10. கோயிலுக்கு விளக்கு

பண்டைக் காலத்தில், அரச குடும்பத்தோர் முதல் அன்றாடக் கூலி வரை, அனைவரும் நுந்தா விளக்கு எரிய, கோயில்களுக்குப் பல்வேறு நிவந்தங்களை வழங்கினர்.
10. கோயிலுக்கு விளக்கு

பொதுவாக, தீப ஒளியின் வெளிச்சத்தில் பிரகாசிக்கும் கோயிலின் அழகே தனிதான். ஆனால், துரதிருஷ்டவசமாக பல கோயில்கள் ஒரு விளக்குகூட இல்லாமல் பொலிவிழந்து கிடப்பதைக் காண முடிகிறது.

பண்டைக் காலத்தில், அரச குடும்பத்தோர் முதல் அன்றாடக் கூலி வரை, அனைவரும் நுந்தா விளக்கு எரிய, கோயில்களுக்குப் பல்வேறு நிவந்தங்களை வழங்கினர். பொன்னையும் ஆடுமாடுகளையும் மூலதனமாக வைத்து, அவற்றின் பொலிசை, அதாவது வட்டி கொண்டோ அல்லது கறவை மூலமாகவோ தினமும் கோயிலில் விளக்கு எரிக்கும் ஏற்பாட்டினைச் செய்திருந்தனர். இவ்விதமே, அக்காலத்தில் எல்லாக் கோயில்களும் விளக்கைப் பெற்றிருந்தன. பல்வேறு காரணங்களுக்காக இத்தகைய விளக்குகளைத் தானமாக அளித்திருந்தார்கள்.

இறைவனின் அருள் வேண்டியோ அல்லது போரில் வெற்றிபெற்றோ, அவர்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விளக்குக்கான தொகையை வைத்திருந்தனர். இத்தகைய காரணங்களில் சுவையான காரணம் ஒன்று வாலிகண்டாபுரம் கல்வெட்டில் பதிவாகியுள்ளது.

இந்தக் கல்வெட்டு குறிப்பிடும் இராசகேசரிவர்மன், இராசராச சோழனின் தந்தையான சுந்தரசோழனாக அடையாளம் காணப்பெற்றுள்ளான். அவனுடைய நாலாவது ஆட்சியாண்டில், தூங்கானையான் பிராந்தக வளநாடுடையான் என்பவனும் அவனுடைய மைத்துனனான வாணரையன் அரவிஞ்சன் இராசாதித்தன் என்பானும் கோழி பொருத்தினர். இது சேவல் சண்டையாகச் சிலர் கொள்கின்றனர். போட்டியில் ஈடுபட்ட இருவரில் இராசாதித்தன் தோற்றான். பிராந்தக வளநாடுடையான் வென்றான். வென்றவனுக்காக, தோற்ற இராசாதித்தன் அவன் நன்மை வேண்டி திருவாலீச்வரத்துப் பெருமானுக்கு விளக்கு ஏற்றுவதற்காக அவ்வூர் சங்கரப்பாடியாரான வணிகரிடத்தில் பொன் வைத்தான். இதற்கான ஆவணமாக இந்தக் கல்வெட்டு இடம்பெற்றுள்ளது.

கோவிராசகேசரிபன்மற்கு யாண்டு 4ஆவது மறவன் தூங்கானையான் பிராந்தக வளநாடுடையானும் இவன் மைத்துனன் வாணரையன் அரவிஞ்சன் இராசாதித்தனும் கோழிபொருத்தி அரவிஞ்சன் இராசாதித்தன் றோற்று பிராந்தவளநாடுடையானுக்காக திருவாலீச்வரத்து பரமேச்வரருக்கு வைய்த்த நொந்தாவிளக்கு ஒன்று..

என்பது கல்வெட்டு வரி.

ஆக, இருவரில் போட்டி போட்டுக்கொண்டு தோற்றவர், வென்றவரின் நன்மைக்காகக் கோயிலில் திருவிளக்க ஏற்ற வேண்டும் என்பது பணயமாக இருந்துள்ளது. எத்தகைய அழகிய பழக்கம். எவர் தோற்றாலும் வென்றாலும் இறைவனுக்கு ஒரு விளக்கு கிடைக்கும்.

இதனைப் போலவே, வேறு சில கல்வெட்டுகளிலும் மிகவும் சிறப்பான தகவல்கள் உண்டு. முதலாம் குலோத்துங்கனின் ஆட்சிக் காலத்தில் ஒரு சிறுவன் அரிவாளால் மரம் வெட்டும்போது, தவறுதலாக அக் கத்தி பட்டுச் சிறுமியொருத்தி இறந்துவிட, அதற்காக சிறுவனுக்குத் தண்டனையாக விளக்கேற்றும் கடமையை அளித்த செய்தியொன்றும் பெருமண்டூர் கல்வெட்டில் காணப்பெறுகிறது.

மூன்றாம் குலோத்துங்கனின் காலத்தில், தங்கள் நிலத்தில் மேய்ந்த எருமையை நில உரிமையாளர்கள் அடித்து விரட்ட முயன்றபோது அந்த எருமை இறந்துபோனது. அதற்கும் கழுவாயாக, விளக்கேற்றும் தண்டனை அளித்த செய்தி கீழையூர் கல்வெட்டில் பதிவாகியுள்ளது.

ஆக, போட்டியாக இருந்தாலும் அதற்குப் பணயமாக குற்றமாக இருந்தாலும், அதற்குத் தண்டனையாக இவ்விதம் கோயில்களுக்கு விளக்கேற்றுவதையும் மற்றைய திருப்பணிகளையும் தருவதை வைத்துப் பார்த்தால், இக்காலத்திலும் அறியாமல் செய்யும் தவறுகளுக்குத் தண்டனையாகவோ அல்லது போட்டிகளுக்கோ இத்தகைய பொதுப்பணிகளை வழங்கினால் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று தோன்றினால், உங்களுக்கும் வரலாற்றின் வண்ணம் தெளிவாகிவிட்டதென்றே பொருள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com