43. ஊரைக் காக்கும் உயரிய எண்ணம்

கோயிலுக்குக் கொடுத்தமை அவர்களுடைய நம்பிக்கையைக் காட்டி நின்றாலும், நோயும் ஊறுகளும் நேர்ந்தால் ஊர் ஒன்றுபட்டு ஏதோ தங்களுக்குத் தெரிந்ததைச் செய்யவேண்டி செயல்பட்டு நின்ற செய்திதான் நமக்குப் பாடம்.
43. ஊரைக் காக்கும் உயரிய எண்ணம்

ஊரில் ஏதாவது தொடர்ந்து இடர்ப்பாடுகள் ஏற்பட்டு வந்தால் அதைத் தீர்ப்பதற்காக ஊர் கூடி முடிவெடுப்பது பண்டைக்கால வழக்கம். இன்று ஊர்கூடுவது என்பதெல்லாம் கிராமத்து அளவில் மட்டுமே நிற்கிறது. ஊருக்குத் தொடர்ந்து இடர்ப்பாடு ஏற்படுவதால் அதற்கு மாற்றாக இறைவனுக்குச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் பண்டைக் காலத்தில் பொதுவாகக் காணப்பெறுவது. அத்தகையதோர் சம்பவமும் வரலாற்றின் வண்ணத்தில் உண்டு.

திருவலஞ்சுழி - விநாயகப்பெருமான் வீற்றிருக்கக்கூடிய திருத்தலம். இங்கு மூன்றாம் இராசராசனின் 19-ஆம் ஆட்சியாண்டில், அதாவது பொ.நூ. 1235-இல் நிகழ்ந்த ஒரு நிகழ்வை அவ்வூரிலுள்ள கபர்த்தீசுவரர் கோயில் கல்வெட்டொன்று தருகிறது. இராசேந்திரசோழ சதுர்வேதி மங்கலம் என்ற ஊரைச் சேர்ந்த பெருமக்கள் அவ்வூர் கோயில் திருமுற்றத்தே கூட்டமிட்டனர். ஊரில் தொடர்ந்து இடர்ப்பாடுகளும், பழிகளும் நோயும் வருவதைக் கண்டு, அவற்றிலிருந்து ஊரைக் காக்கவும் உலகுடைய பெருமாளான மன்னருக்கு உடல் நல்ல உறுதி பெறவும் வெற்றிபெறவும் என்ன செய்யலாம் என்று ஆலோசித்தனர். அப்போது அங்கிருக்கும் வெள்ளைப் பிள்ளையாருக்கு வரியில்லாமல் நிலத்தை நேர்ந்துவிடுவது என்ற முடிவை எடுத்தனர். இதற்கான ஆவணமாக இந்தக் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது.

நம்மூர் நெடுங்காலம் உமதாமங்கள் பட்டும் பழிபட்டும் நோவு பட்டும் வருகையாலே இக்கிராமத்துக்கு இரக்ஷாத்தமாகவும் உலகுடைய பெருமாள் திருமேனி கல்லியாண திருமேனி ஆகவும் விசையாத்தமாகவும் வெள்ளைப் பிள்ளையாருக்கு பூசைக்கும் திருப்பணிகாரத்துக்கும் உடலாக நம்மூரில் பலர் பக்கலிலும் விலைகொண்டு திருநாமத்துக்காணியாய் அனுபவித்து வருகிறநிலம்..

என்பது கல்வெட்டு வரிகள்.

ஆக, ஊர் நலம் பெற வேண்டுமென்று அனைவரும் கூடி கோயிலுக்குக் கொடை கொடுத்த செய்தி தெளிவாகிறது. கோயிலுக்குக் கொடுத்தமை அவர்களுடைய நம்பிக்கையைக் காட்டி நின்றாலும், நோயும் ஊறுகளும் நேர்ந்தால் ஊர் ஒன்றுபட்டு ஏதோ தங்களுக்குத் தெரிந்ததைச் செய்யவேண்டி செயல்பட்டு நின்ற செய்திதான் நமக்குப் பாடம். இன்று ஒவ்வொருவரும் தனிக்குடும்பமாகவே உணர்கிறோம். ஊர் ஒன்றுபட்டு வரும் உபாதைகளை எதிர்கொள்வதென்பது இனி நிகழுமா என்பதே கேள்வியாக இருக்கிறது. இத்தகைய நிலை மாற இந்த வண்ணம் வழிகாட்டுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com