40. முடிசார்ந்த மன்னரும்..

40. முடிசார்ந்த மன்னரும்..

ஒரு மன்னர், குழந்தை பிறந்த பிறகு தன் குழந்தைக்கு அரச சலுகை கேட்டு விண்ணப்பிக்கும் சூழ்நிலையில் அவர் மனம் எப்படி இருந்திருக்கும்.

காலம் ஒரு மாறுபட்ட சக்கரம். பாலைவனத்தைக் கடலாக்கும். கடலைக் காடாக்கும். அதன் போக்கில் எது எப்படி நிகழும் என்பதை எவராலும் உய்த்தறிய இயலாது. இத்தகைய காலத்தின் போக்கு, முடிசார்ந்த மன்னரையும் நிலையிறங்க வைக்கும் என்பது வரலாறு காட்டும் பாடம். இத்தகைய செய்தியொன்று சேதுபதி செப்பேட்டில் இருந்து தெரியவருகிறது.

சேதுபதி மன்னர்கள் வீரத்திலும் ஆட்சியிலும் சிறப்பென வீற்றிருந்து செங்கோல் செலுத்தியவர்கள். அவர்களுடைய விருதுப் பெயர்களே அவர்களுடைய பேராட்சியைப் பறை சாற்றுகின்றன. எந்த அரச வம்சமானாலும் இறுதியானவரின் ஆட்சிக் காலம் துயரம் மிகுந்ததாகவே இருக்கும். அத்தகைய மன்னராக இருந்தவர் முத்து விஜயரகுநாத முத்து சேதுபதி அவர்கள். அவரை ஆங்கிலேயர் முன்னறிவிப்பின்றி நீக்கி, 07.05.1795-இல் கைது செய்து சென்னையில் கோட்டையில் வைத்திருந்தனர். அவருடன் இரண்டாவது மனைவி வீரலட்சுமியும் தங்கியிருந்தார். எட்டு வருடங்கள் கழித்து சேதுபதியின் தமக்கையார் மங்களேசுவரியை ஆங்கிலேயர் ஜமீன்தாரிணியாக நியமித்தனர்.

இந்தச் செப்பேடு, பொ.நூ. 1808-இல் வெளியிடப்பட்டது. இந்தச் செப்பேட்டில், தனது இரண்டாவது மனைவியான வீரலட்சுமிக்குப் பிறக்கும் குழந்தைக்கு அரசாங்க சலுகைகள் அளிக்கக் கோரி அவர் எழுதிய பரிந்துரை இடம்பெற்றுள்ளது. இதை எழுதிய அடுத்த ஆண்டு மன்னர் இயற்கை எய்தினார். இந்தச் சூழ்நிலையில் தனது குழந்தைக்காக அவர் பரிந்துரை செய்த விதம் சற்றே மனத்தைப் பிசைகிறது.

கர்ப்பவதியாக இருக்கிற என் பாரியா வீரலட்சுமி நாச்சியாருக்கு குழந்தை பிறந்தவுடன் இராமநாதபுர ஜமீனுக்குக் கொண்டுபோய் தமக்கை மங்களேசுவரி நாச்சியாரிடம் ஒப்புவித்து கவர்மெண்டு பென்சனும் ஜெமீனில் அலவென்சும் சந்ததி பரம்பரையாய் கொடுத்து பாதுகாத்து வரவும்..

என்பது செப்பேட்டு வாசகம்.

ஒரு மன்னர், குழந்தை பிறந்த பிறகு தன் குழந்தைக்கு அரச சலுகை கேட்டு விண்ணப்பிக்கும் சூழ்நிலையில் அவர் மனம் எப்படி இருந்திருக்கும். குழந்தையைத் தமக்கையிடம் ஒப்புவிக்கக் கூறியது, தமக்கையின் மீது வைத்த நம்பிக்கையைக் காட்டுகிறது. இந்தப் பரிந்துரைக்குப் பின்னும் அரசிக்கு எந்த உதவியும் கிடைக்காததால்,  மன்னர் இயற்கை எய்திய பின்னர் அவர் மீண்டும் ராமநாதபுரத்தை அடைந்தார்.

ஆக, மன்னராயினும் காலத்தின் கணக்கில் என்ன நிலை அடைவர் என்பதை எவராலும் அறியமுடியாது. இதனை அறிந்து, பதவியில் இருப்போரும் அதிகாரம் பெற்றோரும் காலத்தின் வலிமையை உணர்ந்து, புகழ் நிலைக்கும்படி மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்பதுதான் வரலாற்றின் வண்ணம் தரும் பாடம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com