வரலாற்றின் வண்ணங்கள்

20. பஞ்ச காலத்தில் கோயில் கடன்

முனைவர் க. சங்கராநாராயணன்

பொதுவாக, வறட்சி போன்ற காலங்களில் மக்களின் துயரங்கள் சொல்லி மாளாது. ஆட்சியாளர்கள் அவற்றுக்குச் செய்யும் மாற்று ஏற்பாடுகள் எவ்வளவு தூரம் பயனளிக்கும் என்பதை நேரடியாகப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். இந்நிலையில், உள்ளூர் மன்றத்து ஆட்சியாளர்கள் மேற்கொண்ட சில செயல்கள் வரலாற்றில் வண்ணங்களாகப் பதிவாகியுள்ளன. இவை பழங்காலத்தவை என்றாலும், அவற்றை உள்ளார்ந்து பார்த்தால் இன்றைக்கும் பொருந்தக்கூடிய திட்டங்கள் ஏதேனும் கிடைக்கலாம்.

ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேச்சுரத்தில் உள்ள ஒரு கல்வெட்டு, இரண்டாம் இராசராசனின் காலத்தைச் சேர்ந்தது. அதாவது, பொ.நூ. 1152-ஐ சேர்ந்தது. ஆனைமேல் துஞ்சிய விசய இராசேந்திரனான முதலாம் இராசாதிராசனின் மூன்றாம் ஆட்சியாண்டில், அதாவது பொ.நூ. 1021-இல் நிகழ்ந்த ஒரு நிகழ்வைக் குறிக்கிறது. அவனுடைய ஆறாம் ஆட்சியாண்டில் அவ்வூர் சபையோர் கூடினர். அப்போது கால தோஷத்தில், அதாவது மழையின்மை போன்ற ஏதோவொரு காரணத்தால் பயிரிட செல்வம் இல்லாது போயிற்று. அதுகண்ட ஊர்மக்கள், கோயில் ஸ்ரீபண்டாரத்திலிருந்து பொன் பெற்று பயிரிடக் கோரினர். அதன்படி, கோயிலில் உள்ள பல்வேறு வகைப் பொன்னால் ஆன பொருள்கள் ஆயிரத்து பதினோரு கழஞ்சும், வெள்ளி நானூற்று அறுபத்து நாலு பலமும் வாங்கி அதன்மூலம், அவர்கள் தங்கள் தொழிலைப் பெருக்கினர்.

இரண்டாம் இராசராசனின் ஆறாம் ஆட்சியாண்டில், அதன் வட்டி முதலானவற்றைச் செலுத்த நிலையாக ஒரு ஏற்பாடாக ஊர் நிலத்தில் சில பகுதிகளைக் கோயிலுக்கு அளித்தனர். இதற்கான நிவந்தமே அந்தக் கல்வெட்டில் எழுதப்பெற்றுள்ளது.

ஆனைமேற்துஞ்சி அருளின பெருமாள் விஜயராஜேந்த்ர தேவற்கு யாண்டு மூன்றாவது காலதோஷமுண்டாய் ஊர் பயிரேற்றுகைக்கு போனகப்படி நெல்விச்சும் நெல்லுங் கொள்கைக்கும் குலைகள் அட்டுகைக்கும் குரம்புகள் கொள்கைக்கும் இத்தேவர் ஸ்ரீபண்டாரத்து நாங்கள் வாங்கின பொன்.........

என்பது கல்வெட்டு வரிகள்.

ஆக, பஞ்ச காலத்தில் கோயில் பண்டாரத்தில் பொன் பெற்று அதன் மூலம் பயிர் முதலியவை செய்திருப்பது கண்கூடு. ஆகவே, இதுபோன்ற இயற்கைக்கேட்டினால் ஏதாவது குறைகள் நேரும்போது, ஆட்சியாளர்கள் மட்டுமின்றி பொதுத் துறை நிறுவனங்களிடமிருந்து ஏதேனும் கடன் பெற்று மீண்ட பிறகு அதற்கான இழப்பீட்டை வட்டியோடு அளிக்கும் திட்டம் வரலாற்றில் இடம்பெற்றிருப்பது தெளிவு.

இதில் கவனிக்க வேண்டிய பொருட்கள் இரண்டு. ஏறத்தாழ 130 வருடங்களுக்குப் பிறகும் அதற்கான வட்டிக்காக நிலங்களை ஒதுக்கும் அளவுக்கு நேர்மையான மக்களின் செயல் ஒன்று. உலகோர் துயர்தீர கோயில் செல்வத்தைப் பங்கிட்ட நிர்வாகத்தினரின் செயல் மற்றொன்று. இதனைப் போலவே நேர்மையுடன் மக்களும் காக்கும் எண்ணத்துடன் நிர்வாகிகளும் செயல்பட்டால், பஞ்சம் போன்ற காலத்திலும் மக்கள் கஷ்டப்படமாட்டார்கள் என்பதுதான் வரலாறு காட்டும் வண்ணம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் ஒருவா் பலி; 13 போ் காயம்

அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா

சேலம் நீதிமன்றத்தில் சட்டக் கல்லூரி மாணவா்கள் தூய்மைப் பணி

SCROLL FOR NEXT