம் நமோ நாராயணாய என்று உரைத்து,
        உளம் உருகி,
தான் அமைந்து, இரு தடக்கையும் 
        தலையின்மேல் தாங்கி
பூ நிறக் கண்கள் புனல்உக,
        மயிர் புறம் பொடிப்ப,
ஞான நாயகன் இருந்தனன் 
         அந்தணன் நடுங்கி.
(கம்பராமாயணம் - 6338)

ஆகிய பாடல்களில் இராம நாமத்தின் சிறப்பையும், நாராயண நாமத்தின் பெருமையையும் கவிச்சக்கரவர்த்தி கம்பர் சுட்டிக்காட்டியுள்ளார். திருத்தொண்டர்களின் பெருமையைச் சிறப்பாக எடுத்துரைத்த முதல் தமிழ்க் காப்பியம் பெரியபுராணம். சமயம் தொடர்பான செய்திகள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நம் இலக்கியங்களில் உள்ளன என்பதற்கு இவையெல்லாம் சான்றுகளாகும்.

சைவம் -வைணவம் -தமிழ் வளர்ச்சி
 நாயன்மார்களும், ஆழ்வார்களும் தமிழ் மொழிக்கும், இலக்கியத்திற்கும் அளித்துள்ள கொடைகள் ஏராளம். பல புதிய யாப்பு வடிவங்களையும், சிற்றிலக்கிய வகைகளையும் தந்த பெருமை இவர்களுக்கு உண்டு.
திருமொழிமாற்று, திருமாலைமாற்று, வழிமொழித் திருஇயமகம், திருஏகபாதம், திருவிருக்குக் குறள், திருவெழுகூற்றிருக்கை, திருஈரடி, திருஈரடிமேல் வைப்பு, நாலடிமேல் வைப்பு, திருவிராகம், திருச்சக்கரமாற்று, வினாவுரை முதலிய புதிய யாப்பு மற்றும் அமைப்பு முறைகளைப் பதிகங்களில் பயன்படுத்திப் புலமைத்துவத்தை நிலைநாட்டியவர் திருஞான சம்பந்தர்.மேலும் புதுப்புதுப் பண்களில் பாடல்கள் பலபாடித் தமிழிசைக்குப் புத்துயிர் அளித்தவர். ஒரு கட்டத்தில் பெரும்பாணராகிய திருநீலகண்ட யாழ்ப்பாணரே இசையமைக்க முடியாமல் திணறிய யாழ்முரிப் பண்ணைப்பாடி இசைத்துறை வளர்த்தார்.

மாணிக்கவாசகரின் திருவாசகத்தில் பாவை, சாழல்,பொற்சுண்ணம்,வேசறவு, அம்மானை, திருத்தோள்ணோக்கம் எனப் பத்திற்கும் மேற்பட்ட சிற்றிலக்கிய வகைகளில் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. தாண்டகம் என்ற யாப்பை மிகச் சிறப்பாகக் கையாண்ட திருநாவுக்கரசர் யாப்பின் பெயரால் "தாண்டகவேந்தர்' என்ற சிறப்புப் பெயர் பெற்றார்.

வைணவ இலக்கியங்களிலும் பள்ளியெழுச்சி, மாலை, பாவை, திருமொழி, மடல் ஆகிய சிற்றிலக்கியக்கூறுகள் வளர்ச்சியடைந்த நிலையில் காணப்பெறுகின்றன. இவை யாவும் தமிழ் மொழியைச் சைவ,வைணவச் சமயங்கள் வளர்த்துள்ளமைக்கான எடுத்துக்காட்டுகளாகும்.

உரையாசிரியர்கள் மற்றும் இலக்கண ஆசிரியர்களில் பலர் சமண,பெüத்த சமயங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதை அவர்களின் உரைகளாலும் இலக்கண நூல்களில் உள்ள குறிப்புகளாலும் அறிய முடிகிறது.

பன்னிரெண்டாம் நூற்றாண்டிற்குப் பிறகு சிற்றிலக்கியங்கள் மிகுதியாகத் தோற்றம் பெற்றன. ஒவ்வொரு சிற்றிலக்கியமும் ஒவ்வொரு சமயம் சார்ந்து எழுந்தன. குற்றாலக் குறவஞ்சி சைவ சமயக் கருத்துகளைக் கொண்டுள்ளது. சான்றாக,

கிளைகளாய்க் கிளைத்தபல கொப்பெலாஞ்
 சதுர்வேதம் கிளைகள் ஈன்ற
களையெலாம் சிவலிங்கம் கனியெலாம்
 சிவலிங்கம் கனிகள் ஈன்ற
சுளையெல்லாம் சிவலிங்கம் வித்தெலாம்
 சிவலிங்க சொரூபம் ஆக
விளையுமொரு குறும்பலவின் முளைத்தெழுந்த
 சிவக்கொழுந்தை வேண்டு வோமே.

