தமிழ் மொழித் திருவிழா

பழந்தமிழரின் தொன்மை வேர்கள்

23rd Dec 2019 05:32 PM | இ. சுந்தரமூர்த்தி,  மேனாள் துணைவேந்தர்

ADVERTISEMENT

 

பழந்தமிழரின் வரலாற்றையும் பண்பாட்டையும் அறிந்து கொள்வதற்குப் பெரிதும் பயன்படுவன சங்க இலக்கியங்கள். தமிழின் தொன்மையையும் வளமையையும் காட்டும் அரிய சான்றுகளாக அவை திகழ்கின்றன. பழந்தமிழரின் வாழ்வியல் கூறுகளை அறிந்துகொள்ள உதவும் வேர்கள் அவைதாம். சங்க இலக்கியமும் தொல்காப்பியமும் தமிழருடைய அகத்தையும் புறத்தையும் காட்டுவன.

தொல்லியல், மானுடவியல், அகழ்வாய்வியல் மூலம் பழந்தமிழரின் வேர்களை நாம் காணமுடியும். ஆதித்தநல்லூரில் கிடைத்துள்ள மண்டைக் கூடுகளும் எலும்புக் கூடுகளும் மனிதத் தோற்றத்தின் பழமையைக் காட்டும் சான்றுகள் எனவும்,தென்னிந்தியா ஒன்றரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே நிலப் பகுதியாக விளங்கியது என்றும் நிலவியல் ஆய்வாளர்கள் கூறுவர். அறிஞர் ஸ்காட் எலியட் கூறும் நான்காவது கடல்கோளுக்குப் பின் கோண்ட்வாணவின் எஞ்சிய பகுதியே லெமுரியாக் கண்டமாக விளங்கியது என்பர். மனித இனத்தின் தொட்டில் லெமுரியா என்பர் ஹெக்கல். அறிஞர் வி.ஆர். இராமச்சந்திர தீட்சிதர் முதலினம் தமிழினம் என்றும் முதன் மொழி தமிழ் மொழி என்றும் கூறுவார்.

மடகாசுகர் தீவின் பழைய பெயர் கோமார் என்றும், இங்கு வாழ்ந்தவர் கோமாரி என்றும் அழைக்கப்பட்டனர். பழைய இனத்தின் பெயர் கொம்ரி. குமரிக் கண்டம் என்னும் பெயரினையும் நாம் இணைத்து ஆராய்ந்தால் நம் வரலாற்றின் புதிய வேர்கள் கிடைக்கக் கூடும்.

ADVERTISEMENT

குமரிக் கண்டச் சிதைவிற்குப் பின் அதன் பெரும்பகுதியாகவும் உட்பகுதியாகவும் இருந்த நாவலந் தீவைச் சார்ந்த தக்காண பீடபூமியிலும் அதன் தென்பாலும் 80,000 ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பர்.

நாவலந் தீவில் வாழ்ந்த தமிழர் தமிழகத்தினின்றும் பாகிஸ்தான் சென்று பின் வடக்கும் கிழக்கும் நோக்கித் திபெத், மங்கோலியா நாடுகளிலும் வடமேற்கு நோக்கிப் பாரசீகம்,மெசபடோமியா, அசரியா மற்றும் பாலஸ்தீனப் பகுதிகளிலும் மத்தியதரைக் கடல் வழி எகிப்து லெபனான் கிரேக்கம் துருக்கி மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவினர் என்று கருதுகின்றனர். கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிற்கு முன் இது நிகழ்ந்திருக்கலாம் என்பர். இதுகுறித்து மேன்மேலும் ஆராய வேண்டும்.

கி.மு. 4000 ஆண்டுகளுக்கு முன்பே நாகரிகத்தில் சிறந்தவர் மெசபடோமியர். இவர்கள் கட்டடக் கலையில் சிறந்து விளங்கினர். ஊரும் நகரமும் எழுப்பி அரண்மனையில் வாழ்ந்தனர். அரண்மனைகளில் சேரநாட்டுத் தேக்கு மரமும் பயன்படுத்தப் பெற்றுள்ளது என்பர்.மெசபடோமியாவில் காணப்படும் முத்திரைகள் எகிப்து மற்றும் இந்தியாவோடு வாணிகத் தொடர்பிருந்ததை நேரு தன்னுடைய உலக வரலாற்றில் எழுதுவதும் குறிப்பிடத்தக்கது.

சுமேரியர் தோற்றமும் திராவிடர் தோற்றமும் ஒன்று போல இருப்பதாலும் சுமேரிய எழுத்து முறையும் மொழியும் பல பெயர்களும் தமிழோடு ஒத்திருப்பதாலும் இதுகுறித்து மேலும் ஆராயலாம். சுமேரியரின் கடவுள் "தமுஃசி'; சுமேரிய அரசர் பெயர் தமுஃசி,தமுழி; இவற்றைத் தமிழோடு ஒப்பிட்டு ஆராயலாம்.

 சுமேரிய பாபிலோனிய மக்களின் வழிபடு கடவுளர் பெயரும் தமிழ்ப் பண்பாட்டோடு ஒத்து வருவதைக் காணலாம்.கேப்பிட்ஸ் என்பவர் சுமேரிய - திராவிட மொழிகளின் நெருக்கம் குறித்தும் ஆராயலாம். சுமேரியன் மக்கள் பெயர்களாகச் சங்கன், மக்கன் முதலியன காணப்படுகின்றன. பாபிலோனிய நிப்பூரில் தமிழ்க் காசும் முத்திரைகளும் கிடைத்துள்ளன. இவை தமிழகத்தோடு கொண்டிருந்த வாணிபத் தொடர்பைக் காட்டும்.

