14. அபராதம் வசூலிக்காவிட்டால்..

உத்திரமேரூர் மிகப் புகழ்பெற்ற ஓர் ஊர். உத்திரமேருச்சதுர்வேதிமங்கலம் என்னும் பெயரில் எட்டாம் நூற்றாண்டிலிருந்து புகழ்பெற்றது. அவ்வூரில்தான் உலகப் புகழ்பெற்ற குடவோலை முறைக் கல்வெட்டு விளங்குவது..
14. அபராதம் வசூலிக்காவிட்டால்..

பொதுவாக, அரசாங்கத்தின் ஆட்சிமன்றங்களில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு ஆட்சிக் காலம் உண்டு. அந்த ஆட்சிக் காலத்தில் அவர்கள் செயல் இலக்கை முடித்தாலும் தவறினாலும் அதன் பிறகு கேள்வியில்லை. இதுதான் இப்போதைய நடைமுறை. அவரவர் ஆட்சிக் காலத்தில் வசூலிக்க வேண்டிய அபராதம் முதலியவற்றை வசூலிக்காவிடினும், பெரும்பாலும் பிறகு வந்தவர்கள் கவனிப்பார்கள் அல்லது முன்பு ஆட்சி செய்தோர் அதற்குப் பொறுப்பேற்பதில்லை. இதற்கு ஏதேனும் வரலாற்றின் பக்கங்களில் வண்ணம் இருக்கிறதா என்று பார்ப்போம்.

உத்திரமேரூர் மிகப் புகழ்பெற்ற ஓர் ஊர். உத்திரமேருச்சதுர்வேதிமங்கலம் என்னும் பெயரில் எட்டாம் நூற்றாண்டிலிருந்து புகழ்பெற்றது. அவ்வூரில்தான் உலகப் புகழ்பெற்ற குடவோலை முறைக் கல்வெட்டு விளங்குவதும் தெரிந்ததே. அவ்வூரில் இயங்கிய அந்தணர்களின் ஆட்சிமன்றமான சபைக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க பல்வேறு தகுதியையும், குடவோலை முறையையும் விளக்கும் கல்வெட்டு இவ்வூரில்தான் அமைந்திருக்கிறது.

பல்வேறு வாரியங்களாகப் பிரித்து அந்த வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தலைக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. அந்தக் கல்வெட்டு முதலாம் பராந்தகனின் காலத்தைச் சேர்ந்தது. முதலாம் பராந்தகனின் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் வடபகுதிகளைக் கைப்பற்றிய வேந்தன் இராட்டிரகூடனான மூன்றாம் கன்னரதேவன் ஆவான். இவன் ஆட்சிக் காலத்திலும் வடதமிழகத்தில் பல்வேறு அறச்செயல்கள் நிகழ்ந்தேறின. அவனுடைய கல்வெட்டும் அவ்வூரில் உள்ள வைகுண்டப் பெருமாள் கோயிலில் இடம்பெற்றுள்ளது.

இந்தக் கல்வெட்டு ஒரு சுவாரஸ்யமான தகவலைத் தருகிறது. அரசனுடைய 25-ஆம் ஆட்சியாண்டில், அதாவது பொ.நூ. 964-65-இல் அவ்வூர் பெருங்குறி சபையோர், ஊர் பேரம்பலத்தின் முன்பிருந்த தெற்றியில், அதாவது திண்ணையில் கூடினர். அவர்கள் தங்களுக்குள் ஒரு விவஸ்தையை, அதாவது ஒழுங்குமுறையை ஏற்படுத்தினர். அவ்வூரில் மகாசபையினரால் தண்டனை விதிக்கப்பெற்ற துஷ்டர்கள், அதாவது தீயவர்களிடமிருந்து தண்டத் தொகையைப் பெறுவது கிராமகாரியம் செய்பவர்களான உறுப்பினர்களே மேற்கொள்ள வேண்டும் என்றும், அவ்விதம் தீர்க்கமுடியாது போனால் சபையோரைக் கொண்டே தண்டத்தை இறுத்துக் கொடுப்பதாகவும் சபையில் இருந்துகொண்டே சபையோருக்கு எதிராகப் பேசிய தனியாள்களையும் சபையின் பணிகொண்ட வாரியப் பெருமக்கள், அவர்தம் அடிபணியாளர், மத்யஸ்தர்கள் அதாவது பொதுக்கணக்கரைப் போன்றோர், பாடிகாப்பார் அதாவது காவல் செய்வார் ஆகியோருக்கும் தண்டம் நேருங்கால், கிராமகாரியம் செய்யும் பெருமக்களே தண்டத்தை இறுத்துக் கொடுக்க வேண்டும் என்றும், தீராதபோது சபையோரைக் கொண்டு தண்டத்தை இறுத்துக் கொடுக்கச் செய்ய வேண்டும் என்றும், இவ்விதம் நிறைவேற்றாது போனால் அந்தக் கிராமகாரியம் செய்பவர்களே தண்டத்தொகையை ஏற்றுக் கட்ட வேண்டும் என்றும் ஒரு கட்டளையை நிறைவேற்றினர். இதற்கு மத்யஸ்தனாக சிவதாஸன் மங்களாதித்யன் என்பான் கையெழுத்திட்டான்.

அந்தக் கல்வெட்டு வரிகள்..

நம்மூர் மஹாஸபையோமால் தண்டிப்புண்ட துஷ்டர்கள் தண்டமிட்டன உள்ளந தண்டம் அவ்வாண்டு க்ராமகார்யஞ் செய்யும் பெருமக்களே ஸபையோமைக் கொண்டு தீர்வாராகவும் தீர்க்கமாட்டாதன ஸபையோமையே கொண்டு தண்டங்கள் இறுத்துக் குடுப்பாராகவும் ஸபையினின்று ஸபாமாற்றம் பேசி பணித்த தனிபுர்ஷரையும் ஸபையோம் பணியால் செய்த வாரியபெருமக்களையும் அடிக்கீழ் நிற்பாரையும் மத்யஸ்தர்களையும் பாடிகாப்பார்களையும் உள்ளிட்ட ஸபைப்பணி செய்தார் எப்பேர்பட்டாரையும் தண்டமிட்டன உள்ளந தண்டமிட்ட அவ்வாண்டுகள் க்ராமகார்யஞ்செய்தாரை மெய்வேறுவகை செய்து காணந்தண்டமிடப்பெறுவாராகவும்...

ஆக, பணியில் இருந்து செய்தோர் அபராதத்தை வசூலிக்காமல் இருந்தால், அவர்களுக்குப் பிறகும் தண்டனை அளிக்கவும் ஊரார் கூடி ஓர் ஒழுங்குமுறையை உருவாக்கியது தெளிவாகிறது.

இப்படி ஆட்சிக் காலத்தில் செய்யத் தவறிய பணிகளுக்குப் பிறகு தண்டனையாக அபராதத்தை விதித்தால், பணிகள் சிறப்பாக நடக்குமல்லவா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com