42. விளையினும் கெடினும்..

ஊர் அணையைச் சரி செய்ய ஊர் அவையினர் கோயிலில் கடன் பெறுவதும், அதனைத் திருப்பச் செலுத்த செய்த உறுதிமொழியும் வியக்கவைக்கிறது.
42. விளையினும் கெடினும்..

எவரிடமாவது கடன் பெற்றால் அதைத் திருப்பித்தரும் எண்ணம் பெரிய நற்குணம். தனிமனிதர்கள் மட்டுமின்றி அமைப்புகளும் கடன் பெறுகின்றன. இன்றும் இவ்விதம் வங்கிகளிடமிருந்து கடன்பெற்று வாராக்கடனாக பலவும் இருப்பதைக் காணலாம். ஆனால் பண்டைய நாளில் அவ்விதம் இருக்கவில்லை. முந்தைய கட்டுரைகளில், தனியான குடியானவர்கள் நொடித்துப்போனால் கடனுக்கான சலுகைகள் அளிக்கப்பட்டதைக் கண்டோம். அமைப்பு செய்து தரும் உறுதிமொழியை ஒரு கல்வெட்டு தருகிறது.

ஈரோடு, பெருந்துறையை அடுத்துள்ள குன்னத்தூரில் அமைந்துள்ள லட்சுமிநாராயணப் பெருமாள் கோயிலில் உள்ள கல்வெட்டொன்று, கொங்கு பாண்டியனான சுந்தரபாண்டியனின் காலத்தைச் சேர்ந்தது. பொ.நூ. 1312-ஐ சேர்ந்த இந்தக் கல்வெட்டு, முகுந்தனூர் என்று பெயருடைய விக்கிரமசோழ சதுர்வேதிமங்கலத்து சபையார், அதாவது ஊராளும் மன்றத்தார் செய்த உறுதிமொழி பதிவாகியிருக்கிறது.    

அவ்வூரணைக்குக் கல் வைத்து சரிசெய்ய பொருள் தேவையாக இருந்தது. ஆகவே ஊர்க்கோயில் பண்டாரத்திலிருந்து இருநூறு பணம் பெற்றனர். அதற்கு ஈடாக பதிமூன்று கலம் நெல்லும் இருபத்தாறு பணமும் ஆண்டுதோறும் தந்து திருவாதிரையில் தீர்த்தமாடும் நாளில் பக்தர்களுக்கு அமுது செய்விப்பதாக உறுதிமொழி தந்தார்கள். அப்படி உறுதிமொழி தரும்போது ஐப்பசியில் ஒருவேளை விளைச்சல் ஒன்றும் பாதியுமாகப் போனாலும் விளையாது போனாலும் ஊரில் கேடு விளைந்தாலும் கொடுப்பதாக உறுதி பூண்ட செய்தி கல்வெட்டில் பதிவாகியுள்ளது.

முகுந்தனூரான விக்ரமசோழசதுர்வேதிமங்கலத்து சபையோம் பிடிபாடு குடுத்தபடியாவது எங்களூரணைக்கு கல்லிட இந்நாயனார் ஸ்ரீபண்டாரத்தில் வாங்கின 200 இப்பணமிருநூற்றுக்கும் உபையமாக நாங்கள் ஆண்டொன்றுக்கு இறுக்கும் நெல்லு பதின்முக்கலமும் பணம் இறுபத்தாறும் வாங்கிக் கொண்டு இந்நாயனார் திருநாள் திருநக்ஷத்ரமான திருவாதிரையில் தீர்த்தம் கொண்டாடி பதினாறு வைஷ்ணவர்களுக்கு அமுது செய்யப்பண்ணுவிப்பார்களாகவும் இந்நெல்லும் பணமும் குடுக்குமிடத்து அற்பசி மாஸத்திலே ஒன்று பாதியாக விளையிலும் விளையாதொழியிலும் ஊரிற்கேடு போனாலுமளப்போமாகவும்...

என்பது கல்வெட்டு வரிகள்.

ஊர் அணையைச் சரி செய்ய ஊர் அவையினர் கோயிலில் கடன் பெறுவதும், அதனைத் திருப்பச் செலுத்த செய்த உறுதிமொழியும் வியக்கவைக்கிறது. விளையாமல் போனாலும் வட்டியைக் கொடுக்கும் அளவுக்கு முன்னேற்பாடுகளைச் செய்தாலேயொழிய இத்தகைய உறுதிமொழியைத் தரமுடியாது. இன்றும் வாராக்கடன் வைக்கும் நிறுவனங்கள் இதைப் பின்பற்றுமா என்பதே வரலாற்றின் வண்ணத்தின் கேள்வி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com