166. சாம்பலின் குழந்தை

பூரணத்துவத்துக்காக அலைவது வீண். இந்த உலகில் எதுவும் பூரணமடைந்ததல்ல. எச்சங்களில் இருந்து கற்றுக்கொள்வதே நமக்கு விதித்தது.

என் கால்கள் துவளத் தொடங்கியிருந்தன. எத்தனை நாள்களாக நடந்துகொண்டிருக்கிறேன் என்பதே மறந்துவிட்டது. நான் உண்ணவில்லை. எங்கும் தங்கவில்லை. ஓய்வெடுப்பது பற்றிச் சிந்திக்கக்கூட இல்லை. என் பாதங்கள் என்னை அழைத்துச் சென்ற இடங்களுக்கெல்லாம் போய்க்கொண்டிருந்தேன். எதுவும் தேவைப்படவில்லை என்பதால், யாருடனும் பேசவும் இல்லை. தாகம் எடுக்கும்போது தண்ணீர் மட்டும் அருந்திக்கொண்டிருந்தேன். பசியும் களைப்பும் எப்போது என்னைக் கீழே வீழ்த்தித் தள்ளும் என்று பார்த்துக்கொண்டிருந்தேன். உண்மையில் அப்படி யாருமற்ற வெளியில், உதவிக்கு யாரும் ஓடிவர இல்லாத நிலையில், தன்னந்தனியே விழுந்து கிடக்கவே மிகவும் விரும்பினேன். ஆனால், நானே எதிர்பாராதவிதமாக இன்னமும் விழாமல் இருக்கிறேன். ஆச்சரியம்தான்.

திருவிடந்தையில் இருந்து கிளம்பும் முன், மடிகேரிக்கு போன் செய்தேன். நான் ஆசிரமத்துக்குத் திரும்பி வர நாளாகும் என்று மட்டும் சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டேன். வினய், ராமேசுவரம் வரை போய் வரலாம் என்று சொன்னான். நடந்தா என்று கேட்டேன். அதுதானே வசதி என்று அவன் பதிலுக்குக் கேட்டான். ஆனால், அந்த நடை இம்மாதிரி இடைவிடாமல் நிகழ்ந்ததல்ல. தினமும் எட்டு மணி நேரம் மட்டும் நடந்தோம். அதிகாலை மூன்று மணி முதல் ஏழு மணி வரை மட்டும். வெயில் ஏறத் தொடங்கும்போது எங்காவது ஒதுங்கிவிடுவோம். நாளெல்லாம் ஓய்வெடுத்துவிட்டு, மாலை ஐந்து மணிக்கு மீண்டும் நடக்க ஆரம்பித்து, இன்னொரு நான்கு மணி நேர நடை. கடலோரமாகவே நாங்கள் சென்றுகொண்டிருந்தோம். நாகைப்பட்டினத்தைக் கடந்து வேளாங்கண்ணியை நெருங்கும்போது, வினய்க்கு ஏதோ ஒரு யோசனை வந்தது.

‘விமல், இங்கே ஒருநாள் தாமதிக்கலாமா?’ என்று கேட்டான்.

‘ஒன்றும் பிரச்னை இல்லை. எதாவது வேலை இருக்கிறதா?’

‘இல்லை. இங்கே பொய்கைநல்லூர் என்றொரு கிராமம் இருக்கிறது. அங்கே போகலாம்’.

‘என்ன அங்கே?’

‘ஒரு சமாதி. ஒரு சித்தருடையது. கோரக்கர் என்று பெயர்’.

நான் புன்னகை செய்தேன்.

‘ஏன் சிரிக்கிறாய்?’

‘ஒரு சித்தன் செத்துப்போனதை நினைத்தேன்’.

வினய் பதில் சொல்லவில்லை. எங்கோ வெறித்துப் பார்த்தான். நான் எதிர்பாராதவிதமாக அவன் முகத்தில் ஒரு புன்னகை வந்தது. முகம் மண்டிய தாடியைக் கிழித்துக்கொண்டு நான்கு பற்களில் இருந்து அது வெளிப்பட்டது.

