தமிழ் மொழித் திருவிழா

தமிழ் இலக்கியங்கள் பரவ வேண்டும்

23rd Dec 2019 05:35 PM | குறிஞ்சிவேலன், மொழிபெயர்ப்பாளர்

ADVERTISEMENT

 

உலகில் மொழி என ஒன்று தோன்றியது மனிதர்களுக்கு மட்டும் இல்லை என்பதும் அது உலகில் தோன்றிய அனைத்து உயிரினங்களுக்கும் உரியது என்பதும் நிதர்சனமான உண்மை.

எறும்பு முதல் அனைத்து வகை உயிரினங்களுக்கும் புல் பூண்டு முதல் அனைத்து வகை செடிகொடி மரங்களுக்கும் மொழிகள் உண்டு என்பதை அவைகளின் ஊடாகப் பழகும்போதும் அவைகளின் அருகாமையில் இருக்கும்போதும் யாவராலும் நன்றாக உணரமுடியும். அதே வேளையில் இப்பூவுலகம் முழுவதிலுமுள்ள அவை அனைத்திற்கும் இனத்திற்கு இனம் பொதுமொழி ஒன்றே.

ஆனால், ஆறறிவு படைத்த மனித வர்க்கத்திற்கோ பல மொழிகள். ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு இனத்திற்கும் தனி மொழி. அதனாலேயே மொழியை வைத்து மனித வர்க்கம் பிரிகிறது.

ADVERTISEMENT

இதே மொழியை வைத்து உலகத்தின் மற்ற உயிரினங்கள் எவையும் அவைகளின் மொழியால் பிரிவதில்லை. தமிழ்நாட்டிலுள்ள சுவர்க் கோழிகள் முதல் யானைகள் வரை இந்தியாவின் பிற இடங்களிலும் உலகின் மற்ற நாடுகளிலும் தங்களுக்கென்றே உரிய ஏகோபித்த தனித்த குரல்களால்தான் எவ்வித மாற்றமும் இல்லாமல் பிரிவினையும் இல்லாமல் தங்கள் அன்பை, காதலை, எச்சரிக்கையை, ஆபத்தை, வருத்தத்தை,துக்கத்தைப் பரிமாறிக் கொள்கின்றன.

இதேபோல் மரங்களுக்கும் மொழிகள் உண்டு. இவைகளும் இவ்வுலகில் எந்தப் பிரதேசத்தில் வளர்ந்தாலும், அம்மர வகைகளின் இலைகள் போடும் சப்தமும் கிளைகள் உளையும் ஓசையும் எங்கும் ஒரே மாதிரியான ஒலியை -மொழியைத்தான் வெளிப்படுத்துகின்றன. இவற்றை நாம் நுணுகி ஆய்ந்தால் புலப்படும்.

ஆனால் மனிதர்களின் மொழிகள் அப்படியானதல்ல. தமிழகத்தையே எடுத்துக் கொள்வோம். தென்னக முனையில் பேசும் நாஞ்சில் தமிழ்,நெல்லைத் தமிழ், கரிசல் தமிழ், மதுரைத் தமிழ், தூத்துக்குடித் தமிழ்,  தஞ்சைத் தமிழ் -தென்னாற்காட்டுத் தமிழ்,சென்னைத் தமிழ்,சேலம் தர்மபுரி தமிழ்,கோவை நாமக்கல் தமிழ், மலைவாசிகள் தமிழ் என ஏராளமான வட்டாரத் தமிழ்ச்சொற்கள் நாம் பேசும் மொழிகளில் வெவ்வேறாக உருமாறி உள்ளன.

இந்த வேறுபட்ட தமிழ்ச் சொற்களுக்கே பல்வேறு அகராதிகள் தேவைப்படுகின்றன. இப்படிப்பட்ட அகராதிகள்தான் குறைந்தபட்சம் தமிழை, தமிழகத்தின் பொதுமொழியாக உணர்த்தும். இதற்கும்கூட என் வாழ்க்கையில் நேர்ந்த பல நிகழ்வுகள் இருந்தாலும் ஒரு சம்பவத்தை மட்டும் இங்கு சொல்வது என் கடமை.