உரை:- கிளைகள் தந்த வளாரெல்லாம் சிவலிங்கம்;  அந்த மரத்தின் பழமெல்லாம் சிவலிங்கம்;  அப் பழங்களிலுள்ள சுளையெல்லாம் சிவலிங்கம்; அச் சுளைகளிலுள்ள கொட்டைகள் எல்லாம் சிவலிங்கவடிவமாக விளைந்துள்ள. இக் குறும் பலாவிடத்தே தோன்றி எழுந்த சிவபெருமானை நலந்தர வேண்டிக்கொள்வோம்.

முக்கூடற்பள்ளு சைவ,வைணவ சமயங்களைப் பற்றிய குறிப்புகளை ஒருங்கே பெற்றுத் திகழ்கின்றது. சமயப்பொதுமையை வெளிப்படுத்திய சிறப்பு இவ்விலக்கியத்திற்கு உண்டு.

14, 15, 16 ஆம் நூற்றாண்டுகளில் கிறிஸ்தவம், இஸ்லாம் சார்ந்து பல சிற்றிலக்கிய வகைகள் தோன்றின. கண்ணி என்ற யாப்பு வகை மிகுந்த செல்வாக்குப் பெற்றது. தங்கள் சமயக் கருத்துகளை எடுத்துரைப்பதற்கு பல அருளாளர்கள் இந்த அமைப்பினைப் பயன்படுத்தினர்.தேம்பாவணி, சீறாபுராணம், இரட்சணிய யாத்திரிகம் போன்ற காப்பியங்கள் தோன்றி தமிழுக்கு உரம் ஊட்டின.

அறிவு, அன்பு  -தெய்வம்
 பதினாறாம் நூற்றாண்டிற்குப் பிறகு சித்தர்கள் இறைத்தன்மை குறித்த உண்மைக் கருத்துகளைப் பதிவு செய்தனர். சித்தர் இலக்கியம் அனைத்துச் சமய அமைப்புகளுக்கும் எதிராகக் குரல் கொடுத்தது. சமயம் நிறுவனமயமானால் அது இறைத்தன்மையை உணர்வதற்குத் தடையாக அமையும் என்பதை ஆணித்தரமாக உரைத்தனர்.

 சைவம்,வைணவம், சமணம், பௌத்தம், இஸ்லாம், கிறிஸ்தவம் என அனைத்துச் சமயங்களும் அறியாமையைப் போக்கி அறிவைப் புலப்படுத்துவதற்காகவே ஏற்படுத்தப்பெற்றன. அறிவுக்கு ஒவ்வாத செயல்கள் எந்தச் சமயத்தில் பின்பற்றப்பெற்றாலும் அவற்றிற்கும் உண்மைச் சமயங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

 அறிவொன்றே தெய்வம் என்று ஆயிரம் சுருதிகள் சொல்வதைக் கேளீரோ என்று பாரதியார் கூறிய கருத்து இங்கு ஒப்புநோக்கத்தக்கது.
அறிவு நிரம்பியோரின் தன்மை அன்புள்ளத்தோடு இருப்பதுதான். அறிவின் முதிர்ந்த நிலைதான் அன்பு. உயிரிரக்கம்தான் சமயங்களின் முடிந்த முடிபு. மனித நேயமே அனைத்துச் சமயங்களின் அடிநாதம். வள்ளற் பெருமான் போல்,

எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் 
தம்முயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் 
உவக்கின்றார் யாவர் அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும் 
இடம் என நான் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திட 
என் சிந்தைமிக விழைந்த தாலோ

 என்று கருதும்  உயர்ந்த நிலை. இந்நிலையை அடையத்தான் சமயங்களை மனித இனம் பயன்படுத்தவேண்டும். சமயங்களின் பெயரால் கடவுள்தன்மை சிறுமைப் படுத்தப்பெறுவதை எதிர்த்து வள்ளலார் இராமலிங்க அடிகள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் சன்மார்க்கத்தைப் பரப்பினார். அவர்,
அன்பான தெய்வம் அறிவான தெய்வம் - என்
அறிவுக்குள் அறிவான தெய்வம்
என்று பாடி, தெய்வத்தின் தன்மையை உலகிற்கு உணர்த்தினார்.
உயிர்களிடத்து அன்பு வேண்டும் -தெய்வம்
உண்மை என்று தானறிதல் வேண்டும்
என்னும் மகாகவியின் உயர் தத்துவமே அனைத்துச் சமயங்களும் கூறும் ஒரே கருத்து.