 தமிழர் தோற்றமும் பரவலும் குறித்து ஆராய்ந்த இராமச்சந்திர தீட்சிதர், "சிந்துவெளி, ஏலாமி, சுமேரியா, பாபிலோனியா, எகிப்து முதலிய பண்டைய நாகரிகங்களை உருவாக்கியவர்கள், தமிழர்களே' என்று குறித்துள்ளார். இன்றைய அகழ்வாய்வுகளும் பிற ஆய்வுகளும் இக் கூற்றை உறுதிப்படுத்துகின்றன எனலாம். பாட்டியைக் குறிக்கும் ஒளவை என்னும் சொல் "ஒளவா' என்று எபிரேயம் மொழியில் குறிக்கப் பெறுகின்றது.துகி - அகில் எனவும் குறிக்கப் பெறுகின்றது.

ஆப்பிரிக்க மக்களையும் தமிழர்களையும் ஒப்பிட்டு ஆராய்ந்தவர்கள் இரு நாட்டு மக்களின் மரபுக் கூறுகள் ஒத்து விளங்குவதையும் குறிப்பிட்டுள்ளனர். முருகனைத் தமிழர்கள் வழிபடுவதுபோலவே "முருங்கு' என்னும் கடவுளை ஆப்பிரிக்கர் வணங்குகின்றனர். முருங்கு வாழுமிடம் மலைகள் என்பது அவர்கள் நம்பிக்கை. திருமுருகாற்றுப்படையில் வரும் குன்றுதோறாடல் பகுதிகள் ஒப்பிடற்குரியன. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள கோயில் அமைப்பு கேரள, தமிழகக் கோயில்கள் அமைப்பை ஒத்திருக்கிறது என்பர்.

மயன் நாகரிகம் தொன்மையைச் சுட்டுவது.பெருவில் வாழும் மக்கள் சூரியனையே கடவுளாகக் கொண்டிருந்தனர். இங்கு கி.மு. 1500க்கு முன்பே தமிழர்கள் குடியேறியதாகக் கூறுவர். அவர்களது நாகரிகத்தை "இன்கா நாகரிகம்' எனக் குறிப்பிடுவர். மிகப் பழங்காலத்திலேயே கடற்பயணத்தில் ஆர்வம் காட்டிய தமிழர்கள் அட்லாண்டிக் கடலைத் தாண்டி வட அமெரிக்காவில் கண்டெடுக்கப் பெற்ற பெனிசீயரின் கல்வெட்டில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்குரிய தமிழக வரிவடிவ எழுத்துக்களும் உள்ளதாகக் கூறுவர். புலவர் காசுமானின் "குமரிய நாவலந் தீவின் உரிமை வரலாறு' நூலில் இத்தகு பழமையான செய்திகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இத்துறையில் ஆராய்ந்தால் பழந்தமிழரின் தொன்மைக்கான வேர்களைக் காணலாம்.

தமிழுக்கும் ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள் மொழிக்கும் இடையேயுள்ள வியத்தகு ஒற்றுமைகள் குறித்துப் பலரும் ஆராய்ந்துள்ளனர். அறிஞர் பி. இராமநாதன் இதுகுறித்து விரிவாக ஆராய்ந்து எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 தமிழரின் தொன்மை பல்லாயிரம் (10,000) ஆண்டுகட்கும் முற்பட்ட செய்தியை ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் நெருங்கிய பிணைப்போடு ஒப்பிட்டுக் காட்டியுள்ளார். 1938ஆம் ஆண்டில் அறிஞர் எல்கின் ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள் தென்னிந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்பர். 1963ஆம் ஆண்டில் லாக்வுட் என்பார் இந்தியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்தவர்கள் என்பார். அண்மைக்கால ஆய்வுகளின்படி 60,000 ஆண்டுகளுக்கு முன் என்றும் குறிப்பர். தமிழில் வரும் நான், யான், ஞான் என்பன ஞா, ஞாய், ஞான்ய என்று ஆஸ்திரேலிய மொழியில் வரும் என்பார். முன்னிலையில் வரும் நீன், நின், நின்ன என்பன ஞின்னே, ஞிண்டு, ஞிண்டே என வரும் என்பார். இவைபற்றியெல்லாம் ஆராயும்போது பழந்தமிழின் தொன்மை வேர்கள் எங்கெங்கெல்லாம் பரவியிருந்தன என்பதனை அறிய முடியும்.

 சங்க கால வரலாற்று ஆய்வுகள் அதன் மேல் எல்லையை கி.மு. 400 என முன்பு கூறின. ஆனால் அண்மைக் கால அகழ்வாய்வுகளும் மொழியாய்வுகளும் இன்னும் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்த பழமையை வரையறுத்துச் செல்கின்றன.

 கி.மு. 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சாலமன் காலத்தில் வழங்கிய சில சொற்கள் தமிழ்ச் சொற்கள் என்று மொழியியல் அறிஞர் கூறுவர். கி.மு. 4000 அளவிலேயே திராவிட மக்கள் சிற்றாசியாவிலிருந்து இலங்கை வரை வாழ்ந்திருந்ததை மொழிகளின் ஒப்பீட்டு வாயிலாக உணர முடிகிறது. இதனை உலகப் புகழ் பெற்ற மொழியியல் வரலாற்று ஆய்வாளர் மெக் அல்பின் போன்றோர் நிறுவியுள்ளனர். திராவிட நாகரிகம் ஸ்பெயின், கிரேக்கம் வரை பரவியுள்ளதாக ஹீராஸ் பாதிரியார் குறிப்பிடுவார். ஹீராஸ்பாதிரியார் தன்னை `I am a Dravidian from Spain’என்று குறிப்பிடுவது குறிப்பிடத்தக்கது.