‘ஏன் சிரிக்கிறாய்?’

‘அவன் பாவம்’ என்று சொன்னான்.

‘ஏன்?’

‘அவனது குற்ற உணர்வு, அம்மாவின் பிணத்தைக் காணக்கூட விடாமல் தடுத்துவிட்டிருக்கிறது’.

‘அப்படியா நினைக்கிறாய்?’

‘வேறென்ன காரணம் இருக்க முடியும்? அவனுக்கு ஐம்பத்து மூன்று வயது. பத்து வயதில் இருந்து அவன் மனத்துக்குள் சன்னியாசியாக இருந்திருக்கிறான். இருபதில் முழுமையடைந்தான் என்றே வைத்துக்கொள். இத்தனைக் காலம் அவன் கற்ற யோகக் கலையெல்லாம் தேகத்தை ஒரு தீப்பந்தமாக்கத்தான் அவனுக்கு உதவியிருக்கிறது’.

‘பாவம்தான்’.

‘காமத்தினும் பெரிய பேய் இல்லை விமல். அதனினும் பெரிய தெய்வமும் இல்லை. நாமறியாத அவன் வாழ்வில் அவன் பெற்றது, இழந்தது அனைத்துமே அதனைச் சார்ந்ததாகத்தான் இருக்க முடியும்’.

‘அந்தப் பாகிஸ்தானிப் பெண்ணை நினைத்துக்கொண்டு சொல்கிறாயா?’

‘அவள் மட்டுமோ, அவளைப்போல் வேறு யாருமோ. யாருக்குத் தெரியும்? ஆனால், தனது துறவை அவன் அம்மாவுக்குத் தந்த கௌரவமாக நினைத்திருக்கிறான். அதில் சந்தேகமில்லை. கடைத்தேற்ற வருவேன் என்று அவன் சொன்னதை அறிந்ததுமே எனக்கு இது புரிந்துவிட்டது. அது ஒரு அகங்காரம். அழகு பொருந்திய அகங்காரம். உன் பிள்ளை என்னவாக வந்திருக்கிறேன் பார் என்று எதிரே நின்று காட்ட நினைத்த மாறுவேடமணிந்த மழலையின் பேரழகு அது. அவன் மிக நிச்சயமாக ஆதி சங்கரனை நினைத்திருப்பான். அவனையொத்த பிற சன்னியாசிகளை நினைவுகூர்ந்திருப்பான். லௌகீக வாழ்வில் அடைய முடியாத எல்லைகளை எட்டிப் பிடித்து வெற்றிக்களிப்பில் திளைத்துக்கொண்டிருந்திருப்பான். அத்தனையையும் அள்ளி எடுத்துவந்து அவள் முன் கொட்டிக் களிக்க விரும்பினால் அதில் தவறே இல்லை என்பேன்’.

‘செய்திருக்க வேண்டியதுதானே?’

‘சொன்னேனே, குற்ற உணர்வு! அது தடுத்திருக்கிறது’.

‘என்ன பேத்துகிறாய்? காமம் தவறு என்று நீயா சொல்வாய்?’

‘நிச்சயமாக இல்லை. ஆனால் காமத்தின் பரிபூரணம் என்பது அதைத் துறப்பதன் பரிபூரணத்துக்கு எதிர் எல்லையில் நின்று இயங்கக்கூடியது’.

‘சரி, அதனால் என்ன?’

‘அப்படித் துறப்பதன் பரிபூரணத்தை அம்மா அறிந்தவள், பயிற்சி செய்தவள். அவள் பிணமானபோதுகூட அவள் முகத்தில் ஜொலித்த பேரமைதியைக் கவனித்தாயா? நம் மூன்று பேரைக் கண்டபோதும், சமநிலை குலையாத அவளது திட சித்தத்தைக் கவனித்தாயா? காமம் ஒரு தவம். அதனைத் துறப்பதும் தவம்தான். துறந்தவள் எதிரே தனது கறை படிந்த தூய்மையை - அப்படி அவன் எண்ணும் பட்சத்தில், எப்படி அவன் விரித்துக் காட்டுவான்? கணப்பொழுது அவள் சிரித்துவிட்டால் என்னாவது?’

