சனிக்கிழமை 21 செப்டம்பர் 2019

34. சொந்த செலவில் அணை

By முனைவர் க. சங்கரநாராயணன்| Published: 14th May 2019 10:00 AM

 

கட்டுவதோ அல்லது வசதி செய்து தருவதோ, மக்களுக்குப் பயன்படும் பொதுச்சொத்துகளை அரசாங்கம் மட்டுமே செய்வது இன்று வழக்கமாகி இருக்கிறது. தனியார் பங்களிப்பு என்று இருந்தாலும்கூட அதில் லாபநோக்கோடு மட்டுமே அத்தகைய பங்களிப்புகள் வழங்கப்பெறுகின்றன. தலைவர்களோ அல்லது மற்றவர்களோ ஏதாவது பொதுவாகச் செய்தாலும், அது அரசியல் நோக்குடனோ அல்லது வரிச்சலுகை வேண்டியோ செய்யப்பெறுகிறது. ஆனால் வரலாற்றின் பக்கங்கள் மாறுபட்ட காட்சியைக் காட்டுகின்றன. அறத்துக்காகத் தன் சொந்த செலவிலிருந்து பொதுச்சேவை செய்த காட்சிகள் அந்தப் பக்கங்களில் உள்ளது.

ஈரோடு மாவட்டம் காங்கேயம் அருகிலுள்ள நத்தக்காடையூரில் செயங்கொண்ட நாதர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் இராமமகாதேவரின் கல்வெட்டொன்று அமைந்துள்ளது. இதன் காலம் பொ.நூ. 1621 ஆகும். இந்தக் கல்வெட்டு ஒரு மாறுபட்ட தகவலைத் தருகிறது. பழையகோட்டை பட்டக்காரரான விசுவநாத சர்க்கரை உத்தமகாமிண்ட மன்றாடியார் என்னும் பட்டக்காரர் தன்னுடைய சொந்த செலவில் அணை கட்டி, அதனால் உண்டாகும் விளைச்சலோடு கூடிய நிலத்தைக் கோயிலுக்குத் தானமாக அளித்த செய்தி இந்தக் கல்வெட்டில் பதிவாகியுள்ளது. இந்த அணை நொய்யல் ஆற்றில் கட்டப்பட்டது. புன்செய் நிலங்களில் இடைப்பட்ட நன்செய் நிலங்கள் தரப்பட்டன. புலத்தலைவராக விளங்கினாலும் இந்த அறத்தைப் பொதுச்சொத்திலிருந்து எடுக்காமல் தனது சொந்த செலவில் அறமாகக் கட்டுவித்தார் அந்தப் பெருந்தகை. இதற்கான ஆவணமாக இந்தக் கல்வெட்டு திகழ்கிறது.

காங்கய நாட்டில் காரையூரில் வெள்ளாளப்பயிறர்களில் நல்லதம்பிக் கவுண்டர் விசுவநாத சக்கரை உத்தமகாமிண்ட மன்றாடியாரவர்கள் தம்முடைய வெற்புவாசிச் சொத்திலே காஞ்சி நதித் தீரத்தில் நவப்பிறதிட்டையாக அணையும் வாய்க்காலும் கண்டு மேற்கு சக்கரை பாளையம் கிழக்கு பெரிய காரையூரிலிருந்து ஆற்றுக்குப் போகிற இட்டேரு மட்டும் வடக்கு ஆற்றழிவும் தெற்கு கோயில் கரையழிவும் இதுவெல்லாம் சுவாமி செயங்கொண்ட நாத தம்பிரானாருக்கு பூறுவம் நடந்து வந்தது, யிந்தப் புஞ்சையில் நஞ்சை நிலங்கண்டதெல்லாம் சுவாமிக்கு விட்டோம்..

என்பது கல்வெட்டு வரிகள்.

வெற்புவாசிச் சொத்து என்பது பாகம் பிரித்து வந்த சொத்தாக இருக்கலாம். இதைக் கொண்டு காஞ்சி நதியான நொய்யல் ஆற்றில் அவர் அணையும் வாய்க்காலும் எடுப்பித்து, கோயிலுக்கு நிலமளித்ததோடு ஊரார் பயன்பெறவும் செய்த கொடை வியப்பைத் தருகிறது.

இன்றும் ஊர்த் தலைவர்கள், சட்டசபை உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர்கள், அமைச்சர்கள் என்று பலதரப்பட்ட தலைவர்களும் பல்வேறு வணிகத் தலைவர்களும் இருக்கிறார்கள். இப்படி உலகுக்கு நன்மை பயக்கும் அறச்செயல்களைத் தமது சொந்த செலவிலிருந்து செய்துகொடுத்தால் அறமும் வளரும், உலகும் செழிக்கும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : பொதுச் சொத்து அரசாங்கம் தனியார் பங்களிப்பு

More from the section

46. ஊரழிந்து ஆவணங்கள் அழிந்தால்..
45. பண்டைய ஆவணங்கள்
44. முன்னோர் வாங்கிய கடன்
43. ஊரைக் காக்கும் உயரிய எண்ணம்
42. விளையினும் கெடினும்..