அது நடந்தது 1960-களில். நான் முதன்முதலில் அரசு வேலைக்காக மதுரை மாவட்டத்தில் பணியிலமர்ந்தேன். பல நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்கள் பேசும் மதுரைத் தமிழான "பைய பைய' "கண்மாய்', "கொள்ளைத் தூரம்' போன்ற பல தமிழ்ச் சொற்கள் எனக்கு ஆரம்பத்தில் புரியவில்லை.போகப் போகப் புரியத் தொடங்கின. அதேபோல் நான் பேசும் தென்னாற்காட்டுத் தமிழிலுள்ள பல வார்த்தைகள் அந்த நண்பர்களுக்குப் புரியவில்லை. காலப்போக்கில் மதுரைத் தமிழை நானும்,தென்னாற்காட்டுத் தமிழை அவர்களும் ஓரளவுக்குப் புரிந்து கொண்டோம். ஓராண்டு ஓடியது. ஒருநாள் அலுவலகப் பணியில் இருக்கும்போது ஏதோ எழுதிக் கொண்டிருந்தேன். அப்போது நான் எழுதிக் கொண்டிருந்த பென்சில் முனை உடைந்துவிட்டது. அதனால் இரண்டு டேபிள் தள்ளியிருந்த நண்பர் ஒருவரிடம், "உங்க பென்சிலைக் கொஞ்சம் இங்க கெடாசுங்க' என்றேன்.

அவ்வளவுதான், அதற்கு முன் நான் அந்த அளவுக்கு அவரிடம் கோபத்தைக் கண்டதில்லை. அவ்வளவு கோபப்பட்டார். நாம் என்ன சொல்லிவிட்டோம். இவர் ஏன் இந்த அளவுக்குக் கோபப்படுகிறார் என்று நினைத்து வெலவெலத்துப் போனேன். பின்புதான், நண்பர்களின் மூலம் நான் சொன்ன "கெடாசு' என்ற வார்த்தை மதுரை மாவட்டத்தில் மிக மோசமான ஒரு கெட்ட வார்த்தை என்பது தெரிந்தது.

நான் சொல்ல வரும் இப்படிப்பட்ட அல்பமான நிகழ்வுகள்தான் மொழியின் வேர்களைத் தேட உதவுகின்றன. இவைகளுக்குத் திரைப்படங்களும் நெடுந்தொடர்களும் மிகவும் உதவுகின்றன. மக்களைப் பெற்ற மகராசியிலிருந்து இன்றைய பாரதிராஜா, சசிகுமார் இயக்கி நடித்த படங்களிலும், பாரதிராஜாவின் நெடுந்தொடர்களிலும் வட்டார வழக்கில் கதாபாத்திரங்கள் பேசுவதால் வட்டாரத்துக்கு வட்டாரம், மாவட்டத்துக்கு மாவட்டம் ஒருங்கிணைந்த அனைத்து வட்டார மொழிகளும் ஒரே தமிழ் என்னும் வகையில் அறிமுகமாகி பல புதிய சொற்கள் - மக்கள் தமிழாக வளம்பெற்று வளரவும் உதவுகின்றன.

திரைப்படங்களில் ஒரு காலத்தில் அச்சுத் தமிழான பொதுத் தமிழ்தான் பேசப்பட்டது. அதன்பின் சிறுகச் சிறுக, சில கதாபாத்திரங்கள் வாயிலாகவும் பின் முழுமையாகப் படங்கள் முழுவதும் எல்லாக் கதாபாத்திரங்களும் படங்களுக்குத் தகுந்தாற்போல் இயல்பான பேச்சுத் தமிழை வெளிப்படுத்தின.

தற்போதைய காலப்போக்கில் தமிழகத்தின் அனைத்து வட்டாரப் பேச்சு மொழிகளும் திரைப்படங்களிலும் நெடுந்தொடர்களிலும் பரவலாகவே வரத் தொடங்கிவிட்டன.