 சங்ககால மன்னர்களான மாக்கோதை,கொள்ளிப்பொறை, குட்டுவன் கோதை போன்ற தமிழ் மன்னர்கள் பொறித்த நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அண்மையில் கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த லேப்ரஸ் என்றழைக்கப்படும் சுவடியில் கிரேக்க மொழியில் எழுதப்பெற்ற வணிக ஒப்பந்தம் ஒன்று எகிப்து நாட்டில் கிடைத்துள்ளது. அது ஆஸ்திரியா நாட்டுத் தலைநகரமான வியன்னா அருங்காட்சியகத்தில் உள்ளது. மத்திய தரைக் கடலில் நைல் நதியின் முகத்துவாரத்தில் அமைந்துள்ள அலெக்சாண்டிரியா நகர வணிகனுக்கும் சேரநாட்டுத் துறைமுகமான முசிறியில் வசிக்கும் ஒரு வணிகனுக்குமிடையே ஏற்பட்ட வணிக ஒப்பந்தமாகும் அது. இந்த வணிக ஒப்பந்தத்தில் தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்களும் அது அலெக்ஸெண்டிரியா சென்றடைய வேண்டிய முறைகளைப் பற்றியும் குறிப்பிடுகிறது.

 சங்க காலத்தில் தமிழர்கள் ரோம நாட்டோடு நேரடியாக வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதை இந்த ஒப்பந்தம் காட்டுகிறது.செங்கடல் பகுதியில் கிடைத்த பானை ஓடுகளில் கொர்றப்பூ மான், கண்ணன், ஆதன், சாத்தன் முகலாயப் பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளன. பழந்தமிழர்களின் வணிகத் தொடர்பின் வேர்கள் இங்கு தென்படுகின்றன. பதிற்றுப்பத்தில் காணலாகும் "பொன்னொடுவந்து கறியொடு பெயரும்' என்னும் சங்கப் பாடல் வரியும் இதற்குச் சான்றாகும். யவனர் வந்து மிளகேற்றிச் சென்றதைக் கூறும் சேரரின் வணிக நகரமாகக் கொடுமணல் விளங்கியதைப் பதிற்றுப்பத்தும் அகழ்வாய்வுகளும் புலப்படுத்துகின்றன.கோவை மாவட்டம் வென்னலூர்,கொடுமணல், கரூர் முதலிய ஊர்களில் அகஸ்டஸ் சீசரின் உருவம் பொறித்த நாணயங்கள் மிகுதியாகக் கிடைத்துள்ளன.

திருப்பூருக்கு அருகில் உள்ள படியூரில் கிடைக்கும் பச்சைக் கல் ரோமானியருக்கு மிகவும் பிரியமானது எனத் தாலமி கூறுவதும் குறிப்பிடத்தக்கது. மணிக் கல்லைக் குறிக்கும் `Bayl’என்னும் ஆங்கிலச் சொல் தமிழிலிருந்து எவ்வாறு வந்தது என்பதை ஆய்வாளர் பிஸ்வாய் குறிப்பிடுவார்.

தொழிலும் வாணிகமும்
பண்டைய தமிழர் ஈடுபட்டிருந்த இரு பெரும் உற்பத்தித் தொழில்களாக உழவும் வாணிகமும் விளங்குகின்றன. உழவுத் தொழில் பெற்றிருந்த முதன்மையைச் சங்க நூல்களும் பிறவும் நமக்கு நன்கு காட்டுகின்றன.வேளாண்மையைப் போலவே வணிகத் தொழிலிலும் மக்கள் ஈடுபட்டிருந்தனர்.

சங்க காலப் புலவர்களின் பெயர்கள் அவர்கள் வாணிகத்திலும் தொழிலிலும் ஈடுபட்டிருந்ததைக் காட்டும்.
கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார், மதுரைப் பண்டவாணிகன் இளந்தேவனார், மதுரை அறுவை வாணிகன் இள வேட்டனார், உறையூர் இளம் பொன் வாணிகனார், உறையூர் மருத்துவன் தாமோதரனார், கச்சுப்பேட்டு இளந் தச்சனார், கணக்காயன் தத்தத்தனார், கணியன் பூங்குன்றனார், தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார், மதுரைக் கொல்லன் புல்லன் போன்ற பெயர்கள் இவர்கள் மேற்கொண்டிருந்த தொழில்களைக் காட்டும்.

ஏற்றுமதிப் பொருள்களும் இறக்குமதிப் பொருள்களும் துறைமுகத்தில் நிறைந்து இருந்தமையைச் சங்க நூல்கள் காட்டுகின்றன.துறைமுகங்களில் விற்பனைக்கான பொருள்களைச் சுமந்து கொண்டு துறைமுகங்களில் கப்பல்கள் காத்திருந்தன என்று மதுரைக் காஞ்சி கூறும்.

கடுங் காலொடு கரை சேர
நெடுங் கொடிமிசை இதை எடுத்து
இன்னிசை முரசம் முழங்க
பொன் மலிந்த விழுப்பண்டம்
நாடு ஆர நன்கு இழிதரும்
ஆடு இயல் பெரு நாவாய்
மழை முற்றிய மலை புரைய
துறை முற்றிய துளங்கு இருக்கை

எனத் துறைமுகக் காட்சியை மதுரைக் காஞ்சி எடுத்துக் கூறும். அக்காலத்திய மக்கள் பொருளியல் மேம்பாட்டிற்குக் கடல் வாணிகத்தைப் பெரிதும் பயன்படுத்தினர்.