நான் திகைத்துவிட்டேன். இவன் என்ன சொல்ல வருகிறான் என்ற பதற்றம் அதிகரித்தது. உண்மையா, அப்படியும் இருக்குமா, அதுதான் அவளா என்று திரும்பத் திரும்ப உள்ளுக்குள் அலை பாய்ந்துகொண்டிருந்தேன். வினய் தீர்மானமாகச் சொன்னான், ‘அப்பாவின் சுண்டு விரல்கூட தன் மீது பட அவள் அனுமதித்திருக்கமாட்டாள்’.

‘இப்போது எண்ணிப் பார். நீ யாரோ. நான் யாரோ. நாம் அனைவரும் யார் யாரோ. கேசவன் மாமா யாரோ. அப்பா யாரோ. அதிகம் படிக்காத, உலக அனுபவம் பெரிதாக இல்லாத, கட்டுப்பாடான குடும்பத்தில் வளர்க்கப்பட்ட அம்மா, இத்தனை உதிரிகளை சேர்த்துக்கட்டி ஒரு குடும்பமாக்க என்ன நிர்ப்பந்தம்? இந்தக் கூட்டத்தில் தன்னை மட்டும் விலக்கிக்கொண்டிருந்தால் அவள் வாழ்க்கை வேறு. ஆனால் அவள் தன்னைச் சொருகிக்கொண்டு, அத்தனை பேரையும் விலக்கி நிறுத்தி வேடிக்கை பார்த்திருக்கிறாள். என்றைக்கோ யாரோ செய்த பிழையின் வாசனையை இன்றைக்கு நமது மூச்சுக் காற்றுக்குள் மெதுவாக அனுப்பி உணரச்செய்ய முடிகிறதே, இது எப்படி? இது தவமில்லை என்றால் வேறு எது? அவள் யோகி இல்லை என்றால், வேறு யார்? அதனால்தான் சொன்னேன். அவளெதிரே நிற்க அவன் கூசியிருக்கிறான். தனது அகங்காரத்தை மூச்சுக்காற்றில் வெளியேற்றிவிட்டு, அவமானத்தைத் தணலாக்கிக்கொண்டு தன் முடிவை எழுதிக்கொண்டான்’.

எனக்குப் பேச்சற்றுப் போனது. பிரமை பிடித்தாற்போல வினய்யையே பார்த்துக்கொண்டிருந்தேன். என்னையறியாமல் கண்ணில் நீர் சுரந்தது. வினய், ‘என்ன?’ என்று கேட்டான்.

‘சுதந்திரம் தவப் பொருளாக இருக்கும்வரை, என் வாழ்வில் கண்ணீருக்கு இடமில்லை என்று எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் சிறைப்படுதலைத் தவமாக்கிக்கொண்டு, ஒருத்தி என்னை மிதித்து, நசுக்கி எறிந்துவிட்டாற்போல இருக்கிறது’.

‘ஆம். அது சரிதான். அவள் நம் அனைவரையுமே நசுக்கித்தான் எறிந்திருக்கிறாள். தேவியின் கருணைக்காக நான் அலைந்த அலைச்சல், கிருஷ்ணனின் தரிசனத்துக்காக வினோத் மேற்கொண்ட தவம், உலகையே சேவகனாக்கிக்கொள்ள நீ கையாண்ட உத்திகள், மரணத்தை வெல்ல அண்ணா மேற்கொண்ட முயற்சிகள் அனைத்துமே அவள் காலடியில் உதிர்ந்துவிட்டன விமல். தோற்கடிப்பதன் சுகத்தை அனுபவிப்பதற்காக, அவள் வாழ்நாள் முழுதும் தோற்றுக்கொண்டிருந்ததுபோல நடித்திருக்கிறாள். உண்மையில் நாம்தான் தோற்றவர்கள்’.

