வியாழக்கிழமை 22 ஆகஸ்ட் 2019

39. ஊர்காத்து இறந்தால்..

By முனைவர் க. சங்கரநாராயணன்| Published: 11th June 2019 10:00 AM

 

காவல் தொழிலில் இருப்போருக்கு கடும் வாழ்க்கைதான். பிறரைக் காவல் காப்பதிலும் எதிரிகளை எதிர்த்துப் போராடுவதிலும் வாழ்வின் பெரும்பகுதி சென்றுவிடும். காவல் காக்கும்போது இறக்க நேரிட்டாலோ, அரசு வழங்கும் ஏதாவது உதவித் தொகைதான். ஊராரோ தமக்கென்ன என்பதுபோல வருத்தம் தெரிவித்துவிட்டு போய்விடுவார்கள். ஆனால் ஊருக்காக உயிரை நல்கும் அவர்களுக்கு உண்மையில் ஏதாவது செய்யக் கடமைப்பட்டவர்கள் ஊரார்களே அல்லவா. இதனை விளக்கும் கல்வெட்டொன்றும் தருமபுரி அருகிலுள்ள பரிகம் என்னும் ஊரில் அமைந்துள்ளது. அவ்வூருக்குத் தெற்கிலுள்ள கொல்லையில் அமைந்துள்ள தனிக்கல், இதற்கானத் தகவலைக் கொண்டுள்ளது.

இராசேந்திர சோழனின் பத்தொன்பதாம் ஆட்சியாண்டைச் சேர்ந்த இந்தக் கல்வெட்டு பொ.நூ.1031-ஐ சேர்ந்தது. பந்ந நாட்டைச் சேர்ந்த வாணபுரத்து ஊரைச் சேர்ந்த வீரசோழ வாணவரையனான மாசன் என்பவனைப் பற்றிய தகவலைத் தருவது. இவன் வணிகருள் சிறந்தார் பெறும் காவிதிப் பட்டத்தையும் பெற்றிருந்தான். அவன், காலி அதாவது ஆநிரைகளை எதிரிகள் கவர்ந்துசெல்ல அவற்றை மீட்டு இறந்துபட்டான். இதைக் கண்ட ஊரார் அவனுக்கு, நீத்தார் பட்டியாக அதாவது இறந்தவர்களுக்கு வழங்கும் நிலக்கொடையை மேற்கொண்டதாகக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

பந்ந னாட்டு வாணபுரத்தூராளி காவிதி வீரசோழ வாணவரையந்நான மாசந் பவகத்துக் காலி பாஞ்சு போகா நிற்க காலி மீட்டு பட்டாந். இவநுக்கு ஊரும் ஊராளிகளும் சேதுகொடுத்த பரிசாவது ஊருக்கு தெந்நருகே தெந்நிட்டேரிக்கு கீழ் பாடைத்தாவநேத்தம் பட்டி இட்டுக் கொடுத்தோம் ஊரும் ஊராளிகளும் இறையிலியாக..

என்பது கல்வெட்டு வரிகள்.

பன்ன நாட்டைச் சேர்ந்த காவிதியான வீரசோழ வாணவரையன் என்ற பெயருடைய மாசன் ஆநிரைகளை மீட்டு உயிர் துறந்தான். அவனுக்காக ஊரும் அதாவது ஊர் மன்றமும் ஊராளிகளும் சேர்ந்து ஊருக்குத் தெற்கே தென்னிட்டேரிக்குக் கிழக்கே பாடைத்தாவனேத்தம்பட்டி என்ற நிலத்தை இறையிலியாக அதாவது வரியில்லாமல் கொடுத்தனர் என்பது பொருள்.

எத்தகைய பாராட்டத்தக்க செய்கை. ஊரைக் காப்பாற்ற உயிர் துறந்த ஒருவனுக்கு ஊராரே இயைந்து நிலக்கொடை அளிக்கும் இந்தச் செயல் இப்போதும் இருந்தால் காவல் துறைக்கு தொய்வேது. தனக்குப் பிறகு தனது குடும்பத்தைக் காப்பாற்ற ஊரார் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையே அவர்களுக்குப் புதுவேகத்தைத் தராதா என்று கேட்பதுபோலக் கேட்கிறது இந்த வரலாற்றின் வண்ணம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

46. ஊரழிந்து ஆவணங்கள் அழிந்தால்..
45. பண்டைய ஆவணங்கள்
44. முன்னோர் வாங்கிய கடன்
43. ஊரைக் காக்கும் உயரிய எண்ணம்
42. விளையினும் கெடினும்..