பொருளாதார மேன்மையுடன் சங்கச் சமூகம் விளங்கியதை மாங்குடி மருதனார் நெய்தல் நிலச் சிறப்பாக எடுத்துரைப்பார். கடல் தந்த முத்துக்களும்,நேரிதான வளையல்களும், வணிகர் விற்பனைக்காகக் கொண்டு வந்த பல்வேறு பண்டங்களும், கரிய பெரிய உப்பங்கழியில் கிடைத்த வெண் உப்பும்,பொருத்த புளியும் மீன் துண்டங்களும் பெரிய மரக்கலங்களில் வணிகத்திற்காகச் சென்றன.மேல்நாட்டிலிருந்து கொண்டு வந்த புரவிகளும் அங்கிருந்தன என்று நாள்தோறும் நாள்தோறும் கடல் வாணிகம் சிறந்திருந்ததைப் பின்வருமாறு குறிப்பார்!

முழங்கு கடல் தந்த விளங்குகதிர் முத்தம்
அரம் போழ்ந்து அறுத்த கண்நேர் 
            இலங்குவளை
பரதர் தந்த பல்வேறு கூலம்
இருங்கழிச் செருவின் தீம்புளி வெண்உப்பு
பரந்தோங்கு வரைப்பின் வன்கைத் திமின்
விழுமிய நாவாய் பெருநீர் ஓச்சுநர்
நனந் தலைத்தேஎத்து நன்கலன் உய்ம்மார்
புணர்ந்துடன் கொணர்ந்த புரவியொடு 
            அனைத்தம்
வைகல்தோறும் வழிவழிச் சிறப்பு

என நெய்தல் நிலச் சிறப்பினை மதுரைக் காஞ்சியில் எடுத்துரைப்பது குறிப்பிடத்தக்கது.
பண்டமாற்று முறையில் வாணிகம் நடைபெற்றதைப் பெரும்பாணாற்றுப்படை மூலம் அறிய முடிகின்றது.தேன்,நெய், கிழங்கு ஆகிய பண்டங்கள் மீனுக்கும் நருவுக்கும் பண்டமாற்றாகக் கொள்ளப் பெற்றன.நெய்யை விற்று எருமை வாங்கினர் என்பதும் அறியத்தக்கது.

நான் மோர் மாறும் நல்மாமேனி
சிறுகுழை துயில்வரும் காதின் பனைத்தேன்
குறுநெறிக் கொண்ட கூந்தல் ஆய்மகள்
அளவிலை உணவின் சினைஉடன் அருத்தி
நெய்விலைக் கட்டிப் பசும்பொன் கொன்னான்
எருமை, நல்ஆன், கருநாகு பெறூஉம்
எனப் பெரும்பாணாற்றுப் படை எடுத்துரைக்கும்.
உப்பினை ஊர் ஊராக எடுத்துச் சென்று விற்றனர். "உமணர் உப்பு வண்டி' என்று அவற்றை இலக்கியங்கள் கூறும். பண்டங்களை வண்டிகளின் மீதும் கழுதைகளின் மீதும் ஏற்றிச் சென்றனர்."அணர்ச்செவி கழுதைச் சாத்தொடு வழங்கும் உல் குடைப் பெருவழி' என்று செல்லும் வழியைக் குறிக்கும். ஆறலை கள்வருக்குப் பயந்து வணிகச் சாத்துகள் கூட்டம் கூட்டமாக வண்டிகளைச் செலுத்துவராம். வண்டிகளுக்கு வரியும் பெற்றதாகக் கூறப்படுகின்றது. வண்டிகளின் மேல் அளவும் பொறிக்கப்படுவதாகச் சிலப்பதிகாரம் கூறும்.

வணிகர் நடுவுநிலை தவறாது வாணிகம் செய்தனர். பிறர் கூறும் பழிக்கு அஞ்சி நேர்மையுடன் உண்மையான விலையைக் கூறி நேரிய வாழ்க்கையை நடத்தினராம்.

நெடு நுகத்துப் பகல் போல
நடுவுகின்ற நல் நெஞ்சினோர்
வடு அஞ்சி வாய்மொழிந்து
தமவும் பிறவும் ஒப்பநாடிக்
கொள்வதும் மிகை கொளாது
கொடுப்பதும் குறை கொடாது
பல்பண்டம் பகர்ந்து வீசும்
தொல் கொண்டித் துவன்றிருக்கை

என நடுவுநிலை புரிந்து வாழும் வாணிகரைப் போற்றிய சமுதாயம் சங்க காலச் சமுதாயம் எனலாம்.

சங்ககால மக்கள் கிரீஸ்,ரோம், எகிப்து,சீனம் ஆகிய நாடுகளோடு கடல் வாணிபம் வைத்திருந்தனர் என்பதை டாக்டர் கே.கே.பிள்ளை சான்றுகளோடு புலப்படுத்தியுள்ளனர். தமிழ்நாட்டில் விளைந்த நறுமணப் பொருள்கள் பலவும் பிறநாட்டில் இருந்ததைக் காணலாம். யூதர்களின் ஆதிசமயத் தலைவரான மோசஸ் தாம் நடத்தி வந்த இறை வழிபாட்டில் ஏலக்காயைப் பயன்படுத்தினர் (கி.மு. 1490) என்பர்.தென் அரேபிய நாட்டு அரசி ஷேபா, இஸ்ரேலின் மன்னன் சாலமனைக் காணச் சென்றபோது ஏலம், இலவங்கம் முதலிய நறுமணப் பொருள்களைக் கொண்டு சென்றதாகக் கூறுவர்.