சமயப் பொதுமை
சமயப் பொதுமையை வலியுறுத்துவோரை பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகள் வரவேற்றன. அனைத்துச் சமயக்கருத்துகளில் இருந்தும் சிறந்தவற்றைத் தொகுத்து அதனடிப்படையில் கடவுட்கொள்கைகள் உருவாக்கப்பெற்றன. 
தாயுமானவர், வள்ளலார், ஷீரடி சாய்பாபா, பரமஹம்சர், விவேகானந்தர், அரவிந்தர், பாரதியார்,போன்றோர் சமயப்பொதுமையை வலியுறுத்தியோர்களுள்  குறிப்பிடத்தக்கவர்கள்.

அறிவு வடிவென்று அறியாத என்னை
அறிவு வடிவென்று அருள்செய்தான் நந்தி
அறிவு வடிவென்று அருளால் அறிந்தே
அறிவு வடிவாய் அமர்ந்திருந் தேனே.
(திருமந்திரம் - அறிவுதயம் - 2357)
என்ற திருமந்திரப் பாடல் மனிதன் அறிவு வடிவாய் இருப்பதன் இன்றியமையாமையை உணர்த்துகின்றது. உயிர்களின் அனைத்துத் துன்பத்திற்கும் காரணம் அறியாமை. அறியாமை அகல அறிவில் தெளிவு ஏற்படவேண்டும். மகாகவி பாரதியாரின் கூற்றுப்படி ஞானநெருப்புப் பற்ற வேண்டும். ஞான நெருப்பினால் பிறவிக்குக் காரணமான அனைத்து அறியாமைக் காடுகளும் எரிந்து சாம்பலாகும்.

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்
அதை அங்கொரு காட்டிடைப் 
பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு
தழல் வீரத்தில் குஞ்சென்றும் 
மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்
அறிவின் முதிர்ந்த நிலை அன்பு. அன்பே கடவுள் என முதலில் முழக்கமிட்டவர்கள் தமிழர்கள். சான்றாக,

அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே 
(திருமந்திரம் - அன்புடைமை - 270)

ஆகிய திருமந்திர வரிகள் அறிவு, அன்பு ஆகியவற்றையே கடவுள்,தெய்வம் என்று கூறுகின்றன. உலக மொழிகளில் நம் தெய்வத்தமிழ்தான் உண்மை அறிவையும் அன்பையும் அடைவதற்கான வழிகளைக் கூறுகின்றது. எண்பது விழுக்காடு தமிழ் இலக்கியங்கள் சமயம் சார்ந்தவை.
எனவே, அவற்றையெல்லாம் கற்றுப் பண்பட்டவர்களாக, மிக உயர்ந்த சிந்தனைகளை உலகிற்கு வழங்கிய பெருமை மிக்கவர்களாக நாம் திகழவேண்டும். அதற்கு நம் மொழியும் சமயமும் உற்ற துணையாக அமையும். இவ்வுண்மையை உணர்ந்து நம் மண்ணின் பெருமையை, கிழக்கின் மேன்மையை மேற்கிற்கு அறிவிப்பதற்கு நாம் அனைவரும் முயலவேண்டும்.

அனைத்து உயிர்களிடமும் உயிர் இரக்கம் காட்டுதல், மனித நேயத்தை வளர்த்தல்,வேற்றுமையில் ஒற்றுமை கண்டு கூடி வாழ்தல் ஆகியவையே அனைத்து சமயங்களின் திரண்ட கருத்து எனலாம்.

சமயமில்லாமல் நம் மொழியில்லை. நம் மொழியில்லாமல் சமயம் இல்லை. இரண்டறக் கலந்துள்ள இவற்றினுள் நாமும் இரண்டறக் கலக்க வேண்டும். நம் மொழியும், நம் சமயமும்தான் நம்முடைய அடையாளங்கள். அதைக் காக்க வேண்டியது நம் அனைவரின் கடமை.

ADVERTISEMENT
ADVERTISEMENT