இவற்றிற்கெல்லாம் மேலாக வீரத் தமிழும் அடுக்கு மொழித் தமிழும்கொஞ்சும் தமிழும்துள்ளல் தமிழும் தூய தமிழும் திரைப்படங்களில் கோலோச்சிய நேரங்களும் அக்காலம் முதல் இக்காலம் வரையில் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. தமிழை இப்படியும் பேசலாம், இப்படியும் எழுதலாம் என்னும் வழிகாட்டுதலாகக் கொண்ட திரைப்படங்களும் வந்துள்ளன என்பதற்கு மாற்றுக் கருத்து இருக்காது.

இதேபோல், இன்றைய பல நெடுந்தொடர்கள் தமிழைப் பல்வேறு வட்டார வழக்குப் பேச்சு மொழிகளின் மூலம் அனைவருக்கும் புரியும்படியான பொதுமொழியாக அறிமுகப்படுத்துகின்றன. வட தமிழகத்தில் கட்டை கட்டி தெருக்கூத்துக் கலைஞர்களும்தென் தமிழகத்தில் மேடை நாடக நடிகர்களும் தங்களின் பங்காக ஊர் தோறும் சென்று தமிழை வளர்த்தார்கள்; வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் இந்த அமைப்புகள்தான் மொழியின் வேர்களைத் தேட உதவுகின்றன. பிற மொழி இலக்கியங்களின் வரவும் தமிழைச் செழுமைப்படுத்துவது உண்மை.

பிறமொழி மக்களின் கலை, பண்பாடு, கலாசார முனைப்புகளை வெளிப்படுத்தும் சிறுகதைகளும்,தொடர் நாவல்களும் கலைமகள், கல்கி, தினமணி கதிர், சுதேசமித்திரன், மஞ்சரி முதலிய இதழ்களின் மூலம் தமிழாக்கம் பெற்று தமிழோடு ஒப்பீட்டு நோக்கும் வகையில் வெளிவந்தன. இந்த வகையில் ஏராளமான இந்தியாவின் பிறமொழி பேசும் மக்கள், அயல்நாடுகளில் வாழும் அந்நிய மொழி பேசும் மக்கள் ஆகியோர்களின் உணர்வுகளையும், அவர்களின் பழக்க வழக்கமான பண்பாட்டுச் சூழல்களையும், எண்ணங்களையும் அறிவதற்கு இலக்கிய மொழியாக்கங்கள் நமக்கு உதவின.

இவ்வாறு உலக மக்களின் அந்நியத் தன்மையைப் போக்கி நெருக்கமான சமூக ஒருங்கிணைப்புக்கு உதவிய மொழியாக்க முன்னோடிகளான பாரதியார், புதுமைப்பித்தன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, ச.து.சு.யோகியார், சரஸ்வதி ராம்நாத், அ.சீனிவாச ராகவன், த.நா.குமாரசாமி, த.நா.சேனாபதி, கா.ஸ்ரீ.ஸ்ரீ.போன்றவர்களை இந்த நேரத்தில் நாம் நினைவுகூரல் சிறப்பாகும்.

அதேபோன்று மாஸ்கோ ராதுகா பதிப்பகம், தமிழகத்தின் என்.சி.பி.ஹெச். வழியாக கணக்கிலடங்காத ரஷ்ய மொழிப் படைப்புகளை மொழியாக்கம் செய்து புத்தகங்களாகத் தமிழில் தந்தது. அப்படைப்புகள் தமிழின் மொழியாக்கத் துறைக்கும் தமிழுக்கும் வளம் சேர்த்ததுடன் தமிழ் வாசகர்களுக்கு உந்து சக்தியாகவும் மாறியது என்றால் அது மிகையாகாது.