தமிழகம், பாபிலோனியா இடையே அக்காலத்தில் விரிவான வாணிகம் நடைபெற்று வந்துள்ளது. பாபிலோனியாவில் நிப்பூர் என்னுமிடத்தில் முரசு என்பவரும் அவர் மக்களும் நடத்தி வந்த காசு வாணிகத்தில் சில பற்றுவரவுப் பதிவுகள் கிடைத்துள்ளன. கணக்குப் பதியப்பட்ட களிமண்ணோடுகள் கிடைத்துள்ளன. தமிழ் வாணிகர்கள் பாபிலோனியாவில் குடியேறித் தொழில் நடத்தியுள்ளனர் என்பது தெரிய வருகின்றது.

தமிழக எகிப்துக்கிடையே இருந்த வாணிகத் தொடர்பு எரித்திரியக் கடலின் பெரிப்ளூஸ் மூலம் தெரிய முடிகின்றது. எகிப்தின் 17 ஆம் அரச பரம்பரையினருக்கு இறக்குமதியான பொருள்களுள் சேர நாட்டுத் துறைமுகங்களிலிருந்து அனுப்பப் பெற்றன என்பது.தேக்கு மரம், மஸ்லீன் துணி முதலியன கேரளத்திலிருந்து கடல் வழியாக நேராகப் பாபிலோனியாவிற்குச் சென்றிருக்கக் கூடும்.

கிரேக்க அறிஞர்களின் நூல்களில் பல தமிழ்ச் சொற்கள் காணப்படுகின்றன என்பார். அரிஸாஅரிசி), கருவா (இலவங்கம்), கார்ப்பியன், சிஞ்சிபேராஸ் (இஞ்சிவோ) முதலிய பல சொற்கள் குறிப்பிடத்தக்கவை.

நறுமணப் பொருள்களைத் தமிழகத்திலிருந்து விரும்பி வாங்கினராம் ரோமாபுரி மக்கள்.ரோமாபுரி மக்களின் ஆறு இலட்சம் பவுன் தங்கம் தமிழர் கைக்கு மாறுகிறது என்று அந்நாட்டில் குறிப்பிடுவராம். பழந்தமிழ் மக்களின் வணிக மேலாண்மை, இக்குறிப்புகளால் புலனாகும்.
யவனர்கள் தமிழ் மன்னர்களிடம் பணிபுரிந்தனராம். மணிமேகலை யவனத் தச்சர் என்று குறிப்பிடுகிறது. அவர்கள் கைவினைக் கம்மியர்களாக விளங்கினர்.

"யவனர் நன் கலந் தந்த தண் கமழ் தேறல் பொன்செய் புனைகலம்' என்று புறநானூறு (26) கூறும்.

சுள்ளிஅம் பேரியாற்று வெண்நுரை கலங்க
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளம் கெழு முசிறி ஆர்ப்ப 
            (அகம் 149)

என்று முசிறித் துறைமுகத்தின் வணிகச் சூழலைக் காட்டுகிறது.
பழந்தமிழர்கள் வாணிகக் கலையில் சிறந்திருந்தனர். கடலோடியும் வாணிகம் புரிந்தனர் என்பது இவற்றால் நன்கு புலனாகும்.

ஆடற்கலை
பண்டைத் தமிழ் மக்கள் ஆடற்கலையில் பெரிதும் நாட்டம் கொண்டிருந்தனர். ஆடற்கலையினைக் கூத்துக்கலை என்றும் குறிப்பிட்டனர். கூத்த நூல் என்றே பழந்தமிழ் நூல் ஒன்று இருந்ததைக் குறிப்பிட்டுள்ளன. சங்ககாலத்தில் ஆடல் முறையினை இருவகையாகப் பிரித்தனர்.வேத்தியல் என்றும் பொதுவியல் என்றும் இருவகையாகப் பகுத்தனர். மன்னருக்காக ஆடப்பெறும் கூத்து வேத்தியல் எனப்பட்டது.பொதுமக்களுக்காக ஆடப்பெற்ற கூத்து, பொதுவியல் எனப்பட்டது.தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்ற நூல்களால் பழந்தமிழரின் ஆடற்கலைப் புலமை புலனாகின்றது.
பழந்தமிழ் நூல்களில் பலவகையான கூத்துகள் காணப் பெறுகின்றன. கடையம், மரக்கால், குடை,துடி, அல்லியம், பல் குடம்,பேடு, பாவை,கொடுகொட்டி, பாண்டரங்கம் முதலாய கூத்துகள் ஆடப் பெற்றன. இவற்றை நின்றும் வீழ்ந்தும் ஆடுவர்.

சிலப்பதிகாரம் இவ்வாடற்கலையைப் பற்றி விரிவாகப் பேசுகின்றது. ஆடற்கலையான நாட்டியத்தில் தேர்ச்சி பெற்றவர்களுக்குத் "தலைக் கோலி' என்னும் பட்டம் வழங்கிப் பாராட்டினர். "தலைக்கோல் அரிவை' என்றும் இவர்களைப் போற்றினர்.
சிலம்பில் அரங்கேற்றுக் காதையில் மாதவி ஆடிய ஆடலுக்கு மன்னன் 1008 கழஞ்சு மதிப்புள்ள பொன்மாலையை வழங்கினான் என்று கூறப்பட்டுள்ளது.

பொன்னியல் பூங்கொடி
புரிந்துடன் வகுத்தெனநாட்டிய நன்னூல் 
நன்கு கடைப்பிடித்துக்காட்டினான் ஆதலின்
காவல் வேந்தன் இலைப் பூங்கோதை 
இயல்பினில் வழா அமைத்தலைக்கோல் எய்தித்
தலை அரங்குஏறி விதிமுறைக் கொள்கையின்
ஆயிரத்து எண் கழஞ்சு ஒருமுறையாகப் பெற்றனன்
அதுவே
என்னும் பாடல் வரிகளால் "நாட்டிய நன்னூல்' பயின்று ஆடற்கலையைப் போற்றினர் என்னும் செய்தி புலனாகின்றது.

மதுரைக் காஞ்சியில் மக்கள் துணங்கைக் கூத்து ஆடிய செய்தி தெரிய வருகின்றது. முல்லை நிலத்தில் "ஆய்ச்சியர் குரவை' ஆடப் பெற்றது. ஆடுமகன், ஆடுமகள், விறலி, கூத்தர் என்போர் ஆடற்கலை வல்லவர்களாகத் திகழ்ந்தனர்.

ஓவியம்
பழந்தமிழ் இசை, நாட்டியம் முதலான கலைகளில் தேர்ந்திருந்தது போலவே ஓவியக் கலையிலும் ஈடுபாடு கொண்டிருந்தனர். நாடக அரங்கில் வண்ணங்களால் தீட்டப்பெற்ற அழகிய திரைச்சீலைகள் இருந்தன. இவை ஓவிய எழினிகள் எனப்பட்டன. சுவரின் மேல் சுதை ஓவியங்கள் தீட்டப் பெற்றிருந்தன.

கோட்டினால் வரைந்த சித்திரத்தைப் "புனையா ஓவியம்' எனக் கூறினர். மணிமேகலையில்,
"வெண் சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய கண்கவர் ஓவியம்' இருந்ததாகக் குறிப்பு வருகின்றது. எளிமையாகக் காட்சியளித்த மணிமேகலையைச் சீத்தலைச் சாத்தனார். 

"புனையா ஓவியம் புறம் போந்தன்ன' என்று குறிப்பிடுவார். சித்திரம் எழுதும் கோலை "வட்டிகை' எனக் கூறினர்."வட்டிகைச் செய்தியின் வரைந்த பாவை' என்னும் தொடர் இதனைப் புலப்படுத்தும்.

சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் உரையினால் அக்காலத்தில் ஓவிய நூல் இருந்ததாக அறிகின்றோம். மணிமேகலை "ஓவியச் செந்நூல்' என்று குறிப்பிடும்.

நாடக மகளிர்க்கு நன்கணம் வகுத்த
ஓவியச் செந்நூல் உரைநூற் கிடைக்கையும்
கற்றுத் துறை போகிய பொற்றொடி நங்கை
என்று மணிமேகலை குறிப்பிடுகின்றது.

பாண்டிய மன்னன் மாறன்வழுதி "சித்திர மாடத்துத்துஞ்சிய' எனும் அடைமொழியால் சிறப்பிக்கப் பெறுவதும் எண்ணத்தக்கது.
பாரியின் அரண்மனையைக் கபிலர் 
"ஓவத்தன்ன இடனுடை வரைப்பு'
எனப் போற்றினார். ஓவம் என்பது ஓவியம் என்ற சொல்லுக்கு நிகரானது என்பார்.மேலும் ஓவியக் கலைஞர்களைக் "கண்ணுள் வினைஞர்' எனவும் ஓவிய மாக்கள் எனவும் சங்காலத்தில் போற்றினர். ஓவியங்கள் அடங்கிய மண்டபத்தை "எழுத்துநிலை மண்டபம்' எனவும் குறிப்பிட்டனர். மண்டபத்தின் மேல் விதானத்தில் ஓவியங்கள் வரையப் பெற்றிருப்பதைச் சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் "ஓவிய விதானம்' என்று குறிப்பிடுவார்.

பெண்களின் உடலில் ஓவியம் எழுதியதைத் "தொய்யில் கொடி' என்று குறிப்பிட்டனர். பிற்காலத்தே சித்தன்னவாசல் போன்ற இடங்களில் எழுதப் பெற்ற குகை ஓவியங்கள் உலகப் புகழ் பெற்றனவாய் விளங்குகின்றன. பழந்தமிழர் ஓவியக் கலையை நன்கறிந்திருந்தனர் என்பது இவற்றால் நன்கு புலனாகும்.

கட்டடக் கலை
பழந்தமிழரின் கட்டடக் கலைக்குச் சான்றாகத் திகழ்வது கடலில் மூழ்கிய பூம்புகார்ப் பட்டினம். அண்மைக் காலத்தில் கடந்த அகழ்வாய்வுகள் மூலமும் செயற்கைக் கோள்கள் வழியாகவும் அந்நகரின் பல்வேறு சிறப்புகளையும் நன்கறிய முடிகின்றது. சிலம்பு பூம்புகாரின் நகரமைப்புச் சிறப்பை விரிவாக எடுத்துரைக்கின்றது.

தொல்காப்பியம் வேந்தர்களின் அரண்மனையைச் சுற்றிலும் வலிமையான அரண்கள் இருந்ததாகக் கூறும். இதனை "முழுமுதல்அரணம்'(தொல்பொருள்) என்று தொல்காப்பியம் கூறும்."ஆரெயில் மதிற்குடுமி' என்னும் தொடரும் குறிப்பிடத்தக்கது.

அரசனது இல்லம் என்னும் பொருளில் சங்க இலக்கியங்களில் கோயில் என்னும் சொல் எடுத்தாளப் பெற்றுள்ளது.சோழன் கோயில்(புறம் 378) என்னும் புறநானூற்றுத் தொடர் கருதத் தக்கது.

பொருநராற்றுப்படை கூறும் "திருக்கினர் கோயில்' என்பதும் (90) அரசனுடைய இல்லத்தைக் குறிக்கும் என்பர்.சிலம்பின் சிலம்புங் கோயில் (நெடு 100),"வெண் கோயில் மாசூட்டும்'(பட்டினம் 50) என்பனவும் கருதத்தக்கன.

செங்கற்கள் கொண்டு நெடுநிலைக் கோட்டங்கள் கட்டப் பெற்றிருந்தன."சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டம்' என்று சிலப்பதிகாரம் கூறும்.செங்கல்லை இட்டினர்(அகம் 167) என்னும் சொல்லால் குறிப்பிட்டனர்."இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தன'(அகம் 167) என்பது அகநானூறு.
செல்வ வளத்திற்கேற்ப உயர்ந்த மாடங்கள் அமையப் பெற்ற இல்லங்களும் இருந்தன. முற்றம், திண்ணை, பல கட்டுகள்,பெரிய பெரிய வாசல்கள், இடைகழி, மாடங்கள் கொண்டு பழந்தமிழர் இல்லங்கள் விளங்கின.

ஏழகத் தகரொடு உகரு முன்றில்
குறுந் தொடை நெடும்படிக்கால்
கொடுந் திண்ணை பஃறகைப்பின்
புழைவாயிற் போகிடைகழி
மழை நோயும் உயர் மாடம்

எனப் பட்டினப்பாலை (141-145) குறிப்பிடும்.
காற்று வருவதற்கு ஏற்பச் "சாலேகம்'(நெடுநல் 125) அமைந்த வீடுகள் இருந்தன. இதனை "வாய்க் கட்டளை' (நெடு 62) எனவும் குறிப்பிடுவர்.
வானுற நிவந்த மேனிலை மருங்கின்
வேனிற் பள்ளித் தென்வளி தரூஉம்
நேர் வாய்க் கட்டளை (60-62)
என நெடுநல்வாடை கூறும்."கோலச் சாளரம்'(சிலம்பு 2:23) "மான்கட் காலதர்'(சிலம்பு 5, 8) எனச் சிலம்பு கூறும்.

சில்லென்ற காற்று உள்ளே புகுமாறு இல்லங்கள் வடிவமைக்கப் பெற்றிருந்தன."சில் காற்று இசைக்கும் பல் புழை நல் இல்'(மதுரை 308) என மதுரைக் காஞ்சி குறிப்பிடுவது எண்ணத்தக்கது.

கலைச் சொற்கள்
பழைய இலக்கண இலக்கியங்களிலும் ஆவணங்களிலும் வரும் கலைச் சொற்கள் பழந்தமிழரின் தொழில்நுட்பத் திறனை அடையாளப்படுத்தும் வேர்களாகும். இன்றும் பழங்கால மரபுகளைத் தொடர்ந்து பின்பற்றி வருகின்ற கோயிற் கட்டடக் கலைஞர்கள், சிற்பக் கலைஞர்கள் ஓவியக் கலைஞர்கள், தச்சர், கம்மியர்,கொல்லர், தட்டார் ஆகியோரிடையே பன்னூறு கலைச் சொற்கள் வழக்கில் உள்ளன. இவற்றை வகைதொகை செய்து ஆராயும்போது பழங்காலத்தில் வழக்காற்றிலிருந்த பல கலைச் சொற்கள் கிடைக்கும்.

கலைச் சொல்லாக்கம் பற்றிய ஆய்வுகளில் அண்மைக் காலத்தில் நாம் கவனம் செலுத்தினாலும் சென்ற நூற்றாண்டிலேயே இதற்கான முயற்சிகள் தொடங்கப் பெற்றுவிட்டன.ரேனியசு பாதிரியாரின் பூமிசாஸ்திரம், டாக்டர் சாமுவேல் பிஷ்கீறீனின் மனுஷ அங்காதி பாதம்,கெமிஸ்தம், இரண வைத்தியம் முதலிய நூல்கள் தமிழ்க் கலைச்சொற்களும் வித்திட்ட நூல்களாகும்.சேலம் பகடாலு நரசிம்மலு நாயுடு தம்முடைய கிருஷி சாஸ்திர சார சங்கிரக நூலில் விவசாயம் பற்றிய பல கலைச் சொற்களைத் தொகுத்தளித்தார்.

பழந்தமிழ் இலக்கியங்களில் இவற்றிற்கான வேர்கள் இருப்பதை அறிந்து அவற்றைப் பாதுகாக்கும் அரிய முயற்சியில் ஈடுபட வேண்டும். பழந்தமிழ்க் கலைச் சொற்களைப் பயன்படுத்தி அவற்றிற்கு உயிரூட்ட வேண்டும்.

பழந்தமிழ் நூல்களில் காணலாகும் தொழில்நுட்ப வேர்ச்சொற்கள் பல.தொழில்களுக்கு வேண்டிய துணைக் கருவிகளைச் செய்யும் தொழிலாளர்களை கம்மியர்,தொழுவர் என்று அழைத்தனர் (மதுரைக் காஞ்சி 521) "இரும்பை வடித்தன்ன மடியா மென்தோல் கருங்கை வினைஞர்'(பெரும்பாணார் 222) கருந்தொழில் வினைஞர்(சிறுபாண் 527) என்று இத்தொழில் செய்வோரைக் குறிப்பிட்டனர். உலை (நெருப்பைத் தூண்டும் கருவி)கொடிறு (சூடான பொருளைப் பற்றி எடுப்பதற்குரிய கருவி)கொல் துறைக் குற்றில் (சிறிய உலைக்களம்)"இரும்பு செய் கொல்லன்' என இலக்கியங்களில் இவ்வேர்களைக் காணலாம்.

மரவேலை செய்பவர்களை "மரங் கொல் தச்சன்'(புறம் 200) என அழைத்தனர். மழு, உளி, முடுக்கு, எறிகுறடு முதலியவை இவர்கள் பயன்படுத்திய சொற்களாகும். கலப்பை செய்ததோடு அல்லாமல் இல்லங்களுக்குரிய நிலை, வண்டி,தேர், யாழ் முதலியவற்றைப் படைத்தனர். தபதியர், மர வினையர் எனத் திவாகரம் இவர்களைச் சுட்டும்.