‘அவள் யாரைத் தோற்கடித்தாள்? அப்பாவையா?’

வினய் சிரித்தான். ‘அவள் விதியின் பெயர் அப்பாவாக இருக்குமானால், அதுதான். அல்லது நாமறியாத வேறொன்று என்றால், அதுவும் சரிதான்’.

நாங்கள் பொய்கைநல்லூரை அடைந்து கோரக்கர் சமாதிக்குச் சென்றபோது, அங்கு யாருமில்லை. வெட்ட வெளியில் தனித்திருந்த அவரது சமாதிக்குக் காலம் கோயில் கட்டிவிட்டிருந்தது. ‘நீ இங்கு வந்திருக்கிறாயா?’ என்று வினய் கேட்டான்.

‘இல்லை. வந்ததில்லை’.

‘நான் பலமுறை வந்திருக்கிறேன்’.

‘எதற்கு?’

‘தெரியவில்லை. வா என்று ஒரு குரல் கேட்கும். கிளம்பிவிடுவேன்’.

‘அவர் உன் குருவா?’

‘இதுவரை இல்லை’.

‘இனி?’

‘யாருக்குத் தெரியும்? குரல் வரும். கிளம்பி வருவேன். நாளெல்லாம் அவர் சமாதி முன் அமர்ந்திருப்பேன். ஒன்றும் நிகழாது. எழுந்து போய்விடுவேன்’.

‘கோரக்கர். சாம்பலில் உயிர்த்தவரல்லவா?’

‘ஆம். ஒன்றுமில்லாதது என்று ஒன்றுமில்லை என்று உணர்த்தியவர். ஒரு காலத்தில் கோரக்கரைப்போல நானும் ஒரு மாபெரும் சித்தனாவேன் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். இப்போது நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது’.

‘நீ சொரிமுத்துவைப் போலாவது ஆகியிருக்கலாம்’.

‘இல்லை. நான் யாரைப்போலவும் ஆக இயலாது விமல். எனது துறவின் சாரமே என் அலைச்சல்தான். நான் உட்கார முடியாதவன். உட்காரத் தெரியாதவன். உட்கார விரும்பாதவனும்கூட’.

‘ஆனால் நீ நல்லவன்!’ என்று சொன்னேன். அவன் சிரித்தான். என்னை ஒருமுறை இறுக அணைத்து விடுவித்தான். ‘அதனால்தான் அந்தச் சுவடியை அம்மாவேதான் உருவாக்கி, அண்ணாவின் கைக்குக் கிடைக்கச் செய்திருக்கிறாள் என்பதை அறிந்தும், யாருக்கும் சொல்லாமல் இருந்துவிட்டேன்’ என்று சொன்னான்.

அன்று முழுவதும், கோரக்கரின் சமாதி முன் வினய் தியானத்தில் அமர்ந்திருந்தான். நான் அவனை வெறுமனே பார்த்துக்கொண்டு அவனருகே சும்மா அமர்ந்திருந்தேன். இருட்டும் நேரம், அவன் தியானம் கலந்து கண் விழித்தான். நான் புன்னகை செய்தேன். அவன் சட்டென்று, ‘மன்னித்துக்கொள். உன்னை நெடுநேரம் காக்க வைத்துவிட்டேன்’ என்று சொன்னான்.

‘பரவாயில்லை. எனக்கு வேறெந்த வேலையும் இல்லையே’.

‘இருந்தாலும், இதெல்லாம் உன் நம்பிக்கைகளுக்குச் சம்பந்தமில்லாதவை’.

‘ஆனாலும் அனுபவம் அல்லவா? சரி விடு. நாம் எதற்கு ராமேஸ்வரம் போகிறோம்?’

‘போக வேண்டுமா என்று இப்போது தோன்றுகிறது’.

‘அப்படியா? ஏன்?’

‘அங்கு ஒன்றுமில்லை. எல்லாம் இங்குதான்’ என்று நெஞ்சைத் தொட்டுக் காட்டினான்.

‘அப்படியானால் நேபாளத்தில் மட்டும் என்ன இருக்கிறது? போகப் போவதாகச் சொன்னாயே?’

‘ஆம். அங்கும் ஒன்றுமில்லை. மனத்தை நிலைபெறச் செய்ய இடங்கள் ஓரளவு உதவும். அதை எடுத்து வெளியே வைத்துவிட்டால், இடம் தேவைப்படாது’.

‘அது முடியும் என்று நினைக்கிறாயா?’

‘சும்மா முயற்சி செய்து பார்க்கிறேனே’ என்று சொன்னான். நான் புன்னகைத்து, அவன் தோளைத் தட்டிக் கொடுத்தேன்.

‘நல்லது. நான் விடைபெறவா?’

‘உன் விருப்பம்’.

‘இந்நேரம், பத்மா மாமியுடன் வினோத் ரயில் ஏறியிருப்பான். நாளை அல்லது நாளை மறுநாள் அவன் கயாவுக்குப் போய்விடுவான்’.

‘ஆம். எனக்கு கிருஷ்ணனை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது. அவன் வினோத்துக்காக இன்னும் நெடுநாள் காத்திருக்கவேண்டி இருக்கும்’ என்று சொன்னான்.

‘சித்ராவைப் போலவா?’

‘சந்தேகமில்லை. சித்ரா என்னாளும் அவனைக் கொல்லமாட்டாள். அவளுக்கு அதற்குத் துணிவில்லை. காமத்தின் வாசலைக்கூடத் தொடாத காதலுடனேயே அவள் வாழ்வு முடிந்துவிட்டது. அவன், காதலின் வாசனையையே அறியாமல், அவளைக் கிருஷ்ணனாகக் கருதி மனத்துக்குள் புணர்ந்துகொண்டே இருக்கிறான். அவன் சொன்னானே என்று லட்சம் முறை ஜபித்துப் பார்த்தபோது எனக்குத் தோன்றியது அதுதான். ஜபம் ஒரு சுய இன்பம். வெறும் சக்தி விரயம்’.

‘அடப்பாவி!’ என்று அலறிவிட்டேன்.

வினய் சிரித்தான். ‘பூரணத்துவத்துக்காக அலைவது வீண். இந்த உலகில் எதுவும் பூரணமடைந்ததல்ல. எச்சங்களில் இருந்து கற்றுக்கொள்வதே நமக்கு விதித்தது’ என்று சொன்னான்.

நான் நெடுநேரம் அமைதியாக நின்றிருந்தேன். எனக்குள் அதுவரை எந்த அதிர்வையும் உண்டாக்காதிருந்த கோரக்கரின் சமாதியை மெல்ல நெருங்கினேன். சிறிது நேரம் அதை உற்றுப் பார்த்துக்கொண்டே இருந்தேன். சாம்பலில் இருந்து உதித்தவர். உதித்த கணம் வரையல்லவா சாம்பல் ஒரு எச்சம்? உதித்துவிட்ட கணத்தில் சாம்பலும் பூரணமடைந்துவிடுகிறதல்லவா?

‘ஆம். நீ பூரணமல்ல. ஆனால் முயன்றால், உன்னால் ஒன்றையேனும் பூரணமுறச் செய்ய முடியும்’ என்று வினய் சொன்னான்.

நான் அவனருகே வந்து நின்றேன். கையை உயர்த்தி ஆசி கூறும் விதத்தில் சொன்னேன், ‘நீ செய். நான் பார்த்து ரசிக்கிறேன்’.

சொல்லிவிட்டுத் திரும்பி நடக்க ஆரம்பித்தேன். என் பாதங்கள் இழுத்துச் சென்ற திசையெல்லாம் நடந்துகொண்டே இருந்தேன்.

(நாளை நிறைவுறும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com