அதே காலகட்டத்தில் சில புதிய பதிப்பகங்கள் மூலம் அந்நியமொழி இலக்கியங்கள் தமிழுக்குக் கிடைத்துள்ளன. இப்பதிகங்கள் மூலம்தான் மக்சீம் கார்க்கி, நிக்கலாய் கோகல், தல்ஸ்த்தோய், தஸ்தயேவ்ஸ்கி, மாயகோவ்ஸ்கி, புஷ்கின், ரசூல் கம்சதோவ், மிகாயில் சோலகோவ், அன்னா அகமதோவா, நட்ஹாம்சன்,பெர்லாகர் க்விஸ்ட்,பெர்னார்டுஷா, எச்.ஜி.வெல்ஸ்,ஷேக்ஸ்பியர்,ஷெல்லி, கீட்ஸ், எமிலி சோலா, மாப்பஸôன், நத்தானியல் ஹத்தன், ருஸ்தாவ், மார்க் ட்வைன், பால்சாக்,மெர்ஸின், ஓகுஸ்த் ஸ்திரின் பர்க் போன்ற படைப்பாளிகள் தமிழில் கொடையாக வந்துள்ளார்கள்.

இந்திய மொழிகளிலிருந்தும் ஏராளமான படைப்பிலக்கியங்கள் மொழியாக்கம் மூலம் தமிழுக்கு வந்து தமிழின் சமகால இலக்கியத்துக்கு வளம் சேர்த்தன. வங்க மொழியிலிருந்தும், இந்தியிலிருந்தும், பஞ்சாபியிலிருந்தும்,தெலுங்கிலிருந்தும், கன்னடத்திலிருந்தும், மலையாளத்திலிருந்தும் மராத்தியிலிருந்தும் ஏராளமான சமகால படைப்புகள் தமிழுக்கு வந்து பல புதிய திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளதும் உண்மை. இம்மொழிகளிலிருந்து தமிழுக்குக் கொண்டு வந்தவர்களில் முக்கியமானவர்கள் மிகப்பலர்.

அதேபோன்று பதிப்பகங்களும் தாராளமாக மொழியாக்க நூல்களைப் பதிப்பிக்கின்றன. இந்தியாவிலேயே மொழியாக்கத்திற்கென்றே பிராந்திய மொழியில் தொடங்கப்பட்ட முதல் இதழ் "திசை எட்டும்'. ஒவ்வொரு இதழும் ஒரு புத்தகமாக, நாற்பதுக்கும் மேற்பட்ட இதழ்களாக மலர்ந்துள்ளன. இக்காலக் கட்டத்தில் நூற்றுக்கணக்கான மொழிகளிலிருந்து சமகால இலக்கியங்களைத் தமிழுக்கு இவ்விதழ் கொண்டு வந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், சர்வதேசச் சிறப்பிதழ், சீனச் சிறப்பிதழ்,நோபல் இலக்கியச் சிறப்பிதழ், புக்கர் இலக்கியச் சிறப்பிதழ் ஆகியவற்றுடன் பல்வேறு மொழிச் சிறப்பிதழ்களைக் கொணர்ந்துள்ளது. பல்வேறு மொழிகளின் வரலாறுகளை அறிமுகப்படுத்தியதுடன் அம்மொழி இலக்கியங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது.

இதேபோல் தற்போது சில சிற்றிதழ்களும் மொழியாக்கப் படைப்புகளை வெளியிட்டு வருவது மகிழ்ச்சியளிக்கிறது. இப்படிப்பட்ட மாற்று மொழிப் படைப்புகள் வரும்போதுதான் தமிழுக்குச் சில புதிய சொற்களும் சிந்தனைகளும் வந்து சேர்கின்றன.

மொழிபெயர்ப்புக் கலை பற்றி முனைவர் பஞ்சு, திசை எட்டும் இதழுக்கு சிற்பியை பேட்டி கண்டபோது, ""மொழிபெயர்ப்பு என்பது ஒருவகையில் மூலத்திற்கு உரை எழுதுவது போன்றதுதானா?'' என்ற வினாவை முன்வைத்தார்.

அதற்குக் கவிஞர் சிற்பி, ""இக்கருத்து மொழிபெயர்ப்புக் கலையின் அரிச்சுவடி கூடத் தெரியாதவர் கூற்று.மொழிபெயர்ப்பு உரையன்று - அந்த மண்ணிலிருந்து இந்த மண்ணுக்கு ஆணிவேரும் சல்லிவேரும் முறியாமல் பெயர்த்து நடப்படுகிறநடவு'' என்று கவித்துவமாகச் சொல்லியிருக்கிறார்.