பொன்னை நெருப்பில் உருக்கி ஆவணங்கள் செய்வோரைச் "சூடுறு நன் பொன் அடரிழை புனைவார்'(மதுரை 512) எனக் குறித்தனர்.பொன்னின் தரத்தை அறிந்து கொள்ளக் "கட்டளை' என்னும் உரைகல்லைப் பயன்படுத்தினர். ஆபரணம் செய்யும் தட்டாரைப் "பொன்னுரை காண் தட்டார்' என அழைத்தனர்.செம்பை நிறுத்து வாங்கிப் பானை முதலிய கலங்களைச் செய்வதற்கு மண்ணால் உருச் செய்தனர். இவர்கள் "செம்பு செய் கம்மியர்' என அழைக்கப்பட்டனர். சங்கு வளையல் செய்வோரைக் "கோடு போழ் கடையினர்' என அழைத்தனர்.

மண்ணைக் கொண்டு வலக்கை கலங்களைச் செய்து சூளையில் இட்டு மண்பாண்டங்களைச் செய்வோரை "கலம் செய்கோ' "வேட்கோ' என அழைத்தனர். திகிரி, தண்டு முதலியவை இவர்கள் பயன்படுத்திய கருவிகளாகும். கும்பகாரர், குலாலர்,வேட்கோவர், மட்பகைஞர் என்பன திவாகரம் சுட்டும் பெயர்களாகும்.

ஆடைநெய்வோரைக் "கம்மியர்' என்றனர் (மதுரை 521) காடுகளில் இல்லங்களை அடுத்து வேலிபோல் பருத்தியைப் பயிரிட்டனர். "பருத்தி வேலிச் சீறூர்' (புறம் 299) எனப் புறநானூறு கூறும். நூலாடைகளைக் கலிங்கம், சிதார், மடி என வழங்கினர். ஆடைவெளுத்துத் தருவோரைக் "காழியர்' எனத் திவாகரம் கூறும்.வெளுக்கப்பட்ட ஆடையினைக் "கழுவுறு கலிங்கம்' (குறு 167) எனக் குறித்தனர். கஞ்சி போட்டுத் தோய்த்த துணியினைச் "சோறு அமைவுற்ற நீருடைக் கலிங்கம்' என்பர்.

உணவு சமைக்கும் இடத்தை "அட்டில்' என்றனர். அடுகலம், அடுமகள் இதனோடு தொடர்புடைய பிற சொற்கள். இறைச்சி கலந்த சோற்றினைப் பதிற்றுப்பத்து "ஊன்துவை அடிசில்' என்று கூறும். இன்புளிஞ்சோறு எனப் புளிச் சோற்றைக் குறித்தனர்.சோற்றிற்குரிய பிற பெயர்களாகத் திவாகரம் முப்பதிற்கு மேற்பட்ட சொற்களைத் தரும். இட்டிலியின் பழைய வடிவம் இட்டவி. பூரியைப் பூரிகம் என்றும் தோசையைத் தோய்வை எனவும் கூறும். பழம் பண்பாட்டைச் சார்ந்த பல்வேறு சொற்களும் வளமான சொற்களஞ்சிய வேர்களாகும். இவற்றைக் கண்டறிந்து பயன்படுத்துவது நம்முடைய கடமை.

தொகுப்புரை
பழமையான சங்கநூல்களின் வழி தொன்மையான பண்பாட்டு வரலாற்று வேர்களைக் காணப் புகுந்தால் தமிழின் வளமையும் பெருமையும் நம்மை வியக்க வைக்கும். பழந்தமிழ் இலக்கண இலக்கியங்களின் ஆழ அகலங்களைத் துய்த்து நமக்கு வழங்கியவர்கள் உரையாசிரியர்கள்.வேர்களைத் தேடி அம்மரபுச் செல்வத்தை உரையாசிரியர்கள் நமக்கு வழங்கிய பின் பல நூறு ஆண்டுகளுக்குப் பின் அவற்றை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சென்றவர்கள் பதிப்பாசிரியர்கள். பழைய நூல்களை உரைகள் வழி மீட்டுருவாக்கம் செய்த உரையாசிரியர்களின் புலமைச் செறிவையும் உரைநுட்பத்தையும் மொழிவளத்தையும் இளையதலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டியது மிக மிக இன்றியமையாததாகும். சி.வை.தாமோதரம் பிள்ளை, உ.வே. சாமிநாதையர் போன்ற பெருமக்கள் இப் பணியைச் செய்தனர். உ.வே.சா. பழஞ் சுவடிகளைப் பாதுகாத்து நூல்களாக உருவாக்கியவர்.

வாழையடி வாழையாக வந்த இப் பெருமக்களின் தமிழ்ப் பணியைப் போற்றும் "தினமணி', தமிழ் வேர்களைத் தேடும் அரிய தொண்டில் ஈடுபட்டு உழைப்பது பெரிதும் பாராட்டத்தக்கது. "பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே கிடந்து சங்கத்திருப்பிலே இருந்து வைகை ஏட்டிலே தவழ்ந்த பேதை' என வரந்தருவார் தமிழைப் போற்றுவார். நாளும் தமிழைப் போற்றும் "தினமணி'யை நாமும் இப்படிப் பாராட்டலாம்.
பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே கிடந்து 
சங்கத்து இருப்பிலே இருந்து "தினமணி' ஏட்டிலே தவழும் தமிழ்!
நாளைய தலைமுறைக்கும் சேரட்டும்.வேர்களைத் தேடிச் செழுமை பெறட்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT