திங்கள்கிழமை 16 செப்டம்பர் 2019

35. நிலப்பதிவு மாறிப்போனால்..

By முனைவர் க. சங்கரநாராயணன்| Published: 21st May 2019 10:00 AM

 

பொதுவாக, ஏதேனும் நிறுவனத்திற்குக் கொடையாக நிலத்தை அளித்தால் அதில் தனியார் நிலமும் கலந்து தவறாக அமைய வாய்ப்பிருக்கிறது. அப்படி மாறிப்போனால் அந்நிலத்தை உடையவர் தன் பெயருக்கு மாற்ற வேண்டுமானால் இன்று படாத பாடு படவேண்டி இருக்கும். ஆனால் பழங்காலத்தில் இப்படி அமையவில்லை. இப்படித் தவறாக நிலம் மாற்றப்பட்டிருந்தாலும் அரசனிடமோ அல்லது அதிகாரிகளிடமோ முறையிட்டால் மீண்டும் மாற்றிக் கொடுக்கும் வாய்ப்பு அமைந்திருந்தது. இதற்கான ஆவணமும் வரலாற்றின் பக்கங்களில் இணைக்கப்பெற்றிருக்கிறது.

திருச்செங்கட்டாங்குடியில் உள்ள உத்தராபதீசுவரர் ஆலயம் சிறுத்தொண்டர் வரலாற்றோடு தொடர்புடையது. இந்த ஆலயத்தில் மகாமண்டபத்தில் அமைந்த ஒரு கல்வெட்டு மூன்றாம் குலோத்துங்கனின் பத்தாம் ஆட்சியாண்டைச் சேர்ந்தது. பொ.நூ. 1188-ஆம் ஆண்டைச் சேர்ந்தது. இந்தக் கல்வெட்டு, கோயிலுக்குக் கொடுக்கப்பட்ட நிலங்களில் இராசேந்திர சோழ ஆசாரியனுக்கு முன்பே காணியாக இருந்தமையைக் குறிப்பிடுகிறது. இந்தக் குறையைக் கேட்ட இராசேந்திர கலாதராயன் என்னும் அதிகாரி, அரசனிடம் காணியையும் மாற்றி கோயிலில் கல்வெட்டாகவும் பொறிக்க வேண்டுமென்றும் கூற, அரசன் மீண்டும் காணியை மாற்ற வரியிலிடுவாருக்கு உத்தரவிட்டமையைக் குறிப்பிடுகிறது. கோனேரின்மை கொண்டான் என்று குறிப்பிடுவதனால், இது அரசனின் நேரடி ஆணை என்பது தெளிவாக விளங்குகிறது.

இராஜேந்திர சோழ ஆசாரியனுக்கு முன்பு காணியாய் வருமென்றும் இக்காணி பழையபடியே இவனுக்கு காணியாகப் பெறவும் இப்படிக்கு இக்கோயிலிலே கல்வெட்டவும் பெற வேணுமென்று இராஜேந்திர கலாதராயன் நமக்குச் சொன்னமையில் இப்படிச் செய்யக் கடவதாக .. கணக்கிலிட்டுக் கொள்ளக் கடவர்களாக வரிக்கூறு செய்வார்களுக்கு சொன்னோம்...

என்பது கல்வெட்டு வரிகள்.

கொடுத்த காணி ஏற்கனவே ஒரு தனி நபரின் காணியாக இருந்தமை கண்டு அதிகாரி அரசனுக்குச் சொல்வதும், அரசன் உடனடியாக அதனை மாற்றியளிக்க ஆணையிடுவதும் பண்டைக் காலத்து ஆட்சிமுறையின் சிறப்பை விளக்குவதாகும். அதைக் கணக்கில் மாற்றுவதோடு பொதுவாகக் கல்வெட்டிலும் செதுக்கிவைத்து அனைவரும் அறியும்படி வைத்த ஏற்பாடும் புகழத்தக்கதாகும்.

இப்படி அரசால் நேர்ந்த பிழைகளை உடனுக்குடன் தீர்த்துவைக்கும் அரசாங்கம் ஏற்பட்டால் பொற்காலம் என்பது வேறில்லை என்கின்றன வரலாற்றின் வண்ணங்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : நன்கொடை கோயில் தமிழர் பண்பாடு பெயர் மாற்றம் ராஜேந்திர சோழன் நிலம் அரசன்

More from the section

46. ஊரழிந்து ஆவணங்கள் அழிந்தால்..
45. பண்டைய ஆவணங்கள்
44. முன்னோர் வாங்கிய கடன்
43. ஊரைக் காக்கும் உயரிய எண்ணம்
42. விளையினும் கெடினும்..