இவ்வாறு சிற்பி சொன்னபோது எனக்கு இன்னொன்றும் தெளிவாயிற்று. நாற்றுப் பயிர்களை புஞ்சையிலும் விடலாம். நஞ்சையிலும் விடலாம். ஆனால், அவற்றைப் பிடுங்கி நடும்போது எங்கு நடப்போகிறோம் என்பது தெரிந்திருக்க வேண்டும். புஞ்சை நாற்றுப் பயிரை நஞ்சையில் நடலாம். நஞ்சை நாற்றை புஞ்சையில் நடக்கூடாது. நட்டால் செழிப்படையாது. காரணம், நஞ்சை நாற்றுக்கு வேர்கள் நீளம். அதைப் பறித்து புஞ்சையில் நடும்போது வேர்கள் மடிந்து ஆழமாகப் பதியாது. புஞ்சையில் சேற்று வளம் குறைவு. அதேவேளையில் புஞ்சை நாற்றைப் பறித்து நஞ்சையில் நடும்போது, குட்டையான வேர்களையுடைய புஞ்சை நாற்று நஞ்சையின் சேற்றுவளத்தில் ஆழமாகவும் அகலமாகவும் பதிந்து பயிர் செழிப்படையும். அதுபோன்றதுதான் மொழியாக்கமும்.

ஒரு மொழியின் வளம்,தொன்மை, அம்மொழியில் உரையாடும் மக்களின் கலாசாரம் போன்றவைகளை உள்ளார்ந்து உணர்ந்து மொழியாக்கம் செய்யும்போது இலக்குமொழியின் வாசகன் மூலமொழியின் மணத்தையே முகரலாம் என்பது என் அனுபவம். இவற்றை உணராமல் மொழியாக்கம் செய்யும்போது சாறெல்லாம் போன சக்கையாகத்தான் அது தெரியும்.

ஆகவே, ஒரு மொழிபெயர்ப்பாளன் ஒரு நூலை மொழியாக்கம் செய்ய முனையும்போதே அந்த நூலைப் பலமுறை படித்து, மூல நூலின் அனைத்துத் தன்மைகளையும் உள்வாங்கிக் கொண்டு, இனம் கண்டு, புரிந்துகொண்டு மொழியாக்கம் செய்யும்போது அம்மொழியாக்கம் சிறப்பாக அமைவதுடன் மூலநூலின் ஆத்மாவும் இலக்கு மொழியில் பல புதிய வேர்களைப் பதிக்க உதவும்.

அதேபோல் தமிழ் இலக்கியங்களைப் பிறமொழிக்குக் கொண்டு செல்லல் என்பதுவும் தற்போது தீவிர இயக்கமாக நடைபெற வேண்டும். நான் அறிந்தமட்டில் இந்தியாவின் பல்வேறு பிறமொழிகளில் நம் தமிழ் இலக்கியங்கள் இன்னும் சென்று சேரவில்லை என்பது உண்மையாகும்.
இந்த வகையில் தமிழ் இதழ்களும், தமிழ் அமைப்புகளும் தங்களால் முடிந்த மட்டில் பிறமொழிகளுக்குத் தமிழிலக்கியங்களைக் கொண்டு செல்ல முயல வேண்டும்.

நான் ஏற்கெனவே ஒருமுறை திசை எட்டும் தலையங்கப் பகுதியில் எழுதியதுபோல், இந்தியாவிலுள்ள அரசு அங்கீகாரம் பெற்ற மொழிகளின் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகளை ஏற்படுத்த வேண்டும். அங்கு தமிழ் படித்து வரும் பிறமொழி பேசும் பட்டதாரிகளுக்கு தமிழக அரசின் வேலை வாய்ப்புகளில் 5 விழுக்காடு இடம் ஒதுக்கி அரசுப் பணிகள் கொடுக்க வேண்டும். அவர்கள் மூலம் அம்மாநில மக்களிடையே தமிழிலக்கியங்கள் நிச்சயம் பரவும் என்பது திண்ணம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT